இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டம்.....? - Sri Lanka Muslim

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டம்…..?

Contributors

நன்றி -தாஹா முஸம்மில்-

கடந்த வாரம் தெஹிவளைப் பிரதேசத்தில் பல்லாண்டு காலமாக இயங்கிவந்த மூன்று பள்ளிவாசல்களில், அதான் சொல்வதோ, தொழுகை நடத்துவதோ கூடாது; அவை நிறுத்தப்பட வேண்டும் என்று போலீசார் காலக் கெடு விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்விடயத்தை ஜனாதிபதியிடம் எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து இப்படியான ஒரு தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப் படவில்லை என்பது தெளிவாயிற்று.

அப்படியானால், பொலிசாருக்கு இந்த உத்தரவை வழங்கியது யார்? அவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்தனரா? இதன் பின்னணியில் முஸ்லிகளுக்கு எதிரான சதித்திட்டம் ஏதாவது உள்ளதா? போன்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டும்.

இம்மூன்று பள்ளிகளில் ஒன்றான மஸ்ஜிதுல் ஷாபி டிசம்பர் 19, அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கின்றது.

மூன்று தசாப்த கால யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த அரசினால், முஸ்லிம்களுக்கு எதிராக முடுக்கிவிடப் பட்டுள்ள தொடர்ச்சியான வன்முறையை முறியடிக்க முடியாதா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

2011ம் ஆண்டு அனுராதபுரம் தர்காவில் ஆரம்பித்த பள்ளிவாசல்களை தாக்கி தகர்க்கும் இனவாத அலை முழு நாட்டையும் ஆட்கொள்ளுமோ என்று நினைக்கும் அளவுக்கு வியாபித்துள்ளது.

அனுராதபுரத்தைத் தொடர்ந்து தம்புள்ளை, குருநாகல், ஜெய்லானி, கொழும்பு கிராண்ட்பாஸ், மெகொட கொலன்னாவ, தெஹிவளை மற்றும் பல இடங்களில் பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. பல பள்ளிவாசல்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

இத்தாக்குதல்கள் அனைத்தும் போலீசாரும் பாதுகாப்புத் தரப்பினரும் பார்த்திருக்கவே அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இதனைத் தடுப்பதற்கோ அல்லது வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவோ இவர்கள் எந்த முயற்சியும் செய்யாது, பல சமயங்களில் வன்முறையாளர்களுக்கு உடந்தையாய் இருந்துள்ளனர் என்று நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தாக்குதல்களுக்கு பொது பாலா சேனா, சிங்கள ராவய மற்றும் ராவானா பலகாய போன்றன பின்னணியில் இருந்து செயல் படுகின்றன என்று குற்றம்சாட்டப்படுகின்றது.

போலீசார் பார்த்திருந்தும், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தும் அரசாங்கம் இது சம்பந்தமாக, உருப்படியான, எந்த ஒரு சட்ட நடவடிக்கையினையும் இதுவரை எடுக்காதிருப்பதானது, அரசின் ஆசீர்வாதத்துடன் தான் இவை இடம் பெறுகின்றனவோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். ஒரு சில நபர்களோஅல்லது இயக்கங்களோ சட்டத்தை தம் இஷ்டம்போல் கையில் எடுத்து, சிறுபான்மையினருக்கு எதிராக அடாவடித்தனம் புரிய, மனித உரிமை மீறல்களில் ஈடுபட அனுமதிப்பதானது, அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவே அமையும்.

Web Design by Srilanka Muslims Web Team