இலங்கை அரசியலை பரபரப்பாக்கிய மஹிந்த ரணில் சந்திப்பு - சந்திப்பின் பின்னணியில் நடந்தது என்ன..? - Sri Lanka Muslim

இலங்கை அரசியலை பரபரப்பாக்கிய மஹிந்த ரணில் சந்திப்பு – சந்திப்பின் பின்னணியில் நடந்தது என்ன..?

Contributors

ஸ்ரீலங்கா அரசியலை பரபரப்பாக்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பானது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில், அந்த சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரதமர் மஹிந்த மற்றும் ஐ.தே.க தலைவர் ரணில் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திட்டமிடப்பட்ட அரசியல் சந்திப்பொன்றல்ல என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் வழி உறவு முறை ஒருவரின் பிறந்த தின நிகழ்வை மையப்படுத்தியதாகவே உள்ளதாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியார் சிறந்தி ராஜபக்ஷவின் சகோதரர் நிஹாந்த விக்ரமசிங்க உட்பட அவரது குடும்பத்தாரும் கலந்துகொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பை அரசியல் ரீதியான சந்திப்பாக கருத முடியாது என்றும், தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா அரசியல் பரப்பில் பொருளாதார நெருக்கடி, கொரோனா தாக்கம், அதற்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டமை, அரசாங்கம் கடும் சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மஹிந்த ரணில் சந்திப்பானது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் ரணில் மஹிந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமையும் இதற்கான பிரதான காரணம் என்கின்றன தென்னிலங்கை அரசியல் தகவல்கள்.

முன்னதாக நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team