இலங்கை அரசு சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் ஏற்படுத்த தவறிவிட்டதா? » Sri Lanka Muslim

இலங்கை அரசு சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் ஏற்படுத்த தவறிவிட்டதா?

ranil

Contributors
author image

A.S.M. Javid

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வரையறைக்கு அப்பால் அரசியல் ஆதிக்கம் கொண்டதொரு நாடாகவே இன்றைய நிலையில் அது பயனித்துக் கொண்டிருக்கின்றதைக் காண முடிகின்றது. குறிப்பாக ஜனநாயக நலன்களோ அல்லது அவற்றின் சரத்துக்களோ மக்கள் எதிர்பார்த்தளவுக்கு இந்த அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்பட வில்லை என்பதனை தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அரசியல் முனைப்புக்களின் ஆதிக்கம் அல்லது அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை அதிகரித்துள்ளமையே இன்றைய அரசியல் குழறுபடிகளுக்கும், கருத்து மோதல்களுக்கும் வழிவகுத்துள்ளன. இதன் காரணமாக கடந்த சிலகாலமாக அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலையில் ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல முடியாத நிலைமைகளுக்கு உள்ளாகி அரசியல் வாதிகள் மட்டுமல்லாது மக்களும் ஒருவகையான குழப்ப நிலைமைகளுக்கு ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் காணப்பட்டன.

மேற்படி நிலைமைகளின் பிரதிபலிப்புக்களும், தாக்கங்களும் இலங்கையின் ஜனநாயக விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்டு சர்வாதிகார போக்குடைய ஜனநாயக ஆட்சி ஒன்றையே மக்கள் அவ்வப்போது கண்டு கொள்ள முடிந்துள்ளது. இந்த நிலைமைகள் இலங்கையின் அரசியலில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும்கூட தாக்கத்தினை ஏற்படுத்தி வீழ்ச்சிப்போக்கிற்கு செல்ல வழிவகுத்துள்ளது என்பதே யதார்த்தமான விடயங்களாக காண முடிகின்றது.

இந்த நாட்டில் கடந்த பலதஸாப்த காலமாக இடம் பெற்ற யுத்த சூழ் நிலைமைகள் காரணமாக மக்கள் தமது இயல்பு வாழ்வில் நிம்மதியற்ற நிலைமைகளுக்கு உள்ளாகி நாளாந்தம் அச்சத்துடன் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கும் வித்திட்டிருந்ததை மறந்துவிட முடியாது. அத்துடன் யுத்தத்தின் கோரத் தாண்டவத்தினால் தமது உடமைகளையும், பூர்வீகங்களையும் இழந்து பல இலட்சக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இடம் பெயரவேண்டிய ஒரு அவல நிலைமைகளை ஏற்படுத்தியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்த வகையில் இந்த நாட்டில் இடம் பெற்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக முற்றிலும் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாக வடகிழக்கு மக்கள் காணப்படுகின்றனர். ஒருசிலரின் திறணற்ற செயற்பாடுகளும், முனைப்புக்களும் மக்களை அபாயகரமான நிலைமைகளுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த மக்கள் ஆயுத போராட்டத்திற்குள் முடக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து தமது இயல்பு வாழ்வை தொலைத்தவர்களாக காணப்படுகின்றனர்;. இவ்வாறு பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் கடந்த காலங்களில் தாம் இழந்தவற்றை தற்போதைய சமாதான சூழ்நிலையில் ஓரளவாவது அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆவலுடனும், தேவைகளுடனுமேயே இருந்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புக்கள் விடயத்தில் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதில் நியாயங்கள் இருக்கின்ற நிலையில் அவற்றை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கங்கமும் சரியான முறையில் இனங்கண்டு கொள்ளாது அவர்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருந்து வருகின்றமை இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். தற்போதைய அரசாங்கத்தைக் கூட ஆட்சியில் நிலைதிருப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்புக்கள் என்பது முற்று முழுதாக வழங்கப்பட்டுள்மையை எவரும் மறுத்துவிட முடியாது. அந்தளவிற்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்தே வாக்குகளை வழங்கினர் எனலாம். ஆனால் முன்னைய அரசும்சரி தற்போதைய அரசும்சரி பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் விடயத்தில் துரோகத்தனங்களையே செய்துள்ளது என்பது மட்டும் கண்டு கொண்ட உண்மைகளாகும்.

பல்லின, பல்சமய மக்கள் வாழும் இந்த நாட்டில் கடந்தகால யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் அதற்கான சரியான அடித்தளங்களை தூரநோக்குடன் மேற்கொள்வதற்கு எவரும் முன்வரவில்லை. இந்த விடயம் பாரியதொரு குறையாகவே இன்று வரை இருந்து வருகின்றது. யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருப்பதுடன் அதனை செய்ய வேண்டிய ஏற்பாடுகளும்கூட சர்வதே மனித உரிமைகள் அமைப்பினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் சட்டதிட்டங்களும், சரத்துக்களும் தெளிவாக குறிப்பிடுகின்ற நிலையலும் அவை எதுவும் எதிர்பார்த்தளவு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வில்லை என்றே கூறலாம்.

இன்று வரை வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றனர். எவருமே இவர்களைக் கண்டு கொள்வதில்லை. சொன்னாலும் அவர்களுக்குப் பரிவதுமில்லை. இது இவ்வாறிருக்கையில் இந்த மக்களை மற்றொரு யுத்தம் பீடித்துள்ளமை துர்ப்பாக்கியத்திலும், துர்ப்பாக்கியமாகும். அதாவது இனவாதம் என்ற யுத்தமாகும். இந்த நாட்டின் அமைதி, சமாதானம், இன ஒருமைப்பாடு என்பனவற்றை சீர்குலைத்து மீண்டும் ஒரு வன்முறைக் கலாசாரத்தின் ஆரம்பத்திற்கு கொண்டு வரும் ஒரு கைங்கரியத்தை இந்த நாட்டின் ஒருசில அருவருக்கத்தக்க நபர்கள் மேற்கொண்டு வருவதும் இன்று இனங்களுக்கடையில் பாரியதொரு அபாயகரமான நிலைமைகளை தோற்று வித்துள்ளதுடன் அரசாங்கத்தின் வீழ்ச்சிப் போக்கிற்கும் அது தூபமிடும் ஒரு விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது.

புதிய அரசியல் கலாசார முறைமைகள் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் ஆகிய இரண்டும் இந்த நாட்டின் இறையான்மையை துண்டாடும் விடயங்கள் என்றே கூறலாம். புதிய அரசியல் விடயங்கள் இந்த நாட்டில் மக்களை கூறுபோட்டு மக்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக சமுகங்களுக்கிடையில் அரசியல் ரீதியான விரிசல்கள் ஏற்படுகின்றன எனலாம். இந்த நிலைமைகள் பல்வேறுபட்ட பின்னடைவுகளுக்கு வித்திடுகின்றன.

இதேபோல் இனவாதச் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளமையைக் குறிப்பிடலாம். இது சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு தீய செயற்பாட்டுக் கபடத்தனங்களாகும். குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அழிக்கும் நோக்கில் ஒருசில பெரும்பான்மை இனவாதிகளால் திட்டமிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளின் நிதி உதவிகளைப் பெற்று மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளாகும்.

தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் இந்த இனவாதச் செயற்பாடுகளும்கூட முஸ்லிம் சமுகத்தின் அரசியல், பொருளாதாரம், சமய, சமுக விழுமியங்களில் பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில காலமாக இந்த நாட்டில் இடம் பெற்ற சம்பவங்கள் எல்லாம் முஸ்லிம் சமுகத்தினை இல்லாது செய்யும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்றே கூறலாம். அத்துடன் மேற்படி இனவாதச் செயற்பாடுகள் இலங்கை அரசின் பொருளாதாரத்தை பாரியளவு வீழ்ச்சியடையச் செய்யும் ஒரு அங்கம் என்றும் கூறலாம்.

இவ்வாறு இனவாதிகளின் குறிகளுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் விடயத்தில்கூட அரசாங்கமும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் கண்மூடித்தனமாக இருந்து கொண்டு வருகின்றமை இந்த மக்கள் ஆட்சியாளர்களை விட்டுவிலகி வேறு ஒரு குழுவின் அல்லது அமைப்பின் அல்லது கட்சியின் ஆதரவை நாடவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். இன்று இலங்கையின் அரசியலை எடுத்துக் கொண்டால் அது யதார்த்தமாக நடந்து கொண்டிருப்பதை நன்கு கண்டு கொள்ள முடிகின்றன.

என்றாலும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாது அரசியல் கட்சிகளை வளர்த்து தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு வகையான குறுகிய நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்று கொண்டிருப்பதையே கண்டு கொள்ள முடிகின்றது. இந்த விடயம் இன்று அரசியலில் பாரிய விரிசல் நிலைமைகளுக்கு வித்திட்டு ஒரு சாரார் இந்த அரசாங்கத்தின் மீதும் பிரதமர் மீதும்கூட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வைத்துள்ளது.

கடந்த பலநாட்களாக வாக்குவாதங்களும், கருத்துச் சண்டைகளும் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் இடம் பெற்று இறுதியில் கடந்த புதன்கிழமை வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது என்பதனையும் பார்க்கும்போது நாட்டின் ஆட்சி ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றதையும் ஜனநாயகம் செயழிழந்துள்ளதையும் வெளிப்படுத்துகின்றது. இந்த நிலைமைகளுக்கு வித்திட்டவர்கள் அரசியல் வாதிகள் என்றால் அதற்கு மாற்றுக் கருத்துக்கூற முடியாது எனலாம்.

அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நலன்களுக்கே அதீத முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் என்னங்களும், செயற்பாடுகளும் திசைமாறிச் சென்று ஒருவருக்கொருவர் குற்றஞ்சுமத்தி சண்டையிட வைத்துள்ளதால் அதன் பெறுபேறு ஈற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்கேடுப்பிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதை காண முடிந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ளமையை இங்கு குறிப்பிடலாம்.

குறித்த வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்ஹவை ஆதரித்து 122 வக்குகளும், எதிர்த்து 76 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 26 பேர் குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தற்போதைய அரசாங்கம் இனியாவது இந்த நாட்டில் புரையோடியுள்ள இனவாதத்தை குழிதோண்டிப் புதைத்து நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அதீத அக்கறை செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் என்பதுடன் இந்த நாட்டில் வாழும் பல்லின சமய மற்றும் சமுக மக்களை அமைதியகவும், நிம்மதியாகவும் வாழ வழி சமைக்க வேண்டும் என்பதே சமாதானத்தை விரும்பும் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

எனவே மேற்படி விடயங்களை அரசாங்கம் கருத்திற் கொண்டு இனவாத மற்றும் மதவாத சக்திகளின் திருவுதாளங்களுக்கும், கபடத்தனங்களுக்கும் இடமளிக்காது சட்டத்தையும், நீதியையும் சரியான முறையில் நிலை நாட்டுவதுடன் இதுவரை காலமும் தாம் விட்ட தவறுகள், பிழைகளை இனங்கண்டு அவற்றை சரியான முறையில் திருத்திக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்வதுடன் இந்த நாட்டின் சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் நிலைநிறுத்தும் வகையில் தமது இலக்குகளை அடிப்படையாக வைத்து நகரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Web Design by The Design Lanka