இலங்கை ஆதி காலத்தில் முஸ்லிம்களின் தாயகம் -முபாறக் மௌலவி - Sri Lanka Muslim

இலங்கை ஆதி காலத்தில் முஸ்லிம்களின் தாயகம் -முபாறக் மௌலவி

Contributors

 

-எஸ்.அஷ்ரப்கான்-

இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்களவரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வராலறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நிலையில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த இராவணன் எப்படி சிங்களவனாவான்?

உண்மையில் இஸ்லாம் இந்து, பௌத்த மதங்களுக்கு முற்பட்டது என்பதாலும் முதல் முஸ்லிமும் முதல் மனிதனுமான ஆதம் இலங்கையில் இறங்கி அவரின் வாரிசுகள் இங்கேயே வாழ்ந்தனர் என்பதனாலேயே  ஆதம் வாரிசு என்ற அறபுச்சொல் ஆதிவாசியாக மருவியுள்ளதை காணலாம். அத்துடன் இலங்கை இந்திய எல்லையில் அழிந்து போன பாலத்தை ஆதம் பாலம் என்றே ஆங்கில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்பாலத்தின் வழியாகவே ஆதம் மக்கா சென்று திரும்பினார். சேது பாலம் என தமிழில் அழைக்கப்படும் பெயர் கூட சீது என்ற இறைத்தூதரின் பெயராகும் என்பதை இஸ்லாம் கூறுகிறது.

அதே போல் இராவணன் சம்பந்தப்பட்ட வரலாற்றுக்கதையில் வரும் பெயர்களான ராவணன் என்பது அரசன் என்ற பொருள் கொண்ட ராஇனன் என்பதும் ராமன் என்பது ரஹ்மான் என்பதும் சீதா என்பது சய்யிதா என்பதையும் அனுமான் என்பது நுஃமான் என்பதையும் வாலி என்பது அதே அறபுச்சொல் மூலம் பாவிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இந்தப்பெயர்களுக்கும் இந்து, பௌத்த பெயர்களுக்கும் எந்தவொரு நெருக்கத்தையும் நாம் காண முடியாது. மாறாக அறபு மொழிக்கே மிக மிக நெருக்கமாக உள்ளன.

ஆக ராம் மற்றும் ராவணன் வரலாறு என்பது முஸ்லிம்களின் வரலாறாகும். காலப்போக்கில் இந்த வரலாறு திரிபு படுத்தப்பட்டு இந்துக்கள் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வாறு மோசே என்ற மூசாவை பின்தொடர்ந்த முஸ்லிம்கள் அவர் இல்லாத போது காளை மாட்டை வணங்கி இந்துக்காளாக மாறினார்களோ அவ்வாறே இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்துக்களாக, பௌத்தர்களாக மாறியுள்ளனர்.

ஆகவே இலங்கை ஆதி காலத்தில் முஸ்லிம்களின் தாயகமாகவே இருந்துள்ளது என்பதை எம்மால் உறுதிபட கூற முடியும் என முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team