இலங்கை கிரிக்கெட்டை மீளமைக்க முடியாவிடின் அமைச்சர் நாமலை இராஜினாமா செய்யுமாறு தேரர் கோரிக்கை..! - Sri Lanka Muslim

இலங்கை கிரிக்கெட்டை மீளமைக்க முடியாவிடின் அமைச்சர் நாமலை இராஜினாமா செய்யுமாறு தேரர் கோரிக்கை..!

Contributors

இலங்கை கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாவிடின் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யுமாறு ராஜாங்கனே சத்தா ரதன தேரர், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அரசியல்மயப்பட்டுள்ளதால், நாட்டில் காணப்படும் திறமையான விளையாட்டு வீரர்கள் கண்டறியமுடியாதுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், இரசிகர்கள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென்னிலங்கையின் ராஜாங்கனே சத்தா ரதன தேரர், தமது ஆதங்கத்தை பேஸ்புக் காணொளி ஒன்றின் ஊடாக வெளியிட்டுள்ளதோடு, இலங்கை கிரிக்கெட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாவிடின் முழு அரசாங்கத்தையும் பதவி விலகுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்த நாட்டின் இரண்டு கோடி மக்களும் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டை உங்களால் மீளவும் கட்டியெழுப்ப முடியாதா? ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சை மாத்திரமல்ல அரசாங்கத்தையும் வேறு நபர்களிடம் கையளித்துவிட்டு செல்லுங்கள்.

இன்று இலங்கைக்காக விளையாடும் வீரர்களுக்கு நாடு குறித்து, விளையாட்டு குறித்து, மதம் குறித்து, எவ்வி அக்கறையும் இல்லை. அவர்களுக்கும் பணமே வேண்டும். கிரிக்கெட் நிர்வாகத்தில் வர்த்தகர்களே இருக்கின்றனர். பணத்தின் மீதான பேராசையில் அவர்கள் பதவி வகிக்கின்றனர்.

திலங்க சுமத்திபால ஒரு சூதாட்டக்காரர். அவரை நீக்குங்கள்.

நாட்டின் விளையாட்டை மீட்டெடுக்க முன்னாள் விளையாட்டு வீரர்களை நிர்வாகத்தில் நியமியுங்கள். உங்களால் முடியாவிடின் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்.

சிம்பாவ்பே அணியில் இருந்து பயிற்றுவிப்பாளரை கொண்டுவந்துள்ளீர்கள். நாங்கள் அந்த நாட்டை கணக்கில்கூட எடுத்ததில்லை. இந்த நாட்டில் அவர்களைவிட திறமையானவர்கள் இல்லையா?

நீங்கள் திருடர்களுக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள். இந்த நாட்டில் திறமையாக விளையாடக்கூடிய 11 பேரை கண்டுபிடிக்க முடியவில்லையா? கிரிக்கெட்டில் அரசியல் கலந்துள்ளதால், குறிப்பிட்ட பிரதேசத்திற்கு மாத்திரம் விளையாட்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று நாசமாகியுள்ளது.

கிரிக்கெட் என்பது இந்த நாட்டின் உயிர்மூச்சு. இன்று அது அழிந்துபோயுள்ளது. முழுமையாக அரசியல் மயப்பட்டுள்ளது. திறமைக்கு வாய்ப்பளிப்பளிக்கப்படுவதில்லை. உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அர்ஜுன ரணதுங்கவிடம் இதனை ஒப்படையுங்கள் எனச் சாடியுள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team