இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு இனிங்ஸ் வெற்றி - Sri Lanka Muslim

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு இனிங்ஸ் வெற்றி

Contributors

இலங்கை கிரிக்கெட் சபையால் நடாத்தப்படும் உள்ளூர் முக்கோண முதற்தரத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி அணிக்கெதிரான இப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 108 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் கௌஷால் சில்வாவின் 125 ஓட்டங்கள், குமார் சங்கக்காரவின் 107 ஓட்டங்கள், பிரசன்ன ஜெயவர்தனவின் ஆட்டமிழக்காத 105 ஓட்டங்கள், நுவான் குலசேகரவின் 75 ஓட்டங்கள், மஹேல ஜெயவர்தனவின் 54 ஓட்டங்களின் துணையோடு அவ்வணி சகல விக்கெட்டுக்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி அணி சார்பாக ஷமின்ட எரங்க 4 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களையும், விஷ்வா பெர்னான்டோ, லஹிரு கமகே, சச்சித்திர சேரசிங்க, ஷெஹான் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி அணி சார்பாக குசால் ஜனித் பெரேரா 142 பந்துகளில் அதிரடியாக 150 ஓட்டங்களைக் குவித்தார். ஷெஹான் ஜெயசூரிய 56 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 42 ஓட்டங்களையும் பெற்ற போதிலும், அவ்வணி 299 ஒட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பந்துவீச்சில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி சார்பாக சச்சித்திர சேனநாயக்க 3 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர, சுரங்க லக்மால், அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி அணி, 168 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்து ஓர் இனிங்ஸ் மற்றும் 108 ஓட்டங்களால் இப்போட்டியில் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி அணி சார்பாக சச்சித்திர சேரசிங்க 62 ஓட்டங்களையும், மலிந்த புஷ்பகுமார 22 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றுக் கொள்ளவில்லை.
பந்துவீச்சில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி சார்பாக சச்சித்திர சேனநாயக்க 4 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா 3 விக்கெட்டுக்களையும், அஜந்த மென்டிஸ் 2 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்

Web Design by Srilanka Muslims Web Team