இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம்? - Sri Lanka Muslim

இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம்?

Contributors

இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. வட கரோலினாவின் குடியரசுக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் புர் இந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்படக் கூடிய வகையிலான பொறிமுறைமை ஒன்றை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்படுத்த வேண்டுமேன தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உள்ளக புனர்நிர்மானம், நிலையான சமாதானத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. செனட்டர்களான ரொபர்ட் செசீ, பெற்றீக் லெஹே, ஷெரொட் பிரவுன், பார்பரா பொக்ஸர் மற்றும் ஜோன் கொர்னயின் ஆகியோர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

 

இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் திகதி காங்கிரஸ் சபையில் இந்த தீர்மானம் தொடர்பான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வசேத சுயாதீன விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமெரிக்காவும் ஏனைய உலக நாடுகளும் உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற தரப்பினரை தடையின்றி பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அமெரிக்க தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team