'இலங்கை பட்ஜட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு மீண்டும் அதிகரிப்பு' - Sri Lanka Muslim

‘இலங்கை பட்ஜட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு மீண்டும் அதிகரிப்பு’

Contributors

(BBC)

அரசதுறையினர், விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்கான சில நன்மைகளை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

விவசாயிகளுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டம் ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும், பெண் தொழில் முனைவோர் வட்டியற்ற கடனைப் பெறுமுடியும் என்றும் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுப் படியை 1200 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்து 4 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக்கான செலவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 2014ஆம் ஆண்டில் 5.2 வீதமாக குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அது மேலும் குறையும் என்றும் அவர் தனது உரையில் கூறியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அடுத்த மூன்று வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.5 வீதமாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்ட உரையை முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி ஆகியன பகிஸ்கரித்திருந்தன.

இதற்கிடையே அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு போதாது என்று அவர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த வரவு செலவுத்திட்டத்தை கடந்த ஆண்டினது தொடர்ச்சியான ஒன்று என்று கூறுகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் எம். கணேசமூர்த்தி. அது மாத்திரமன்றி, இது கிராமிய பொருளாதாரத்தை இலக்கு வைத்ததாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்புச் செலவு

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு போதாது என்ற அவர்களது கருத்து நியாயமானதாக இருந்தாலும், மிகப்பெரிய அளவிலான அரச ஊழியர்களைக் கொண்ட இந்த அரசாங்கத்துக்கு இப்படியான அதிகரிப்பை செய்வது கடினமே என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டுகளைப் போல அதிகரித்தே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால், தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்திக்கான துறையும் வருவதால், அதனை பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு மாத்திரமல்ல என்ற வகையில் அரசாங்க தரப்பு வாதிடலாம் என்றும் கணேசமூர்த்தி கூறுகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team