இலங்கை மில்பர் கபூர் மன்றத்தின் கிளையொன்று பிரித்தானியாவில் ஆரம்பிப்பு - Sri Lanka Muslim

இலங்கை மில்பர் கபூர் மன்றத்தின் கிளையொன்று பிரித்தானியாவில் ஆரம்பிப்பு

Contributors
author image

A.S.M. Javid

பேருவளை நகர சபைத் தலைவரும், இலங்கை மில்பர் கபூர் மன்றத்தின் ஸ்தாபகரும், அதன் தலைவருமான மில்பர் கபூர் அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தார் இச்சமயம் பிரித்தானியாவில் இருக்கும் இலங்கையின் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்பொன்றை நடாத்தினார். அச்சந்திப்பின் போது இலங்கை மில்பர் கபூர் மன்றம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தையும் அது கொண்டிருக்கும் இலக்குகளையும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

இம்மன்றம் தொடர்பாக அவர் தெளிவுபடுத்தி உரையாற்றுகையில்  குறிப்பிட்டதாவது, களுத்துறை மாவட்டத்தில்  வாழும் முஸ்லிம்களை கல்வி. சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டே இம்மன்றம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மூன்று துறைகளிலும் இம்மாவட்ட முஸ்லிம்களை தன்னிறைவு மிக்கவர்களாக கட்டியெழுப்புவதே இந்த மன்றத்தின் அடிப்படை நோக்கம். அதற்குத் தேவையான சகல வேலைத்திட்டங்களும் அந்தந்த துறை வாரியாக முன்னெடுக்கப்படுகின்றன.

 

அந்தவகையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பேருவளை சுப்பர் சன் உதை பந்தாட்ட விளையாட்டுக் கழகத்த்திற்கு 10 இலட்சம் ரூபாவை நாம் அன்பளிப்பாக அண்மையில் வழங்கி உள்ளோம். அதேபோன்று ஏனைய உதை பந்தாட்டக் கழகங்களையும் கிரிக்கட் உள்ளிட்ட இதர விளையாட்டுக்களையும் அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான உதவி ஒத்துழைப்புக்களை நல்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

 

மேலும் கல்வித்துறையிலும் களுத்துறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களை மேம்படுத்தவதற்கு உத்தேசித்துள்ளோம். இதற்குத் தேவையான திட்டங்கள் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுடன் கலந்துரையாடி அதன் அடிப்படையில் வகுக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் அனைவரையும் ஓரிடத்தில் சந்தித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். இவ்வாறு களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்டப்பட்டு முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

 

இம் மூன்று துறைகளிலும் வளம் மிக்கவர்களாக களுத்துறை மாவட்ட முஸ்லிம்களை கட்டியெழுப்பும் போது அவர்கள் தன்னிறைவு மிக்கவர்களாக திகழுவார்கள். அதன் மூலம் மாவட்டத்துக்கும் முழு நாட்டுக்கும் எம்மவரால் அளப்பரிய சேவைகளை வழங்கக் கூடியதாக இருக்கும். இந்த நோக்கத்தையும் இலக்கையும் கொண்டதாகவே இந்த மன்றம் அமைந்துள்ளது  என்று குறிப்பிட்டார்.

 

இச்சமயம் இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரித்தானியாவில் இருக்கும் களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகள், களுத்துறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் மேம்பாட்டை கருத்திற் கொண்டு இவ்வாறான மன்றம் ஒன்றை அமைத்திருப்பதை நாம்  பெரிதும் வரவேற்கின்றோம்.

 

அதேநேரம் இவ்வாறான மன்றத்தை அமைத்து அதனூடாக இப்பணியை தலைமை தாங்கி முன்னெடுப்பதற்கு முன்வந்திருக்கும் மில்பர் கபூர் அவர்களுக்கு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது மக்களின்  மேம்பாட்டுக்காக இம்மன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட இருக்கும் வேலைத் திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் நிதி வசதிகளையும் எம்மால் முடிந்தளவுக்கு நாம் வழங்கத் தயாராக உள்ளோம். உங்களது வேலைத்திட்டங்களுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். உங்களது திட்டங்கள் வெற்றிபெற இறைவனை பிராத்திக்கின்றோம் என்றும் குறிப்பிட்டனர்.

 

இச்சந்திப்பில் கலந்து கொண்ட பிரித்தானியாவில் இருக்கும்; களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகளது வேண்டுகோளின் பேரில் இலங்கை மில்பர் கபூர் மன்றத்தின் கிளை ஒன்று ஹரோ நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இதற்கான நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருக்கும்; களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகள் மன்றத்தின் தலைவர் மில்பர் கபூர் அவர்களுடன் படங்களும் எடுத்துக் கொண்டனர்.

 

SAMSUNG CAMERA PICTURES

Web Design by Srilanka Muslims Web Team