இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவின் குள்ள நரித்தனம் - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவின் குள்ள நரித்தனம்

Contributors

-எம். எம். ஸுஹைர், ஜனாதிபதி சட்டத்தரணி-

-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- 

 

இலங்கையில் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த இந்தியக் குற்றச்சாட்டு முஸ்லிம்களை பிழையாக சித்தறிப்பதற்கான : குள்ள நரித்தனமான முயற்சி

பங்களாதேஷில் அரசியல் தலைவர் ஒருவர் கடந்த டிசம்பர் 12 ஆம் நாள் தூக்கிலேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இந்தியத் தூதுவராலயம் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என இந்திய சார்பில் அறிவித்திருக்கின்றமையை, இலங்கை முஸ்லிம்களை ஆயுததாரிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தறிக்க முனைகின்ற இந்தியாவின் மற்றொரு முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

 

இலங்கை விவகாரங்களில் மூக்கை நுழைப்பதனை நியாயப்படுத்தும் வகையில், காலத்திற்கு காலம் இலங்கை முஸ்லிம்கள் மீது பயங்கரவாத சாயம் பூசும் வகையிலான போலிக் குற்றச் சாட்டுக்களை சுமத்துவது, இந்தியாவிற்கு வாடிக்கையாகிப் போன விஷயம்.

 

ஏற்கனவே, இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவராலயங்கள், பெருமளவு இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையிலும், இலங்கையில் தூதுவராலயங்களுக்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில், பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பது, பங்களாதேஷ் நிகழ்வுகளை இத்தோடு முடிச்சுப் போட்டிருக்கின்றமைதான்.

 

பாகிஸ்தானைத் துண்டாடி, பங்களாதேஷை உருவாக்குவதில் இந்தியா பெரும் பங்காற்றியது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதுவெல்லாம் 42 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற நிகழ்வுகள். சர்ச்சைக்குரிய தீர்ப்பொன்றின் மூலம் அப்துல் காதிர் முல்லாஹ் தூக்கிலேற்றப்பட்டமைக்கும், இலங்கையில் கூடுதல் பாதுகாப்பைக் கோருவதற்கும், மொழியை அடிப்படைப்படையாக வைத்த பங்களாதேஷ் என்ற தேசத்தின் உருவாக்கத்தில், தனது பங்கை இலங்கைக்கு ஞாபகப்படுத்துவதை விட, இந்தியாவிற்கு இதில் வெறு என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

 

இதற்கு முன் முஹம்மத் அப்ஸல் குரு தூக்கிலேற்றப்பட்ட போது, இந்தியா தனது வெளிநாட்டுத் தூதரகங்களில் கூடுதல் பாதுகாப்பைக் கோரவில்லை. இந்திய ஊடகங்களால் அப்ஸல் மீதான விசாரணை ஆரம்பிக்கும் முன்பே, மூலப்பிரதியான கஷ்மீர் பயங்கரவாதி என சித்தறிக்கப்பட்டவர் அவர். டிசம்பர் 13, 2001 அன்று இந்தியப் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாடாத்தியவர்களுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, புது டில்லி திஹார் மத்திய சிறையில், 2013 பெப்ரவரியில் அவர் தூக்கில் ஏற்றப்பட்டார்.

இத்தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கஷ்மீர் விவகாரத்தைப் போல் அல்லாமல், தெற்காசியாவில் பங்களாதேஷ் விவகாரம் சிறியளவு தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது.

 

இந்தியாவின் விருது  வென்ற எழுத்தாளர் அருந்ததி ரோய், “Afzal Guru and the strange case of the attack on the Indian Parliament” என்ற தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “உச்ச நீதிமன்றத்திற்குத் (அவரது விவகாரத்தில்) தனது தீர்ப்பை வெளியிடுகின்ற உரிமை இருந்தது. ஆனால், அதனை வெளியிடும் முன்பே அவர் தூக்கிலிடப்பட்டார். சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் ஒருவர் தூக்கில் ஏற்றப்பட்டுள்ளார்”.

 

அப்ஸலின் உடலைக் கையளிக்குமாறு அவர் உறவினர்கள் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் இந்தியரசு நிராகரித்து விட்டது. எதுவித அனுஷ்டானங்களும் இல்லாத நிலையில், அவர் மக்பூல் பாதின் கல்லறைக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார். மக்பூல் பாத் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் நிறுவனர் என்பதும், விடுதலைக்கான கஷ்மீர் இயக்கத்தின் முக்கிய புள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷைச் சேர்ந்த அப்துல் காதிர் முல்லாஹ் கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷில்) ஜமா-அ-தே இஸ்லாமி என்ற அரசியல் கட்சியின் துணைச் செயலாளராக இருந்தவர். பாகிஸ்தான் இரு நாடாக பிரிந்து செல்வதை அவரது கட்சி எதிர்த்தது. அதிர்ச்சியளிக்கும் வகையில், தொடர்ந்து அவ்வரசியல் கட்சிக்கே குற்றவாளி முத்திரை குத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதோடு, நாட்டின் பிரிவினையை எதிர்த்த செயற்பாடு குற்றமொன்றாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.

 

2010 நவம்பரில், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து விகிலீக்ஸ் மூலம் கசிய விடப்பட்ட தகவல் அறிக்கையொன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “ஆளும் கட்சியில் (அவாமி லீக்கில்) இருக்கின்ற கடும்போக்காளர்கள், ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஸ்லாமியக் கட்சிகளை நசுக்குவதற்குரிய நேரம் உதயமாகி இருப்பதாக நம்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை”.

 

முல்லாஹ் தூக்கிலேற்றப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) பின்வருமாறு தெரிவித்திருந்தது. “கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை தண்டிக்கும் வகையிலான சட்டங்களை அடிப்படையாக வைத்து முல்லாஹ்வைத் தூக்கில் ஏற்றுவதும், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு அவருக்குள்ள உரிமையை மறுப்பதும், அவரது அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயலாகும்”.

கஷ்மீரி எதிர்ப்பியக்கங்களுடன் தொடர்பிருக்கிறது என்ற குற்றச்சாட்டின் பெயரில் அப்ஸல் குரு தூக்கிலேற்றப்பட்ட போதும், பிராந்திய ரீதியில் பெரிய அதிர்வுகளை அது ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் பங்களாதேஷில் முல்லாஹ்வின் மீதான மரண தண்டனை இலங்கையில் இராணுவத் தாக்குதல்களைத் தோற்றுவிக்கும் எனக் கூறுவது ஒரு வெற்றுப் பூச்சாண்டியே தவிர வேறில்லை.

 

இஸ்லாம் குறித்த பீதியை ஒரு காரணமாகப் பயன்படுத்தி, அத்தகைய தாக்குதலுக்கான களநிலையை இந்தியாவே உண்டு பண்ணினால்தான் உண்டு. டிசம்பர் 2011 இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு, இந்திய அரசாங்கமே காரணம் என India’s Central Bureau of Investigations இன் முன்னால் அதிகாரிகளுள் ஒருவரான சதிஷ் வர்மா குறிப்பிட்டிருக்கின்றமை, இத்தகைய கருத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கே இத்தாக்குதல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்திய சார்பிலும், அதன் புலனாய்வுத் துறை சார்பிலும், எதுவித ஆதாரமும் இல்லாமல், முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இலங்கையில் தமது தூதரகத்தைத் தாக்கலாம் எனப் போலியாக குற்றம் சுமத்துவதன் மூலம், முஸ்லிம்களைப்  பயங்கரவாதிகளாகச் சித்தறிக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகள் குறித்து இங்குள்ள முஸ்லிம்கள் ஆழமாகக் கவலை கொண்டுள்ளார்கள்.

 

இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து, இதுபோன்ற ‘எதிர்வு கூறல்கள்(?)’ இதற்கு முன்பும் இந்தியத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அத்தகைய அசம்பாவிதம் எதுவும் இடம்பெறவில்லை.

 

#கட்டுரை எழுத்தாளர் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team