இலங்கை முஸ்லிம் பண்பாடு vs அரபுப் பண்பாடு » Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம் பண்பாடு vs அரபுப் பண்பாடு

arabic

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Jiffry Hassan


ஒரு சிந்தனையோ, தத்துவமோ, மதமோ அது எந்தப் பண்பாட்டில் தோன்றுகிறதோ அந்தப் பண்பாட்டின் செல்வாக்கு அதில் நிச்சயமாக காணப்படும். உதாரணமாக அரேபியாவில், அரபுப் பண்பாட்டில் தோன்றிய ஒரு சமயத்தில் அரபுப் பண்பாட்டின் செல்வாக்கு அதில் பிரதிபலிக்கும். இந்தியாவில் தோன்றிய ஒரு தத்துவத்தில் இந்தியப் பண்பாடு பிரதிபலிக்கும். வேறு சமூகங்களுக்கு வேறு கலாசாரங்களுக்கு அந்த மதமோ, தத்துவமோ பரவலடையும் போது அது தோன்றிய சமூகத்தினரின் பண்பாடும் சேர்ந்தே கடத்தப்படுகிறது. இலங்கை முஸ்லிம்கள் விசயத்திலும் நடப்பது இதுதான்.

அரபுக்கள் இஸ்லாம் மட்டும் பரவினால் போதாது அதனுடன் சேர்ந்து அரபுப் பண்பாடும் பரவ வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்காக தங்கள் நாட்டில் “ஊறும்“ பணத்தை தாராளமாக செலவு செய்கின்றனர். தௌஹீத் (வஹாபிசம்) இயக்கத்தின் மூலம் அரபுக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்.

ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கான தனியான அடையாளங்களை, மரபுகளை, கலாசாரத்தைக் கொண்டிருக்கலாம். இஸ்லாத்தை தங்களின் வணக்க வழிபாட்டு முறையாகப் பின்பற்றுவதற்காக தங்களின் மரபுகளை, கலாசாரத்தை விட்டுக்கொடுக்கத் தேவை இல்லை. இலங்கை முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தை தொடர்ந்தும் பேணிக்கொள்ள முடியும். அதனைச் செய்வதற்கான ஆதாரம் குர்ஆனில் இருக்கா? ஹதீஸில் இருக்கா எனக்கேட்பது முட்டாள்த்தனமானது. அதெல்லாம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ இருக்காது.

கலாசாரத்தின் ஒரு கூறுதான் மதம் என்பது E.B.Tylor கொடுத்த வரைவிலக்கணம். இஸ்லாம் கொடுத்த வரைவிலக்கணமல்ல. மதம் வேறு கலாசாரம் வேறு என்று நாம் புரிந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் உலகு முழுவதும் தங்கள் கலாசாரமே பரவலடைய வேண்டும் என எதிர்பார்க்கும் அரபுத் தேசியவாதிகள் மதத்தையும் பண்பாட்டையும் வேறுபடுத்திப் புரிவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. அந்த வேறுபாடு நிகழ்ந்தால் தங்களின் சொந்தப் பண்பாட்டை வேறு பண்பாடுகளுக்கு கடத்துவது கடினமாகிவிடும்.

இதனாலேயே அவர்கள் உள்ளூர் முஸ்லிம் சமூகங்களின் அடையாளங்களை, பண்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவை இஸ்லாத்தில் இல்லை. பித்அத் என்று சொல்லி அவற்றை அழித்தொழிப்பதிலேயே குறியாகவுள்ளனர். மறுபுறம் தங்களின் கலாசார ஆடைமுறை உணவுமுறை, உறவுமுறை, மொழி போன்றவற்றை ஏனைய கலாசாரங்களில் வலுவாகப் பரப்புகின்றனர். அதனை இலகுவாகச் சாதிப்பதற்கு குர்ஆனிலுருக்கா, ஹதீஸிலிருக்கா என்ற கேள்விகளையும், தங்களின் பண பலத்தையும் பயன்படுத்துகின்றனர்.

வெறும் மதரசாக் கல்வி மட்டும் பெற்ற, சமூகவியல் அறிவுத்துறைகளையோ, வேறு சிந்தனைகளையோ படிக்காத, உள்ளூர் பண்பாடுகள் பற்றிய எந்தவித அறிவுமற்ற மௌலவிமார், இளைஞர்கள் இதற்கு இலகுவில் பலியாகிவிடுகின்றனர். அவர்கள் விரித்த வலையில் சிக்கிவிடுகின்றனர். சவுதி அரசாங்கத்தினால் அதிக பணச்செலவில் வேறு பண்பாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களை தங்கள் நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு எடுத்து இந்த சிந்தனையைக் கொடுத்து விடுகின்றனர்.

அவர்கள் தங்களின் சொந்தக் கலாசாரங்களுக்குத் திரும்பி உள்ளூர் பண்பாடுகளுக்கெதிரான யுத்தத்தைத் தொடங்குகின்றனர். அவர்களுக்கு அங்கு போதிக்கப்படும் கல்வியைத் தவிர வேறு கல்வி இல்லை. அவர்களுக்கு மேற்குலக சிந்தனைத்துறைகள் மீது எந்த அறிவுமில்லை. கீழைத்தேய சிந்தனைகள் மீது எந்த அறிவுமில்லை. இலக்கியக் கல்வி இல்லை. தினப்பத்திரிகைகள் கூட வாசிப்பதில்லை. எனவே அவர்களுக்கு சிந்திக்கும் திறனும் இருப்பதில்லை. எனவே இலகுவில் ஒரு கொள்கைக்கு அடிமையாகிவிடுகின்றனர். வெறிகொள்கின்றனர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும்போது அவர்களின் இருப்பு, அரசியல் பதட்டங்கள் குறித்தெல்லாம் எந்த அக்கறையுமின்றி மதபோதையிலும், பண ஆசையிலும் வெறித்தனமாக இயங்குகின்றனர். நிதானம் அவர்களிடம் இருப்பதே இல்லை. இதனால் சமூகம் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

எனவே, நிதானமாக சிந்தியுங்கள். இஸ்லாத்தை ஒரு சமயமாகப் பின்பற்றுங்கள். மதம் வேறு கலாசாரம் வேறு எனப் புரியுங்கள். இன்னொரு தரப்பின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களை முன்வைப்பதில் உங்களுக்கு இருக்கும் அதேவெறிதான் இன்னொரு நம்பிக்கையாளனுக்கும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

Web Design by The Design Lanka