இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட பட்ஜட் : JVP காட்டம் » Sri Lanka Muslim

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட பட்ஜட் : JVP காட்டம்

anura44

Contributors
author image

Editorial Team

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைந்திருப்பதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது.

பொது மக்களின் சலுகைகளைக் குறைத்து, ஆட்சியில் இருப்பவர்கள் தமக்கான வசதிகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் ஒதுக்கீடுகள் அமைந்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பலவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான செலவீனமாக 6459 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும், 2018ஆம் ஆண்டில் ஜனாதிபதிக்கு 9983 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிடவும் 3527 மில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது

அதேபோல பிரதமரின் செலவினமாக 2017ஆம் ஆண்டில் 1254 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தன. 2018ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீடுகள் 1772 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதமருக்கான ஒதுக்கீடுகள் 518 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் பொது மக்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 9 பில்லியனால் அதாவது 9162 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீடுகள் பொது மக்களின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? அல்லது ஆட்சியாளர்களின் சுகபோகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரசாங்க செலவனங்களைக் கொண்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைந்துள்ளது. இதனால் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையும் அதிகரிக்கவுள்ளது. கடன்பெறும் தொகை 1800 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்துள்ள கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கோரும் ஆட்சியாளர்கள், தாம் மாத்திரம் எந்தவித அர்ப்பணிப்பும் இன்றி தமக்கான ஒதுக்கீடுகளை அதிகரிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Web Design by The Design Lanka