இளைஞர்களும் உலகுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தஃவாக் கலாசாரமும் - Sri Lanka Muslim

இளைஞர்களும் உலகுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தஃவாக் கலாசாரமும்

Contributors
author image

எஸ். ஸஜாத் முஹம்மட் (இஸ்லாஹி)

சமகால இஸ்லாமிய சமூக அமைப்பில் இளைஞர்களுக்கான பெறுமானம் அவர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதா? என மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

 

உலக பரிமாணங்களின் மாறுதலுக்கு ஏற்ப சமகால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் நமது தஃவா வழிமுறைகளை எவ்வளவு தூரம் மாற்றியமைத்து இருக்கின்றோம?
இளைஞர்களினது இயல்பு எவ்வாறானது என்பது தொடர்பாக சற்று பார்ப்போம்,

 

உலக புகழ் பெற்ற உளவளத்துணையாளன் 50க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல கோடி கணக்கில் விற்பனையில் சாதனை படைத்த (men are from mars women are from venus) ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் எனும் நூலில் அவர் ஆண்களின் இயல்பு நிலையை போதுமைப்படுத்தி குறிப்பிடும் போது ஆண்களுக்கு உபதேசம் செய்வது அவர்களை கொலை செய்வதற்கு சமனாகும் என குறிப்பிடுகின்றார்.

 

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் பிறர் உங்களிடம் உபதேசம் செய்யும் போது உங்களின் அனுபவம் எவ்வாறு இருக்கும்?
பதின்ம பருவ பிள்ளைகளின் தந்தைமார்களின் முறைப்பாடு எனது மகன் என்னை விஞ்சி விட்டான், நான் சொல்வதை அவன் கேட்பதில்லை, அவனுடைய பாட்டில்தான் அவன் நடக்கின்றான், அவனுடைய நண்பர்கள்தான் அவனுக்கு பெரிது, எங்களைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை என்பார்கள்.

 

இன்று எமது சமூக அமைப்பில் இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் தான் என்ன?
பதின்ம பருவ இளைஞர்களை நெறிப்படுத்தல் என்ற பெயரில் அவர்களுக்கு பொதி செய்யப்பட்ட உபதேசங்களை தான் அள்ளி அள்ளி கொட்டுகின்றோம். பின்னர் எவ்வளவு உபதேசங்கள் வழங்கியும் பயனில்லை என நாம் சலிப்படைகின்றோம்.

 

ஒரு முறை நான் பதின்ம பருவ மாணவர்களுக்கான பயிற்சி நெறிக்கு வளவாளராக சென்றேன். இதற்கு முன்னர் அந்த இளைஞர்களுக்கான பல நிகழ்ச்சிகள் நடந்து இருந்தது. இது பற்றி அந்த பதின்ம பருவ இளைஞர்களிடம்  பின்னூட்டல் எடுத்தோம்.
ஒவ்வெரு இளைஞர்களும் தமது அனுபவ பகிர்வை என்னுடன் பகிந்து கொண்டார்கள்.

 

ஒரு இளைஞன் எழும்பினான். பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருந்தான். சேர் நான் இங்கு வருவதற்கு விரும்பி வரவில்லை. எனது தந்தையின் வேண்டுதலின் பெயரில்தான் இங்கு வந்தேன்.
நான் இந்த பயிற்சி நெறிக்கு வருவதற்கு முன்னர் என்னிடம் சில முன்முடிவு இருந்தது. இந்த பயிற்சி நெறி பூராக “பயான்” ஆகத்தான் இருக்கும் என்று. ஒரு மௌலவி வருவார். அவர் எங்களின் காதுகள் வெடிக்கும் அளவு உபதேசம் செய்து எங்களின் உள்ளங்களை தூங்கச் செய்வார். ஆனால் இங்கு எனது எதிர்பார்ப்புகளுக்கு முரணாகத்தான் இந்த பயிற்சி நெறி இருக்கின்றது என்று அந்த இளைஞர்கள் தான் விளங்கிய வகையில் தஃவா நிகழ்ச்சி தொடர்பாக ஆதங்கப்பட்டான்.

 

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை கூறினார்கள் மக்களுக்கு இலகுபடுத்துங்கள்; அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள், உபதேசம் செய்யுங்கள் மக்கள் உங்களை விட்டும் மிரண்டு ஓடாமல் இருக்கட்டும்.
எமது தஃவாப் பணி இளைஞர் உலகுக்கு ஏற்றவாரு இலகுபடுத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளதா? எமது உபதேசங்கள் அவர்கள் எங்களை விட்டும் மிரண்டு ஓடாத வகையில் இருக்கின்றதா? எண்பதை ஒரு கணம் சிந்திப்போம்.

 

இந்த ஹதீஸின் அடிப்படையில் தஃவா பணியில் இலகுபடுத்தல், மனிதர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தல் என்பது இஸ்லாம் மனிதர்களின் நலனுக்காய் வகுத்த பொது விதி. இந்த இரண்டு வகையான அணுகுமுறைகள் தஃவாவில் பயன்படுத்தாத போது அந்த தஃவாப் பணி எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும்?

 

நான் ஏலவே குறிப்பிட்ட எனது அனுபவ பகிர்வின் படி எமது தஃவா அணுகுமுறை எத்தனை ஆயிரம் இளைஞர்களின் உள்ளங்களில் இஸ்லாத்தின் தூது சென்றடைவதை தடுத்து இருக்கின்றது?
இன்று எமது சமூக அமைப்பில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், இதுவல்லாத நிறுவனங்களில் இளைஞர்களுக்காக இஸ்லாமிய நிகழ்வுகளில் வழமை எவ்வாறு இருக்கின்றது.

 

ஒரு மௌலவி வருவார் பெரும்பாலும் அவர்பாட்டில் உபதேசம் செய்வார், இந்த இளைஞர்கள் அனைவரையும்சாடுவார், இளைஞர்கள்தான் இன்று நடக்கும் அனைத்துப் பிரச்சினைக்கு காரணம் என்று எதிர் மனப்பாங்கில் கதையளந்து கொண்டு செல்வார். சில சந்தர்ப்பங்களில் அவர் எதை பேசுகின்றார் என்று அவருக்கே விளங்குவதில்லை. நிமிடங்கள் மணித்தியாலம் வரை நீண்டு செல்லும் அவர் அவருடைய உபதேசத்தை முடித்த பாடு இல்லை.

 

கடந்த மாதம் எனது நண்பர்களை சந்திக்க ஒரு பல்கலைக்கழகத்திக்கு சென்று இருந்தேன். அங்கு அவர்களிடம் உங்களின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இஸ்லாமிய தஃவாப் பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என கலந்துரையாடல் செய்தோம்.

 

இங்கு எங்களுக்காக பெரிய அளவில் தஃவாப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு பள்ளிவாசலுக்கு சென்று அங்கு வழங்கப்படும் உபதேசங்களை செவிமடுப்போம். அந்த உபதேசம் 7.00 மணியிலிருந்து 8.30 மணிவரை நீண்டு செல்லும். பின்னர் எங்களுக்கு இரவு ஆகாரம் வழங்கப்படும். இரவு ஆகாரம் வழங்குவதற்க்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் ஒரு சில நண்பர்களின் முகங்கள்தான் காணமுடியும் 8.30 மணியளவில் குறித்த பள்ளியில் எமது பல்கலைக்கழக முஸ்லிம் நண்பர்களை அனைவர்களையும் சந்திக்கலாம் போல் இருக்கும் என்றார் அந்த சகோதரர்.

 

எமது இளைஞர்களுக்கான தஃவாப்பணியின் இன்றைய நிலையை பார்த்து அன்று எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. எமது பலவீனத்தால் இஸ்லாம் எவ்வளவு தூரம் இளைஞர்களின் உள்ளங்களில் வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றது.  

 

என்னை கொலை செய்வதாக இருந்தால் கொலை செய்யுங்கள்; உபதேசம் செய்யாதீர்கள் என்று நினைக்கும் பதின்ம பருவ இளைஞர்களுக்கான தஃவாவை நாம் எவ்வாறு உபதேசங்களுடன் சுருக்கிக் கொள்வது எந்த வகையில் நியாயம்?

 

எமது வாழ்கைக்கான முன்மாதிரி நபி (ஸல்) அவர்களின் வாழ்கையில் எமக்கு இருக்கின்றது. அவர்கள் தஃவா செய்த வழிமுறையிலும் கூட எமக்கு முன்மாதிரி இருக்கின்றது என்பது எமக்கு மறக்கடிக்கப்பட்டுள்ளது.

 

நபி (ஸல்) அவர்களின் சீறாவை நாம் ஆழமாக ஆய்வுக்குள்ளாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தமது தஃவாப் பணியில் எத்தனை வீதம் உபதேச வடிவில் செய்தார்கள், அதிகமாக எவ்வாறு தஃவா செய்தார்கள், பிரத்தியேகமாக இளைஞர்களுக்காக அவர்கள் பயன்படுத்திய தஃவா அணுகுமுறை என்ன?, தஃவாவில் எவ்வளவு தூரம் தலைமுறை இடைவெளியை கருத்தில் கொண்டு இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

 

நபி (ஸல்) அவர்களின் தஃவா வரலாற்றில் முன்வரிசையில் நின்றவர்களின் கணிசமானவர்கள் இளைஞர்கள்தான். ஆனால் நாம் இன்று மேற்கொள்ளும் தஃவா வழிமுறைகள் அதிகமான முதியவர்களைத்தான் சம்பாதித்து இருக்கின்றோம்.

 

முதியவர்களுக்கு ஏற்ற வகையிலான தஃவா முறையை பயன்படுத்தி இளைஞர்களில் மாற்றத்தை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
கடலில் பெரிய மீன்களை பிடிப்பதற்காக பெரிய கண்களை உள்ள வலையை பயன்படுத்துவார்கள். அதில் பெரிய மீன்கள்தான்  பிடிபடும் சிறிய மீன்கள் எல்லாம் ஓடி விடும். இது போல் எமது இளைஞர்களும் நழுவி செல்கின்றார்கள்.

 

இளைஞர்களுக்கான தஃவா பணியை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான சில பரிந்துரைகள்.
01.    நபி (ஸல்) அவர்கள் அன்று எவ்வாறு அதிகமான இளைஞர்களின் மனதை வெல்லும் வகையில் தஃவாப் பணியை மேற்கொண்டார்கள், அதில் அவர்களின் பிரயோக முறைமை, அணுகுமுறை, படிநிலை எவ்வாறு இருந்தது என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

 

02.    இந்த ஆய்வுக்கு ஏற்ப அவர்களின் வயது பரிமாணங்களுக்கு ஏற்ப புதிய தஃவா முறைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.
03.    சமகால தலைமுறையினரின் இயல்பு நிலைகளுக்கு ஏற்பவும், கற்பனை வாதத்திற்கு புறம்பாக நடைமுறைக்கு சாத்தியமான முறையில் மாற்றியமைத்தல்.
04.    உபதேசம் செய்யும் போது தெளிவாகவும், சுருக்கமாகவும் இளைஞர்களின் மொழியில் செய்தல்.
05.    உபதேசங்களை குறைத்து சுயதேடலின் பால் அவர்களை தூண்டுதலும், வழிகாட்டலும்.

 

06.    அவர்களின் சிந்தனைக்கு தீனி போடும் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தல்.
07.    கிராம மட்டங்களில் வாசிப்பு வட்டங்களை உருவாக்கலும், அங்கு வாசிப்பு பரிமற்றத்திக்கான சூழலை ஏற்படுத்தலும்.
08.    இளைஞர் மன்றங்களை உருவாக்கி அவர்களாக இஸ்லாத்தை கற்பதற்கான சூழலை உருவாக்குதல்.
09.    இளைஞர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் புதிய படைப்புக்களை உருவாக்குதல் (புத்தகங்கள், நாவல், குறும்படம், நாடகம், பாடல் …….)
10.    இஸ்லாத்தை நடைமுறை சூழலில் கற்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தல்.

 

11.    சுற்றுலா, வெளிக்கள நிகழ்ச்சியினூடாக இஸ்லாத்தை கற்பித்தல்.
12.    கணிசமான அளவு அவர்கள் தொடர்பான விடயங்களில் அவர்களாக முடிவு எடுக்க வாய்ப்பு அளித்தல்.
13.    இளைஞர்கள் உதாரண புருஷர்களை பின்பற்றும் இயல்பு அதிகம் இவற்களின் துறைகளுக்கு ஏற்ப அவர்களின் உதாரண புருஷர்களை அடையாளப்படுத்தல், உருவாக்குதல்.
14.    இளைஞர்களுக்காக தஃவா பணி மேற்கொள்கின்றவர்களுக்கு, இளைஞர்களுக்கான தஃவா முறைமை பற்றியும், இளைஞர் உளவியல், தலைமுறை இடைவெளி, சமகால உலக அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றம், எதிர்கால ரீதியில் சிந்தித்து தஃவாவை மேற்கொள்ளுதல் தொடர்பாக அறிவூட்டுதல்

 

15.    மத்ரஸா மாணவர்களுக்கு  இளைஞர் உளவியலை அவர்களின் கலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளுதல்.
16.    சமூக நிறுவனங்களில், சமூக அமைப்புக்களில் அவர்களுக்குரிய இடம் வழங்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துதல்.
17.    ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்த பள்ளிவாசல் மஹல்லாவில் உள்ள இளைஞர்களை ஒவ்வொரு கிழமையும் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்தல்.
18.    அவர்கள் மூலம் வாராந்தம் ஏதாவது ஒரு சமூகப்பணியை அவர்கள் மேற்கொள்ளுமாறு தூண்டுதல்.

 

19.    சமூக செயற்பாடுகளில் முடிவுகள் எடுக்கும் போது அவர்களின் கருத்துக்களையும் கருத்தில் கொள்ளுதல்.
20.    சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்தி தஃவாவை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் வழிகாட்டல்.
21.    சமூக ஊடகங்களில் தஃவா வட்டங்களை உருவாக்கி அதில் கருத்து பரிமாற்றம் செய்தல்.

 

குறிப்பு: இது தொடர்பாக உங்களின் பரிந்துரைகளையும் வழங்க முடியும்.

Web Design by Srilanka Muslims Web Team