இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களால் இலங்கைக்கு ஆபத்து: கோட்டாபய - Sri Lanka Muslim

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களால் இலங்கைக்கு ஆபத்து: கோட்டாபய

Contributors

சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் இலங்கையின் முஸ்லிம் குழுக்கள் சில, தொடர்புகளைப் பேணி வருகின்றன. இது தொடர்பில் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கண்காணித்து வருகின்றோம் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் சிக்கல்களுக்கான நடவடிக்கை மையத்துக்கு, கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இலங்கை எதிர்நோக்கியுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில் இந்த மையம், கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

இனகவாதக் குழுக்களிடையே மதவாதம் தலைதூக்குவதே யுத்தத்திற்கு பிந்திய இலங்கையின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது. அதற்கு தீர்வு காணாவிட்டால் எதிர்காலத்தில் இன ரீதியான பதற்ற நிலை தலைதூக்கலாம்.

 

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்யத் தொடங்கினர். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பின்னர் இந்த குழுக்கள் தற்காப்பு என்ற நிலையிலிருந்து விலகி வேறு பாதையில் செல்ல முயற்சிக்கின்றன.

 

குறிப்பாக சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுடன் இவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

 

பயங்கரவாதத்துக்கு அப்பால் இலங்கை கடந்த காலத்தில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட அமைப்புகளின் ஆபத்தையும் எதிர்நோக்குகிறது. அந்த அமைப்புகள் இலங்கைக்குள் தங்களை மறுபடி ஒன்றிணைத்து, தமது இடதுசாரிக் கொள்கையை முன்னெடுக்க முயல்கின்றன என்று எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

 

இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய முகவர்களுடன் தொடர்பை ஏற்படடுத்துகின்றனர் என்றும் தெரியவருகின்றது’ என அவர் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மலரும்)

Web Design by Srilanka Muslims Web Team