இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல் - Sri Lanka Muslim

இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல்

Contributors

இஸ்ரேல் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு.

அங்கு கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி வெற்றி பெற்றபோதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 2வது முறையாக பாராளுமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனவே எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ பெஞ்சமின் நேதன்யாகு முடிவு செய்தார். இதற்காக புளு அண்ட் ஒயிட் கட்சியின் தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னிட் கான்ட்சுடன் பெஞ்சமின் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒற்றுமை அரசில் யார் பிரதமராக இருப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே 3வது முறையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் இதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் நீண்ட இழுபறிக்குப் பிறகு லிக்குட் மற்றும் புளு அண்ட் ஒயிட் கட்சியில் கூட்டணியில் ஒற்றுமை அரசு நிறுவப்பட்டது.

முதல் 18 மாதங்களுக்கு பெஞ்சமின் நேதன்யாகுவும் அடுத்த 18 மாதங்களுக்கு பென்னி கான்ட்சும் பிரதமராக இருக்க ஒப்பந்தம் போடப்பட்டது.‌ அதன்படி பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த சூழலில் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பாராளுமன்றத்தின் பட்ஜெட் தாக்கல் செய்வது தாமதமானது.‌ இதனால் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு கவிழ்ந்தது.‌

இதனைத் தொடர்ந்து அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2 வருடத்தில் 4வது முறையாக இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கி வைத்தது மற்றும் அரபு நாடுகளுடனான தூதரக அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வந்தது போன்ற காரணங்களால் மக்கள் தனக்கு வெற்றி வாய்ப்பை வழங்குவார்கள் என பெஞ்சமின் நேதன்யாகு உறுதியாக நம்புகிறார்.

அதே சமயம் தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையிலும், நாட்டில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழலிலும் பெஞ்சமின் நேதன்யாகு இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பதிவான 71 சதவீத வாக்குகளை விட மிகக்குறைவான வாக்குகளே இம்முறை பதிவாகும் என்று தேர்தல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் இதற்கு முக்கிய காரணமாக அமையும் என அவர்கள் நம்புகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் வாக்களிப்பதற்காக தனி வாக்குச்சாவடிகள் மற்றும் நகரும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் போன்ற அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team