இஸ்லாமிய மாணவர்களை சந்தித்ததற்காக மாணவிகள் மீது தாக்குதல் » Sri Lanka Muslim

இஸ்லாமிய மாணவர்களை சந்தித்ததற்காக மாணவிகள் மீது தாக்குதல்

_99449893_gettyimages-84534960

Contributors
author image

BBC

கர்நாடக மாநிலம் மங்களூரில் இரண்டு இஸ்லாமிய மாணவர்களை சந்தித்ததற்காக இரண்டு மாணவிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

பதின்வயதில் உள்ள அந்த நான்கு மாணவர்களும் இந்தத் தாக்குதல் நடந்தபோது கேளிக்கைப் பூங்கா ஒன்றில் இருந்தனர்.

வலதுசாரிக் குழு ஒன்றைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மூன்று ஆண்களை கைது செய்துள்ளதாகவும், குற்றத்தில் தொடர்புடைய பிறரைத் தேடி வருவதாகவும் பிபிசியிடம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்ட இந்த சம்பவம் ‘கலாசாரக் காவலர்கள்’ என்று கூறிக்கொள்பவர்களின் இந்த எல்லை மீறல் குறித்த கோபத்தை உண்டாக்கியுள்ளது.

காவல் துறையினர், பாதுகாப்பு கருதி அந்தப் பெண்களை அந்தப் பூங்காவில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும்போதும், ஒரு நபர் தாக்குவதை அந்தக் காணொளியில் காண முடிகிறது. தங்களின் பெற்றோரை அழைக்கும்படி தாக்குதல் நடத்திய நபர்கள் அந்த மாணவிகளை மிரட்டும் காட்சிகளும் அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

அந்த இரு மாணவிகளும், இரு இஸ்லாமிய மாணவர்களும் ஒரே மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பூங்காவுக்கு வந்திருந்தவர்களில் சிலர், இக்குற்றத்தில் ஈடுபட்ட வலதுசாரிக் குழுவினருக்கு அந்த மாணவர்கள் குறித்து தகவல் அளித்ததாகவும், அதன் பின்னரே அவர்கள் வந்து தாக்குதல் நடத்தியதாகவும் காவல் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

தவறான நடத்தை என்று தங்கள் கருதும் சம்பவங்களுக்கு எதிராக இந்தக் குழுக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு முதலே மங்களூரில் நடைபெற்று வருகின்றன.

மதுபான விடுதிகளுக்கு செல்லும் பெண்கள், வீடுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள், உடன் வேலை செய்யும் இந்து பெண்ணிடம் பேசிய இஸ்லாமிய ஆண் ஆகியோர் கடந்த காலங்களில் தாக்கப்பட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka