ஈராக் கொரோனா மருத்துவமனையில் அக்சிஜன் டேங்க் வெடித்து 82 பேர் மரணம்..! - Sri Lanka Muslim

ஈராக் கொரோனா மருத்துவமனையில் அக்சிஜன் டேங்க் வெடித்து 82 பேர் மரணம்..!

Contributors

இராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

இப்னு காடிப் என்ற அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

அந்த மருத்துவமனையின் ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால், தீ பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் அந்தக் கட்டடத்தில் இருந்து தப்பி வெளியேறுவதையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க விரைவதையும் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு உத்தரவிட்ட இராக் பிரதமர் முஸ்தஃபா அல் காதிமி சுகாதார அமைச்சரை பதவி நீக்கினார்.

அவசர கட்டத்தில் உள்ள நோயாளிகளின் நுரையீரலைப் பிசைந்து மூச்சு முடுக்கும் பணிக்கென வடிவமைக்கப்பட்ட தளத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தீ மூண்டதாக இராக் குடிமை பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஜெனரல் காதிம் போகன் தெரிவித்தார்.

மிக மோசமான நிலையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான அப்பிரிவில் 30 நோயாளிகள் இருந்ததாக, ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாக்கில் தீ கட்டுக்குள் வந்ததாக காதிம் போகன் தெரிவித்தார்.

ஏற்கெனெவே “கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எதிரான குற்றம் இது” என்று இராக் அரசின் மனித உரிமை ஆணையம் இந்த விபத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவதற்காக ஆக்சிஜன் இணைப்பில் இருந்து அகற்றியபோது பல நோயாளிகள் இறந்ததாகவும், வேறு சிலர் அங்கு சூழ்ந்த புகையில் மூச்சுத் திணறி இறந்ததாகவும் அவசரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தீ மூண்டவுடன், தானியங்கி மத்திய ஆக்சிஜன் குழாயை மூடும்படி யாரோ கேட்டார்கள். இதன் மூலம் தீவிரமாக ஆக்சிஜன் தேவைப்பட்டவர்களுக்கு அது கிடைக்காமல் போனது,” என ‘இராக்கி ஹெல்த் ஆக்சஸ்’ என்ற தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் ஹல்லா சர்ராஃப் பிபிசியிடம் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team