ஈரானில் கடும் வன்முறை, 12 பேர் பலி » Sri Lanka Muslim

ஈரானில் கடும் வன்முறை, 12 பேர் பலி

kk

Contributors
author image

Editorial Team

 மக்கள் அமைதி காக்குமாறு அதிபர் ரவுகானி விடுத்த கோரிக்கையை ஈரான் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

ஈரானில் விலைவாசி உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகிறது. பொருளாதார பிரச்சினைகளும் தலைதூக்கி வருகின்றன. இது அரசுக்கு எதிராக மக்களை வெகுண்டெழுந்து போராட்டங்களில் ஈடுபட வைத்துள்ளது. அந்த நாட்டின் வடகிழக்கு நகரமான மஷாத் நகரத்தில் தான் கடந்த வியாழக்கிழமை இந்தப் போராட்டம் முதலில் தொடங்கியது. பின்னர் அது பல்வேறு நகரங்களுக்கும் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. மஷாத் நகரத்தில் போலீசாரின் மோட்டார் சைக்கிள்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தனர்.

தலைநகர் டெக்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் பெருமளவில் திரண்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களை முழங்கிய மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.  அபார் நகரில் நடந்த போராட்டத்தில், அந்த நாட்டின் உச்சத்தலைவரான அயத்துல்லா அலி காமேனியின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். வெளிநாட்டு விவகாரங்களில் ஈரான் தலையீட்டுக்கும், ஈரானியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

போரடும் மக்களை  அமைதிகாக்குமாறு கோரிக்கை விடுத்த ஈரான் அதிபர் ரவுகானி, “ விமர்சனங்களை முன்வைக்க மக்களுக்கு உரிய இடம் அளிக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் விதத்தில் அரசாங்கத்தின் மீதான அவர்களின் விமர்சனத்தை வெளிப்படுத்த மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.அதே வேளையில் வன்முறை சம்பவங்களையும் பொதுச்சொதுக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் சகித்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது எனவும் அவர் பேசினார்.  ஆனால், அதிபர் ரவுகானியின் அறிவிப்பை புறக்கணித்த அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஈரான் முழுவதும் 4 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெலகிராம், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

ஈரானில் முக்கிய நகரங்களில் நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில், பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.  சில இடங்களில் போராட்டக்காரர்கள் காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை கையகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் இதற்கு கடும் எதிர்ப்பதால் மோதல் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka