ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயருக்கு ரகசிய கடிதம்..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயருக்கு ரகசிய கடிதம்..!

Contributors

உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை முழுமைப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டு இலங்கை அரசாங்கத்தினால் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு விசேட கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்கள் குறித்தும் அதன் விசாரணைகளின் தற்போதைய நிலைமை பற்றியும் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையை ஆராய்ந்த துணைக்குழுவினால் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு விசேட கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 23270 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக தொகுத்து 25 சந்தேகநபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் கடந்த 08ஆம் திகதி இரகசியமான முறையில் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கு அரசாங்கம் கிடைக்கச் செய்திருப்பதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசேடமாக, அரசாங்கம் பக்கமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் முடியும் தறுவாயில் இருப்பதாகவும், அரசாங்கம் சரிவர தமது கடமையை செய்துகாட்டியதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையை ஆராய்ந்த துணைக்குழுவினால் வழங்கிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாக மேலும் கூறப்படுகின்றது.

அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை ஆராய்வதற்காக அமைச்சரவைத் துணைக் குழுவொன்றை அண்மையில் நியமித்திருந்தது.

எனினும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாதத் தாக்குதல்களை இழுத்தடிப்பு செய்வதாகவும், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பளிப்பதாகவும் போன்ற பலவித கடுமையான குற்றச்சாட்டுக்களை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பகிரங்க மேடைகளில் முன்வைத்து வந்தார்.

இந்த நிலையிலேயே நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சம்சுதீன், மொஹம்மட் ரிஸ்வான் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடை சட்டத்தின் விதி விதானங்களின் பிரகாரம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க சிறப்பு நீதியரசர்கள் குழாம் தலைமையிலான நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.

அந்த வகையில் மிகவிரைவில் நீதியரசர்கள் மூவரடங்கிய நீதிமன்றம் அமைக்கப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பரந்துபட்டதாக முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team