ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது - பதுளை ஆயர் தெரிவிப்பு..! » Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது – பதுளை ஆயர் தெரிவிப்பு..!

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகங்களை இல்லாது செய்ய வேண்டுமாக இருந்தால் அது குறித்த இறுதியறிக்கை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஆயர்கள் சங்கத் தலைவரும், பதுளை மறை மாவட்ட ஆயருமான விண்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

பதுளை ரொக்கில் பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆயர் இதனை கூறியுள்ளார். 

´தற்போது தாக்குதல் குறித்த விசாரணைகள் தடம்புரண்டுள்ளது. 2 குழுக்களை அமைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் மொத்தமாக உயயிரிழந்தனர். இந்த இனப்படுகொலையின் மூலம் பலர் காயமடைந்தது மாத்திரம் அல்லாமல் 500 க்கும் அதிகமானவர்கள் அங்கவீனம் அடைந்துள்ளனர். 

இவ்வாறான நிலையில் விசாரணைகள் மூலம் நியாயம் கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதாவது நீதிபதி மலல்கொடவின் அறிக்கை அதனையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழு பின்னர் ஜனாதிபதி ஆணைணக்குழுவின் பின்னர் சிறப்பான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தாக்குதல் தொடர்பான இறுதியறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சட்டமா அதிபரிடம் அந்த அறிக்கை கையளிக்கப்பட வேண்டும். 

அவரே பொருத்தமான நடவக்கைகளை எடுக்க வேண்டும். இறுதியாக அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். அதனூடாக நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால் தற்போது விசாரணைகள் தடம்புரண்டுள்ளன. இரண்டு குழுக்கழை அமைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது. இந்த நடவடிக்கை பொறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றோம். 

எனவே கத்தோலிக்க மக்களிடத்தில் காணப்படும் சந்தேகங்களை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த அறிக்கை கர்தினாலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் எமக்கும் சில விடயங்களை தெரிவிக்க முடியும். விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் அந்த அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆகவே இதனை பேராயரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியிடம் மிக தேவையோடு கேட்டுக் கொள்கின்றேன்.´ என்றார்.

Web Design by The Design Lanka