உங்கள் மீதான கடைசித்துளி நம்பிக்கையும் காய்ந்து போன பின்னர்...!!! » Sri Lanka Muslim

உங்கள் மீதான கடைசித்துளி நம்பிக்கையும் காய்ந்து போன பின்னர்…!!!

muslim

Contributors
author image

Mujeeb Ibrahim

உங்கள் மீதான கடைசித்துளி நம்பிக்கையும் காய்ந்து போன பின்னர்……….
காங்கிரஸ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் இன்ன பிற வலுவிழந்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமான ஒரு மகஜர். 

21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சமர்ப்பணம்


பேரம் பேசும் சக்தி என்றால் அதற்கு எப்போதும் பேரம் பேசுகிற சக்தி இருக்கவேண்டும்.

மாறாக தேர்தல் சீசனுக்கு மாத்திரம் மக்களின் வாக்குகளை விற்று பதவிகளை பெற்றுக்கொள்கிற வெற்றுப்பேரமாக அது இருக்க கூடாது.
இந்த பண்டமாற்றை செய்கிறவர்கள் தங்களை சக்தி என்று அழைத்துக்கொள்ள முடியாது.

அதற்கு மக்களை ஏய்த்தல், ஏமாற்றி பிழைத்தல் என படு கேவலமான பதங்கள் பிரயோகத்தில் உண்டு.
இலங்கை அரசியல் பரப்பில் 1989 களில் பிரேமதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர் கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டே விகிதாசார தேர்தல் முறையின் 5% வெட்டுப்புள்ளி அம்சத்தை அஷ்ரப் வென்றெடுத்தார்.
உனது ஜனாதிபதி கதிரையை காப்பாற்ற வேண்டுமென்றால் இதனைச்செய்து கொடு என்று பிரேமதாசவிடம் சொல்வதற்கான தைரியமும் சக்தியும் அஷ்ரபிடம் இருந்தன.

அதற்கு பெயர் பேரம்.
இப்போது என்ன நடக்கிறது…..?
ஆளுக்கொரு சோனக அரசியல் கடை!

பாராளுமன்ற பதவிக்காக மாதமொன்றுக்கு கிடைக்கிற சம்பளத்தில் இத்தனை கோடிகளை எப்படி சம்பாதித்தார்கள் என்று பாமரன் மூக்கில் கைவைத்து நிற்கிறான்.

இடைக்கிடையே பேரினவாதத்திற்குள் ஏற்படுகிற சல சலப்பிற்கு சத்தம் போடுகிற சருகுகளாக இவர்கள் மாறிப்போனார்கள்.

வெறும் பதவிகளுக்கு மாத்திரம் தொப்பி புரட்டுகிற படுகேவலமானவர்களாக இவர்களை சிங்கள பேராண்மைகளும், கேவலம் பொது பல சேனாவும் புரிந்து வைத்திருக்கின்றனர்.

அதனால்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் முதலில் தாவப்போவது  காங்கிரஸ் கடைக்காரர்களுந்தான் என ஞானசார சாடியிருந்தார்.
அதில் உண்மை இல்லாமல் இல்லை!

இதெல்லாம் போக சிறுபான்மை அரசியல் எப்படி இருக்கவேண்டுமென ஓரளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து காட்டுகிறது.
முஸ்லிம் அரசியல் இப்போது எதனை நாடி நிற்கிறது?

அமைச்சுப்பதவிகளை வீசிவிட்டு பாராளுமன்றத்தில் எதிர் வரிசையில் அமருங்கள்.

தேவையான இடங்களில் நிபந்தனைகளோடு அரசுக்கு ஆதரவளிப்போம் என சொல்லுங்கள்.

முஸ்லிம் விரோதப்போக்கையும், உரிமைகளில் கைவைப்பையும் நிறுத்தச்சொல்லுங்கள்.

அரசாங்கத்திற்கு அச்சம் வரும்..
வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை வரும்.
இதெல்லாம் உங்களால் முடியாது!
ஏனென்றால் நீங்கள் எல்லோரும் இந்த அரசுக்கு விலைபோய் ஆண்டுகள் இரண்டாகிறது!

மாறாக கோடிகளை கொட்டி பதவிகளை வாங்கிக்கொண்டு அல்லது கோடிகளை வாங்கிக்கொண்டு மக்கள் ஆணையினை விற்று காசாக்கி கொண்டு எங்களிடம் வந்து வெற்றுப்பேரக்கதைகள் பேசாதீர்கள்.

உங்கள் சாயமெல்லாம் வெளுத்துப்போச்சு.
இவ்வளவு கோடானு கோடிகள் புரண்டு பதவிகளுக்காக மாத்திரம் நடந்து முடிந்த பேரக்கதைகளின் பின்னே…..

இனி எப்படி உங்களால் எதிர்கட்சி ஆசனங்களில் அமர முடியும் மைடியர் முஸ்லிம் பார்லிமென்டேரியன்ஸ்?

இந்த கதைகள் எல்லாம் அப்பாவி வாக்காளனுக்கு தெரியாதென்ற அற்ப தைரியத்தில் உங்கள் ஆட்டம் தொடர்கிறது.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இது கன காலத்திற்கு வெல்லாது!

Web Design by The Design Lanka