உயிருடன் கபனிடப்பட்ட ஒரு சமூகத்துக்காகவே அழுகிறேன்! » Sri Lanka Muslim

உயிருடன் கபனிடப்பட்ட ஒரு சமூகத்துக்காகவே அழுகிறேன்!

ashraff

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

————————————————————
கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
————————————————————
சுவனத்தில் வாழும்
எங்கள் சொர்க்கத்
தங்கமே…!
நான் இன்னும்
அழுகிறேன்தான்
ஆனால்…
உங்கள் மரணத்தை
நினைத்தே நான்
இன்னும் ஒப்பாரி வைப்பதாக
நீங்கள்
எண்ணிவிடாதீர்கள்..!
ஏனெனில் படைப்பவனே
பறித்துக் கொள்வான் என்ற
பகுத்தறிவு எனக்கு உண்டு..!
—–
ஆனாலும் அழுகிறேன்தான்..
உங்கள் மரணத்துக்காக அல்ல…
எங்கள் சமூகம் மரணிப்பதனை
எண்ணியே அழுகிறேன்!
————-
விபத்து என்பது
விதியாகலாம்
வபாத் என்பது
இயற்கையாகலாம்..
இதுவே இறை நியதியும்
ஆகலாம்…
உங்களுக்கும் இதுவே
ஆகியிருக்கலாம்!
————–
ஆனால், உங்கள் மரணம் இன்று
எங்கள் சமூகத்தை உயிருடன்
சந்தூக்கில் ஏற்றியுள்ள
கொடுமையை
கண்டுதான் இன்னும்
நான் அழுகிறேன்!
————–
மாமனிதரே!
இன்று நாங்கள்
உயிருடன்
கபனிடப்பட்ட ஒரு
சமூகமாகி விட்டோம்!
————–
என்னுடன் இருப்பவர்கள்
எனக்குப் பின்னர்
சமூகத்தைச்
சுமப்பார்கள் என்ற
நம்பிக்கையில்
நீ சுவனத்தை
அடைந்திருப்பாய்!
ஆனால் .. நீ நம்பியவர்கள்
எங்களுக்கு
தும்பியல் செய்வதனை
நீ அறிவாயா?
————–
உன்னால் அமானிதமாக
ஒப்படைக்கப்பட்ட
ஒரு சமூகம் இங்கு
யூதர்களால்
சிதைக்கப்படவில்லை..
———
சமூகம்.. சமூகம் என்று
உன்னையே
தொலைத்த
மாமனிதரே!
இன்று..
மக்களை தொலைத்தே
சிலர் மன்னர்களாகி விட்டனர்.
இதனை நினைத்து என்னால்
அழாமல் எப்படி இருக்க முடியுமா?
——————
சமூகத்தின் தலைக்கு மேல்
குருவி பறக்கட்டும்..
ஆனால்
தலையில் கூடு கட்ட
விடமாட்டேன் என்று கூறிய
மாமனிதரே
இன்று நாங்கள்..
சில பருந்துகளின்
கால்களுக்குள்
சிக்கிக் கொண்டு
சுயநல அரசியலுக்கு
இரையாகிக்
கொண்டிருப்பதனை
அறிந்து நான்
எப்படி அழாமல்
இருப்பது?
————–
நாரே தக்பீர்.. அல்லாஹு
அக்பர் என்ற
அன்றைய உனது
விண்ணதிர்ந்த போன கோஷம்
இன்று “நானே எல்லாம்
நம்பியவர்களுக்கு மோட்சம்”
என்று ஒலிப்பதனைக் கேட்டுமா
நான் அழாதிருக்க முடியும்?
————–
சுவனத்தில் வாழும்
எங்கள் சொர்க்கத்
தங்கமே!
ஒன்றை நீங்கள்
கவனத்தில் கொள்ளுங்கள்
நாங்கள் இங்கு நலமாக
வாழவில்லை நம்புங்கள்..!
————–
முஸ்லிம்களுக்காக
நீங்கள் அமைத்த
கட்சி இன்று சில
முனாபிக்குகளின்
அரியாசனமாகி,
அழிந்தே விட்டது!
————–
மக்களுக்காக நீங்கள்
கண்ட கனவுகள்
சில மன்னர்களுக்கே
பலித்துப் போக..
நாஙகள் தோற்றுப்
போனதை நினைத்து
நான் அழாமல் எப்படி
இருக்க முடியும்?
————–
தென்கிழக்கு பல்கலை
கண்டாய்….!
தெரிவுப் புள்ளியில்
குறைப்புச் செய்தாய்!
அபிவிருத்தி என
ஆயிரம் ஆயிரம்
செய்தாய்…
————–
ஆனால்.. இன்று
அவர்களின் விருத்தி..
மக்களின் அதிருப்தி
————–
கல்முனைக்கு கரையோர
மாவட்டமும் இல்லை
கரைவாகு சாய்ந்தமருதுக்கு
பிரதேச சபையும் இல்லை
ஒலுலிலில் நீ விரும்பிய
துறைமுகமே இன்று
ஊரையே அழிக்கும்
வழிக்கு மாற்றி விட்டனர்!
————–
உனது கப்ரின் மேல் இன்று
வளர்ந்தோங்கி நிற்கும்
மரங்களுக்கு தண்ணீர்
ஊற்றினோம் என கூறும்
தகுதி கொண்டவர் கூட
உன்கட்சியில்
இன்றில்லை!|
————–
சுவனத்தில் வாழும்
எங்கள் சொர்க்கத்
தங்கமே!
உங்களின் அனுபவ
தேடல்களுக்கு முன்னாள்
இவர்களால் ஒரு கோடு கூட
போட முடியாது..!
ஆனால், இவர்கள் தேடும்
கோடிகளின்
முன்னால் உங்களால்
ஓடவே முடியாது!
————–
இன்று உங்கள் கட்சி
நிஜங்களைப் பிடுங்கி விட்டு
நிழல்களை அல்லவா
இன்று நடுகிறது?
காயத்தின் வலிகள்
சமூகத்துக்கு தானே
தெரியும்?
————–
அன்று…உங்களைச்
சுற்றி இருந்தவர்கள்
உண்மைப் போராளிகள்!
இன்று ஒரு புண்ணைச் சுற்றி
இருப்பதெல்லாம்
புழுக்கள், பூச்சிகள்!
————–
இதனை எல்லாம் பார்த்து
இன்னுமா நான்
அழாமல் இருப்பது?
சுவனத்தில் வாழும்
எங்கள் சொர்க்கத்
தங்கமே…!
கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ashra

Web Design by The Design Lanka