உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ரிஷாத் சார்பில் வாதங்களை முன்வைக்க நீதிமன்றம் அனுமதி! - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ரிஷாத் சார்பில் வாதங்களை முன்வைக்க நீதிமன்றம் அனுமதி!

Contributors

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சார்பில் விசேட வாதங்களை முன்வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதியளித்தது.

அதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த வாதங்களை முன்வைப்பதற்காக என விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே அறிவித்தார்.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவை மீள விசாரணைக்கு வந்தது. அதில் 7 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஏற்கனவே வேறு குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய தினம் 7 ஆவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் மற்றும் சட்டத்தரணி இவோன் நிராஷா ஆகியோர் ஆஜராகினர். 5,6 ஆம் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள, 26,27 வயதுடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகிய இளம் மெளலவி ஆசிரியர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜரானார்.

கொவிட் நிலைமை காரணமாக சந்தேக நபர்கள் எவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சந்தேக நபர்களை நீதிவான் மேற்பார்வை செய்தார்.

இந்நிலையில் நீதிமன்றில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது சேவை பெறுனர்களான இருவருக்கும் எதிராக கடுகளவேனும் சாட்சிகள் இல்லாத நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது என வாதிட்டார்.

இதன்போது நீதிவான் சிசிடி அதிகாரிகளிடம், குறித்த இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படுமா அல்லது சாட்சிகள் இல்லையா என வினவினார்.

அதங்குப் பதிலளித்த சிஐடியினர் விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆலோசனை கிடைத்ததும் அது தொடர்பில் அறிவிப்பதாக கூறினர்.

இந்த நிலையில் வாதங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி முன் வைக்குமாறு சட்டத்தரணிக்கு அறிவித்த நிலையில், சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்கப்பட்டதுடன் வழக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team