உலகிலேயே இலங்கையில் தான் முஸ்லிம்கள் சிறப்பாக வாழ்கிறார்கள் -அஸ்வர் எம்.பி - Sri Lanka Muslim

உலகிலேயே இலங்கையில் தான் முஸ்லிம்கள் சிறப்பாக வாழ்கிறார்கள் -அஸ்வர் எம்.பி

Contributors
author image

Editorial Team

இலங்கையிலேயே முஸ்லிம்கள் ஏனைய நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள் என தகவல் ஊடகத்துறை அமைச்சின் ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார்.

 

இதனை உணர்ந்துள்ள முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகத் தெரிவித்த அவர் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைப் போஷித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

 

மொனராகலையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அஸ்வர் எம்.பி. தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

 

ஒரு நீதியரசர் ‘பாங்கு’ சொல்வதற்கு நீதிமன்றம் மூலம் தடைபோட்டார். ஜனாதிபதி அவர்கள் இலங்கை வானொலி மூலம் ஐவேளை தொழுகையை முஸ்லிம் மக்களுக்காகப் பெற்றுத் தந்தார். இன்று ஒவ்வொரு வீடுகளிலும் குக்கிராமங்களிலும் ‘பாங்கு’ கேட்கிறது.

 

அதனால் தான் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன. அமெரிக்கா. பிரிட்டன். நோர்வே என்று எந்த வல்லரசுகள் எதிர்த்தாலும் முஸ்லிம் தலைவர்கள் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக் கின்றார்கள்.

 

இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள் என்பது உலக முஸ்லிம் தலைவர்களுக்குத் தெரியும். இங்கு பள்ளிவாசல்கள் திறக்கப்படுவதும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் எவரும் மறைக்க முடியாது அவை செய்மதி மூலம் முழு உலகிற்கும் செல்கிறது.

 

இதனை மனதிற்கொண்டு முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும். போஷிக்க வேண்டும். ஆதரவு வழங்க வேண்டும்.

 

சிறு சிறு சம்பவங்கள் நடக்கலாம். எனினும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்களுடன் அந்நியோன்யமாக வாழ்ந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். (TK)

Web Design by Srilanka Muslims Web Team