உலகையே ஆட்டிப் படைத்த ஆப்பிள் நாயகன்! - Sri Lanka Muslim
Contributors

1374086_664864633532980_1395466460_n

(Faseel Ur Rahman)

தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் கனவுகளை நனவாக்குவதே உலகிற்கு செய்கிற மிகப்பெரிய தொண்டு என்ற தெளிவு கொண்டிருந்த நாயகன்… ஸ்டீவ் ஜாப்ஸ்.
இன்று (அக்.05) அவரது நினைவு தினம். ‘ஆப்பிள் ‘ நாயகனைப் பற்றிய எட்டு அம்சங்கள்…

கடின உழைப்பு
ஸ்டீவ் ஜாப்ஸ் ஒன்றும் மென்பொருள் வல்லுனரோ அல்லது கணினி புலியோ இல்லை. ரீட் கல்லூரியில் இருந்து பாதியில் வெளியேறியவர்தான். ஆனால் ஓயாத உழைப்பைக் கொட்டி கொடுத்தவர். காலி பாட்டில்களை சேகரித்து விற்றார். நண்பர்களின் வீட்டு மாடி முற்றத்தில் படுத்துக்கொள்வார். இப்படிக் கழிந்த வாழ்க்கையில் அவர் நம்பியது தன் கடின உழைப்பைத்தான்.

தன்னம்பிக்கை
ஸ்டீவ் ஜாப்ஸ் முதலில் இந்தத் துறையில் நுழைந்த பொழுது எதிர் கொண்டது IBM எனும் யானை \ பலம் கொண்ட சாம்ராஜியத்தை. கையில் இருந்த வெறும் 1300 டாலரோடு களத்தில் குதித்து ஜெயித்தது, தொழில்முனைவோருக்கு மாபெரும் டானிக்.

ஆர்வக்கோளாறு
ஸ்டீவ் ஜாப்ஸுக்கு பன்னிரெண்டு வயதிலேயே HP நிறுவன தயாரிப்பை நோண்டிப் பார்த்து அதன் நிறுவனரை போனில் பிடித்து 20 நிமிடம் பேசி சந்தேகம் தீர்த்து கொள்கிற அளவிற்கு ஆர்வம் இருந்தது.

எதிலும் நம்பர் ஒன்
ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு நபருக்கும் நம்பர் கொடுக்கபட்டபொழுது இவர் நண்பருக்கு எண் ஒன்று தரப்பட்டது. எனக்கு எண் 0 வேண்டும். ஏனெனில் நான்தான் என்றைக்கும் முன்னணியில் இருக்க வேண்டும் என்றார் இவர்.

எதிலும் புதுமை
ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின், ஒரு சிறிய ஸ்டுடியோவை விலைக்கு வாங்கினார். எங்கும் புதுமைகளை செய்த அந்த நிறுவனம் தயாரித்த படங்கள் தான் டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நெமோ எனும் அற்புதமான அனிமேஷன் காவியங்கள்

பெரிதாய் கனவு காண்க
ஒரு சிறிய carrage-ல் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிளின் பெயரை உலகம் உச்சரிக்க வேண்டும் என ஆசைப்பட்ட இவரின் அப்போதைய நிலைமை என்ன தெரியுமா?

ஒரு வேளை உணவுக்காக தினமும் ஏழு மைல் தூரம் நடப்பது. கையில் பணம் இல்லை… ஒரு வீடியோ கேம் கடையில் வேலை. ஆனால் கண்ட கனவு பெரிது… அதனால் தான் அவர் மறைந்தபோது அமெரிக்க ஒபாமா முதல் உள்ளூர் உலகநாதன் வரை எல்லோரும் அவர் பெயரைச் சொன்னார்கள்.

வலிகளில் வலிமை
2004 இல் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; வலியோடு நிறுவன பதவியை விட்டு இறங்கினால், நிறுவன பங்குகள் கீழே போய்விட்டன. மீண்டு(ம்) வந்தார். வலியோடு பல புதுமைகளை செய்தார்.

அப்போது அவர் சொன்னது…
“இன்றோடு வாழ்க்கை முடியப் போகிறது என்கிற நினைப்போடு உழையுங்கள். பல விஷயங்கள் துரிதமாகவும் சுலபமாகவும் முடியும்.”
அப்படியே நடந்தது. அடுத்து வந்த ஆப்பிள் தயாரிப்புகள் பெரிய ஹிட்!

படைப்பாற்றல்
தான் கல்லூரியில் அரைகுறையாய் கற்ற வடிவமைப்பைக் கொண்டே தன் முதல் கணினிக்கான வடிவமைப்பை உருவாக்கிய படைப்பாற்றல் அவரிடம் இருந்தது. “எனக்கு பிடிக்காத ஒன்றை உலகுக்கு தர மாட்டேன். எதிலும் எளிமையும் நளினமும் நிறைந்திருருக்க வேண்டும்” என்றவர் அவர். ஒரு சின்ன திருகாணி கூட தெரியாத அளவுக்கு தன்னுடைய ஐபோன்கள் இருக்க வேண்டும் என்கிற கச்சிதம் அவரிடம் எப்போதும் இருந்தது.

 

Web Design by Srilanka Muslims Web Team