உலக எய்ட்ஸ் தினம்; நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் நலனுக்காக உதவுவோம்! - Sri Lanka Muslim

உலக எய்ட்ஸ் தினம்; நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் நலனுக்காக உதவுவோம்!

Contributors

எய்ட்ஸ் (AIDS) என்பது Acquired immunodeficiency Syndrome என்ற தொடரின் சுருக்கமாகும். அதாவது தேடிப் பெற்ற நீர்ப்பிடணக் குறைபாடு நோய்த்தொகுதி என்பதாகும். HIV என்னும் வைரஸ் மூலமே இந்நோய் உருவாகிறது. எச்.ஐ.வி. வைரஸ் உடலினுள் புகுந்து வெண்குருதிக் கலங்களைத் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் எய்ட்ஸ் பீடிக்கப்பட்ட ஒருவர் விரைவில் மரணத்தைத் தழுவுகிறார்.

எச்.ஐ.வி வைரஸ் 3 வழிகளில் ஒருவருக்குக் கடத்தப்படலாம். அவையாவன 1. நோயுற்றவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளுதல், 2. நோயாளரின் குருதியை மற்றையவருக்கு மாற்றுவதன் மூலம் அல்லது நோயாளி பாவித்த ஊசியை வேறுறொருவருக்கு பயன்படுத்துவதன் மூலம், 3. நோயுள்ள தாய் தன் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தல்.

இந்நோயின் பாதிப்பிலிருந்து சிறுவரைப் பாதுகாக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அதேவேளை பெற்றோருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

இலங்கையில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி 1987 ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் நைஜீரியா சென்று நாடு திரும்பிய களுத்துறை மாவட்ட வாசி ஆவார். அவர் இனம் காணப்பட்டதை அடுத்து இலங்கை தன்னை உஷார்படுத்திக் கொண்டது. இலங்கையில் அன்று தொடக்கம் 31.10.1997 வரை 76 பேர் எய்ட்ஸ் நோய்க்கு இலக்காகி 61 பேர் இறந்தனர். இவர்களில் ஆண்கள் 46 பேர், பெண்கள் 15 பேர் ஆவர். 2012ஆம் ஆண்டில் இலங்கையில் எய்ட்ஸ் தொற்றினால் 1597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 22 பேர் மரணமடைந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் தொடர்ச்சியாக எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுகளின் போது, பாலியல் தொழிலாளர்களுக்கு ஊடாகவே நாட்டில் அதிகளவானவர்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் அவதானத்துடன் நோக்கப்பட வேண்டியவர்கள் என்று எச்.ஐ.வி – எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். இலங்கையில் ஆயிரக்கணக்கில் பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக எச்.ஐ.வி – எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

புள்ளிவிபர முடிவுகளின்படி உலக சனத்தொகையில் சுமார் 3 கோடி 80 இலட்சம் மக்களுக்கு அதிகமானோர் எச். ஐ. வி. தொற்றுடன் வாழ்ந்து வருகின்றார்கள். உலகத்தில் தென் ஆபிரிக்காவே அதிகளவில் எச்.ஐ.வி. நோயாளிகளைக் கொண்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன. எச்.ஐ.வி உடன் வாழ்வோரைக் கொண்ட உலக நாடுகளில் இலங்கை 125 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் உடன் 4000 இற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

எச்.ஐ.வி. தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவோ அல்லது முழுமையாக மீள்வதற்கோ இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற போதும், உயிரியல் விஞ்ஞானிகள் அதற்கான தீர்வை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்கள். எச்.ஐ.வியை எதிர்க்கும் திறன் கொண்ட நோய் எதிர்ப்பாற்றல் குருதியணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபல நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளர் டேவிட் பல்டிமோர், தமது பரிசோதனைகளை எலிகளில் நிகழ்த்திய போது அனுகூலங்களான முடிவுகள் பெறப்பட்டதாகக் கூறுகிறார்.

எய்ட்ஸ் நோய் உலகிற்கு ஓர் அச்சுறுத்தல். இந்நோயானது வெகுவிரைவில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமே முற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என உணரப்பட்டு, எய்ட்ஸ் பற்றிய உலக மகாநாடு 1994 டிசம்பர் முதலாம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இத்தினமே எய்ட்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

2021 இன் தொனிப்பொருள் ‘End inequalities. End Aids’ -(சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுங்கள். எய்ட்ஸ் ஒழிப்பு) என்பதாகும்.

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை இலகுவில் புரிய வைக்கும் சிவப்பு நிற எய்ட்ஸ் அடையாள ரிப்பன்களை வாங்கி உங்கள் ஆடைகளில் பொருத்திக் கொள்ளலாம். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நடத்தும் சமூக அமைப்புக்களுக்கு நிதி உதவி வழங்கலாம். இதுவரை எய்ட்ஸ் பற்றிக் கேள்விப்படாத ஒருவருக்கு இலகு மொழிநடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். எய்ட்ஸ் நாளில் நடத்தப்படும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, இந்நடவடிக்கைக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம். எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று நன்கொடைகள் வழங்கலாம். எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களது நீண்ட காலம் வாழ்வதற்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

நோய்த்தடுப்பு யுத்திகள் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய அறிவைப் பெற்றிருந்த போதிலும், தாங்கள் எச்.ஐ.வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைளில் இறங்குகின்றனர் என எச்.ஐ.வி, எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு கூறுகின்றது. பாலியல் உறவை திருமண வாழ்க்கைக்குள் மாத்திரம் வரையறுத்துக் கொள்வதே எய்ட்ஸ் ஆபத்திலிருந்து தப்புவதற்கான ஒரேயொரு வழியாகும்.

-பரீட் இக்பால்…

Web Design by Srilanka Muslims Web Team