உலக நாடுகளுக்கு சரிசமமாக கொவிட் தடுப்பூசி வழங்கும் 'கொவெக்ஸ்' திட்டம் ஆரம்பம் - Sri Lanka Muslim

உலக நாடுகளுக்கு சரிசமமாக கொவிட் தடுப்பூசி வழங்கும் ‘கொவெக்ஸ்’ திட்டம் ஆரம்பம்

Contributors

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் ஐ.நா ஆதரவு கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தடுப்பூசியை பெறும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாக தடுப்பூசியை வழங்கும் நோக்குடனேயே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் இந்த ஆண்டு நடுப்பகுதி ஆகும்போது 145 பங்கேற்பு நாடுகளின் 3.3 வீத மக்கள் தொகைக்கு தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தியாவின் சேரம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கும் அஸ்ட்ரா செனகா ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தில் 240 மில்லியுன் டோஸ்கள் முதல் கட்டமாக விநியோகிக்கப்படவுள்ளன” என்று தடுப்பு மருந்து கூட்டமைப்பமான ‘கேவி’ அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி சேத் பெர்க்லி தெரிவித்தார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டே இந்த கூட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

“கேவி மற்றும் அஸ்ட்ரா செனக்கா நிறுவனங்கள் கடந்த டிசம்பரில் செய்துகொண்ட முன்கூட்டிய ஒப்பந்தம் ஒன்றின் கீழ் இதே தடுப்பு மருந்தில் 96 மில்லியன் டோஸ்களும் இதில் உள்ளடங்கும்’ என்றும் பெர்க்லி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பைசர் – பயோஎன்டெக் தடுப்பு மருந்தின் 1.2 மில்லியன் டோஸ்களை பெறவும் இந்த கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

கொவெக்ஸின் கூட்டாண்மையாளர்கள் கடந்த புதன்கிழமை நடத்திய மெய்நிகர செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்தே தடுப்பு மருந்து விநியோகம் பற்றிய அறிப்பை வெளியிட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவுக்கு அதிக தடுப்பு மருந்துகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி இந்தியாவுக்கு 97.2 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படும் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு 17.2 மில்லியன் தடுப்பூசிகளும் நைஜீரியாவுக்கு 16 மில்லியன் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

“இது ஒரு சிறப்பான தருணமாகும். தடுப்பூசி வழங்குவதை எம்மால் ஆரம்பிக்க முடிந்துள்ளது. அது அடுத்த வாரம் தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் நோய்த் தடுப்பு திட்டத்திற்கான இணைப்பாளர் ஆன் லின்ஸ்ட்ரான்ட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team