உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல்: 60 அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா » Sri Lanka Muslim

உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல்: 60 அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா

_100631305_russia

Contributors
author image

BBC

பிரிட்டனில் முன்னாள் உளவாளி மீது நச்சுப்பொருள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 60 அமெரிக்க ராஜரீக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடவும் ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய பிற நாடுகளும் இம்மாதிரியான எதிர்வினையை சந்திக்கலாம் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில், முன்னாள் உளவாளி மற்றும் அவரின் மகள் மீது ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையின் ஒரு பங்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை “எதிர்பார்த்த ஒன்றுதான்” என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

“இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது” என வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 4ஆம் தேதி முன்னாள் உளவாளி செர்கேய் ஸ்கிரிபால் மற்றும் அவரின் மகள் யூலியா சாலஸ்பரியில் உள்ள இருக்கை ஒன்றில் மயங்கி கிடந்தனர், இந்த தாக்குதலுக்கு பிரிட்டன், ரஷ்யா மீது குற்றம் சுமத்தியது.

சாலஸ்பரி தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என ரஷ்யா மறுத்திருந்தது. ஸ்கிரிபால் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார். அவரின் மகளின் உடல்நலத்தை முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

பிரிட்டனுக்கு ஆதரவளிக்கும் விதமாக 20க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்ய தூதர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது.

அந்த 20 நாடுகளில் அமெரிக்காவும் அடங்கும். இந்த வாரத்தின் தொடக்கத்தில் 60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றவும், சியட்டலில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடவும் அமெரிக்கா உத்தரவிட்டது.

Web Design by The Design Lanka