ஊடகவியலாளர் முசர்ரப் மீது அழுத்தம் கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதி » Sri Lanka Muslim

ஊடகவியலாளர் முசர்ரப் மீது அழுத்தம் கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதி

musar6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஹமட்


வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப் மீது பிரபல முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவரும் அமைச்சருமான இந்த அரசியல்வாதி குறிப்பிட்ட தொலைக்காட்சியின் பிரதானியை தொடர்புகொண்டு முஷாரப் தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக செயற்படுவதாக சொல்லி, அவரை குறிப்பிட்ட நிகழ்ச்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக நம்பகமாக அறிய முடிகின்றது.

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்திருந்த முஷாரப், அரச நிறுவனமான அத் தொலைக்காட்சியின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர் என்பதுடன் அதன் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பினை செய்திருந்தார்.

இவ்வாறிருக்க, பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற போது குறிப்பிட்ட ஒரு கட்சி பற்றி வெளியான விமர்சனங்களை தான் தொகுத்து வழங்கும் காலைநேர செய்தித்தாள் கண்ணோட்டத்தில் குறிப்பிட்ட முஷாரப், தமிழ் கூட்டமைப்பு போல முஸ்லிம் கட்சிகளும் ஆக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்க வேண்டும் என்ற பாங்கில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதனை பொறுத்துக் கொள்ளாத குறித்த முஸ்லிம் அரசியல்வாதி, வசந்தம் தெலைக்காட்சி நிறுவன தலைவருக்கு சொல்லி, முஷாரப்பை அந்த நிகழ்ச்சியில் இருந்து தற்காலிக இடைநிறுத்தம் செய்யச் செய்துள்ளார்.

இவர் போன்ற பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கண்டு இப்போது கிலி கொண்டுள்ளனர். குறிப்பாக அமைச்சரான இந்த அரசியல்வாதி ஊடகவியலாளர்களை வளைத்துப் போடுவதற்கு முயற்சி செய்து, சிலருக்கு தொழில் கொடுத்தும் எழுதினார். ஆனால் தம்வழிக்கு வராதவர்களுக்கு அவர் மேலிடத்தில் சொல்லி ஆப்படிப்பதில் வல்லவர்.

இது அவருக்கு முதன் முறையல்ல. வீரகேசரியில் உதவி ஆசிரியராக இருந்து விருதுகளையும் வென்ற ஊடகவியலாளரும் அரசியல் விவகார பத்தி எழுத்தாளருமான நிப்றாஸ் இற்கு எதிராகவும் இப்படி ஒரு கைங்கரியத்தைச் செய்திருந்தார். இவர் எவ்வாறு வீரகேசரி முகாமைத்துவ பணிப்பாளருக்கும், ஆசிரியருக்கும் அழுத்தம் கொடுத்து காரியம் சாதி;த்தார் என்பது, அப்போது இணையத்தளங்களில் பரபரப்பாக வெளியாகியிருந்தது.

அதுமட்டுமன்றி, தமிழ்மிரர் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரைக்கு எதிராகவும் அவர் சட்ட நடவடிக்கை எடுக்க முயன்று, சமாதானமாகிப் போனார். ஆதன்பிறகும் இந்த வேலையை அவ்வப்போது செய்து வருகின்றார் என்பதற்கான கடைசிச் சாட்சி முஷாரப் ஆவார்.

ஊடகவியலாளர்கள் சொல்கின்ற கருத்துக்கள் தவறாக இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். அதற்கு பதிலிறுக்க பல வழிகள் உள்ளன. மறுப்பறிக்கை விடலாம், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறையிடலாம.; வழக்குத் தொடரலாம். இல்லாவிட்டால் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து விட்டு, தமது மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

அதைவிடுத்து, பின்கதவால் ஊடக நிறுவன தலைவர்கள், பிரதானிகள், ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பது கையாலாகத்தனத்தின் உச்சக்கட்டமாகும்.

இவ்வாறான கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடக செயற்பாட்டாளர்கள் கோரிவருகின்றனர்.

Web Design by The Design Lanka