ஊடக நிறுவனங்களில் ”பெண்களுக்கு பாலியல் தொல்லை” அம்பலமாகும் சம்பவங்கள்..! - Sri Lanka Muslim

ஊடக நிறுவனங்களில் ”பெண்களுக்கு பாலியல் தொல்லை” அம்பலமாகும் சம்பவங்கள்..!

Contributors

இலங்கையில் உள்ள முக்கிய ஊடக நிறுவனங்களில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள விடயம் சமூக ஊடகங்களில் கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஊடகத்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார்.இந்த வெளிப்பாடுகளில் பெரும்பாலும் அரச ஊடகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ முறைப்பாடு எனவும் கிடைக்கவில்லை என, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற எந்தவொரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் தனக்கு கிடைக்கவில்லை எனவும், ஆனால் இதுபோன்ற முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நாளாந்த பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் தான், தொழில்முறை சக ஆண் ஊழியரால பாலியல் பலாத்காரம் செய்வதாக அச்சுறுத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சாரா கெல்லபத ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டைன் செய்த பாலியல் குற்றங்களின் வெளிப்பாட்டுடன் 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய #MeToo பிரச்சாரத்தைப் போலவே, சாரா கெல்லபத ட்விட்டர் பதிவு, இலங்கையில் மேலும் பல பெண்களை தங்கள் அனுபவங்களை பகிரங்கப்படுத்த தூண்டியுள்ளது.

இதற்கமைய இதுவரை, பல பெண்கள் பணியிடங்களில் எதிர்நோக்கிய பாலில் தொல்லைகள் குறித்த பதிவுகளை பகிர்ந்துள்ளனர். 2010-17 ஆம் ஆண்டுகளில் ஒரு பத்திரிகையில் பணியாற்றியபோது தான் அனுபவித்த துன்புறுத்தல் குறித்து சாரா வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையின் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்த ட்வீட்டைத் தொடர்ந்து, இலங்கையில் ஊடக நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்ற அமெரிக்க ஊடகவியலாளர் ஜோர்தான் நரின், இலங்கை அரசின், ”டெய்லி நியூஸ்” பத்திரிகையில் பயிற்சி பெற்றபோது சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரால் தான் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக ட்வீட் செய்துள்ளார்.

“இலங்கை இதுவரை கண்டிராத சிறந்த ஊடகவியலாளர் அவர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை நான் பொறுமையிழந்திருந்தேன். ஆனால் அவர் சுமார் இரண்டு மாதங்கள் என்னைப் பயன்படுத்திக் கொண்டார், பின்னர் அவர் எனக்கு சத்தமிட ஆரம்பித்தார். தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்தார், எப்போதும் என்னைத் தொடுவார். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இறுதியில் தலைமை ஆசிரியரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த ஊடகவியலாளர் இராஜினாமா செய்தார். பின்னர் அவர் டெய்லி மிரரில் இணைந்தார், இப்போது அவர் சட்டம் பயின்று வருவதாக, சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள, ஊடகவியலாளர் சஹ்லா இல்ஹாம், இப்போது வெளியாகாத “பிரபல பத்திரிகை ஆசிரியர்” ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உ்ளளானதாகவும், தன்னை அமைதியாக இருக்குமாறு, தனது குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்தை விபரிக்கும் மற்றொரு ஊடகவியலாளர் காவிந்தியா தென்னகோன், தான் 15 வயது மாணவியாக சுயாதீன தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பற்கேற்றபோது ஒரு ஒப்பனை கலைஞர் தன்னை தேவையில்லாமல் தொட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி பணிப்பாளரிடம் முறைப்பாடு அளித்த பின்னர், கலைஞர் தன்னை நெருங்குவதை தவிர்த்துகொண்டதாகவும், எனினும் அவர் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் எம்டிவி தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றியபோது, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தன்னை முத்தமிடும்படி கட்டாயப்படுத்த முயன்றமை குறித்தும், அதன் பின்னர் பல மாதங்கள் தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டி ஏற்பட்ட விடயம் குறித்தும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் நடுத்தர வர்க்க ஊடகவியலாளர்களும், பின்னர் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, இலங்கையின் வெளிநாட்டு ஊடகவியலலாளர்களள் சங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டுமெனவும், மீண்டும் இவ்வாறு ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஊடகங்களையும் கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டிருந்தது.

”ஒரு சமூகம் என்ற வகையில், பணியிடங்களில் உள்ள எங்கள் சக ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் சமத்துவம் இருப்பதை உறுதிசெய்வதற்கான பொறுப்பு எங்களுக்கு காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.”

Web Design by Srilanka Muslims Web Team