ஊவாவில் ஒன்றினைந்த முஸ்லிம் கட்சிகள் தேர்தலுக்குப் பின்னரும் நிலைத்திருக்குமா? - Sri Lanka Muslim

ஊவாவில் ஒன்றினைந்த முஸ்லிம் கட்சிகள் தேர்தலுக்குப் பின்னரும் நிலைத்திருக்குமா?

Contributors
author image

A.S.M. Javid

அரசியற் கட்சிகள் சமுகப் பொறுப்புடனும் மக்கள் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டியதே அவற்றின் முதற் படிமுறையாகும். ஆனால் பல அரசியற் கட்சிகள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விலகி அரசியல் சுய இலாபங்களையும் பதவி மோகங்களையுமே தமது கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்றன.

 

மேற்படி நிலைமைகளுக்குள் அரசியற் கட்சிகள் பல சென்று கொண்டிருப்பதனாலேயே இன்று சமுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. காரணம் தேர்தல்கள் மூலம் மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் அரசியல் வாதிகளே தற்போது அதிகம் உள்ளனர்.

 

நீதி, நேர்மை, ஜனநாயக விழுமியங்கள், மக்கள் நலன்கள் எதுவுமே இன்று காணப்படுவதில்லை மாறாக ஓரளவு அரசியல் செல்வாக்குகள் வந்தவுடன் வாக்காளார்களை மறந்துவிடும் கைங்கரியங்களும், தமது இருப்புக்களை நிலை நிறுத்தவுமே அரசியல் வாதிகள் கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர்.

 

மேற்படி நிலைமைகள் அவர்கள் நேரடியாகவே வாக்காளர்களையும், தம்மை நம்பியவர்களையும் புறந்தள்ளும் நிலைமைகள் காணப்படுகின்றன. இந்த நிலைமைகள் தூக்கி எறியப்படாத வரை மக்களின் பெறுமதியான வாக்குகள் பெறுமதியற்றதாகவே கணிக்கப்படுகின்றது.

 

இவ்வாறான பல்வேறுபட்ட அரசியல் குழப்ப நிலையில் இன்று ஒரு கட்சிக்குள் இருந்து பிரிந்து சென்று எதிரும் புதிருமாக இருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மக்கள் மத்தியில் சந்தோசங்கள் காணப்பட்டாலும் பல்வேறுபட்ட விமர்சனங்களும், குற்றச் சாட்டுக்களும் கூட முன் வைக்கப்படுகின்றன.

 

மேற்படிக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் அரசியல் ரீதியாக பல தேர்தல்களில் மக்கள் நம்பி வாக்களித்து ஏமாந்ததன் காரணமாகவும் ஊவாத் தேர்தலில் மேற்படி இரு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து வாக்குக் கேட்பதில் மக்களிடத்தில் சந்தேகங்கள் வரத்தான் செய்யும்.

 

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் முக்கியமான தேர்தலாகவும் பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டதாகவும் காணப்பட்டன. காரணம் கடந்த மூன்று தஸாப்த காலமாக கொடிய யுத்தமும் அதன் மூலம் பட்ட துன்பங்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்ற அந்த பாரிய எதிர்பார்ப்புக்கள் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையின்மையினால் சிதறிப்போனதை இன்றும் தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டிய வன்னமேயுள்ளன.

 

அதிகமான கட்சிகளின் தவறான செயற்பாடுகளும், திட்டமிடப்படாத கொள்கைகளும் வாக்களித்த மக்களுக்கு கேடாக அமைந்து விடுகின்றன. மக்களின் வாக்குகளைப் பெற்றதன் பின்னர் வாக்களித்த மக்கள் அநாதைகளாகவும் அடிமைகளாகவுமே ஆன சம்பவங்களின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அரசியல் கலாச்சாரமே இலங்கையில் காணப்படுகின்றன.

 

ஜனநாயக நாடு என்றும், ஜனநாயகக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடு என்றும் பேசப்பட்ட  போதிலும் அதற்கு மாற்றமான அரசியல் கொள்கைகளையே மக்கள் இன்று அனுபவிக்கின்றனர். இதற்குக் காரணம் வாக்களிக்கும் மக்களின் அனுபவகக் குறைபாடுகளும், திட்டமிடப்படாத முடிவுகளுடன் அரசியல் வாதிகளின் கபடத் தனங்களும் பல பிரச்சினைகளுக்கு மக்களை இட்டுச் செல்கின்றன எனலாம்.

 

இலங்கையின் தேர்தல் கலாச்சாரம் இன்று போட்டித் தன்மையுடன் கூடிய அராஜகப் போக்குடையதாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பண பலமும் ஆட்பலமும் உள்ள நபர்களும் அறியல் அறிவற்ற மற்றும் போதியளவு கல்வியறிவு கொண்டவர்களும் இன்று தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். ஏதோ ஒரு வகையில் அப்பாவிகளை ஏமாற்றி அரசியல் அந்தஸ்துக்களைப் பெற்று ஆட்சியில் உள்வாங்கப்படுவதானது ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளாகும்.

 

மேற்படி நிலைமைகளின் வெளிப்பாடுகள் இலங்கையின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதிகமான உறுப்பினர்களிடத்தில் காணப்படுகின்றன. இன்று எதற்கு எடுத்தாலும் சண்டித்தனங்கள் கொண்ட அரசியல் பிரசன்னத்தையே மக்கள் காண்கின்றனர்.

 

குறிப்பாக தேர்தல்கள் நெருங்க நெருங்க மேற்படி நிலைமைகளின் உச்சக் கட்டம் வீதிக்கு வந்து விடுகின்றது. எங்கு பார்த்தாலும் ஒருவருக் கொருவர் அடிதடிகளிலுமே தமது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக நீதி நியாயமாக சிந்திக்கும் வாக்காளர்களை கவலை கொள்ளச் செய்யும் நிலைமைகள் ஏற்படுகின்றன.

 

குறிப்பாக அன்மைக்கால கணிப்பீடுகளின்படி அதிகமாக பிரச்சினைகளை தோற்றுவிப்பவர்களும், எடுத்ததற்கெல்லாம் துப்பாக்கிச் கலாச்சாரத்தை மேற் கொள்வதும் ஆளுங்கட்சிக்குள் இருக்கும் ஒரு சில அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக காணக் கூடியதாகவுள்ளது.

 

அரச அதிகாரிகளை அச்சுறுத்துவது அவர்களின் கடமைகளுக்கு இடையூறு செய்தல், ஆசிரியர்களை அடிபணியச் செய்தல், கல்விச் சமுகத்தை துன்புறுத்தல், என்பன தாராளமாகவே அரசியல் வாதிகளால் அரங்கேற்றப்பட்டு வருவதை அவதாணிக்கக் கூடியதாகவுள்ளது.

 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் அதிகமானவர்களிடம் அரசியல் அறிவும், அரசியல் அனுபவங்கள், அரசியல் முதிர்ச்சிகள் இல்லாதிருப்பதாகும். இவ்வாறானவர்களிடம் எவ்வாறு ஜனநாயக அல்லது சிறந்த அரசியற் கொள்கைகளை எதிர்பார்ப்பது?.

 

மேற்படி விடயங்களே ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரங்களின் வீழ்ச்சிக்கும், குழப்பங்களுக்கும் இட்டுச் செல்கின்றன. இவற்றைப் போக்க வேண்டுமானால் மக்கள் விரும்பும் சமுக சிந்தனையும், மக்களுக்கு உதவும் கொள்கை உடையவர்களும் அரசியலில் இனங்கானப்பட வேண்டும் அதன் மூலமே மக்கள் ஜனநாயக இலக்குகளை அடைந்து கொள்ள முடியும்.

 

பொதுவாக எந்தத்த தேர்தல்களாக இருந்தாலும் அத்தேர்தல்களுக்கு எல்லாம் பொதுமக்களின் பெருந் தொகையான பணமே செலவிடப்படுகின்றன. இவ்வாறு செலவிடப்பட்டும் அந்த செலவீனங்களால் மக்கள் எந்தப் பயனையும் அடைவதில்லை மாறாக அரசியல் வாதிகளே தமது கைகளை நிறைத்துக் கொள்கின்ற அல்லது அவற்றை அனபவித்துக் கொள்கின்ற தேர்தல் கலாச்சாரமே காணப்படுகின்றன.

 

இலங்கையின் தேர்தல் செலவுகளே நாட்டின் வறுமைக்கும், விலைமட்டங்களின் அதிகரிப்புக்களுக்கும் முதற் காரணங்களாக அமைகின்றன். இதன் காரணமாக சாதாரண மக்களே அதிகம் பாதிப்புக்களை அடைவதுடன் மேலும் மேலும் வறுமைக் கோட்டிற்குள் செல்வதற்கும் படிகளாய் அமைகின்றன.

 

இவாறான மக்களை அவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் பணத்தை அள்ளி வீசி ஏமாற்றக் கூடிய நிலைமைகள் காணப்படுவதால் அரசியல் வாதிகள் நினைத்த மாதிரி எல்லாம் தாளம் போட்டு மக்களை ஏமாற்றி நாட்டை குட்டிச் சுவராக்குகின்றனர்.

 

குறிப்பாக ஊவா மாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் அப்பகுதிக்கு அரசியல் காய்ச்சல் பிடித்துள்ளது. இதவரை காலமும் கண்டு கொள்ளப்படாத ஒரு பகுதியில் தேர்தல் நடத்தப்படவிருப்பதால் அரசாங்கம் தேர்தலை அறிவித்து தமது இருப்பைத் தக்க வைக்க காய்களை நகர்த்தி வருகின்றதாகவும் பொதுப் பணம் தேவையற்ற விதத்தில் செலவிடப்பட்டு வருவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

 

ஊவாத் தேர்தலைப் பொருத்த வரை பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கியதான ஊவா மாகாண சபைத் தேர்தலில்  ஆளுங் கட்சியின் சார்பாக எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் உள்வாங்கப்படாது அரசாங்கம் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை முஸ்லிம் சமுகத்தை வியப்படையச் செய்துள்ளதுடன் பாரிய சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதுவரை காலமும் அரசுடன் கைகோர்த்த முஸ்லிம் அரசியற் கட்சிகளுக்கு தற்போது அரசின் சார்பாக எந்தவொரு ஆசனமும் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளமை இனவாதத்தின் மற்றுமொரு அங்கமாகவே கருத வேண்டியுள்ளதாக முஸ்லிம் வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இவ்வாறு வேட்பாளர்களை உள்வாங்காது புறக்கணிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் குழப்ப நிலையைத் தோற்று வித்துள்ளதுடன் அரசின் மீதான நம்பிக்கைகளை மக்கள் இழக்க வேண்டியதொரு நேரமாகவும் ஊவாத் தேர்தல் அமைகின்றது.

ஊவாவில் முஸ்லிம் மக்களின் ஒருமித்த வாக்குகளை பெற வேண்டுமானால் ஏமாற்றங்களும் சூழ்ச்சிகளும் இடம்பெறாது    என்ற உத்தரவாதம் சரியான முறையில் ஒன்றினைந்துள்ள முஸ்லிம் கட்சிகள் வழங்குமானால் ஊவாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிமானவர்கள் மத்தியில் இருக்கின்றமையையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

 

இத்தேர்தலிலும் முஸ்லிம் சமுகம் தமது பெரும்பான்மையைக் காட்டாத பட்சத்தில் அது இனவாதிகளுக்கு வாய்க்கு பொரி போட்டமாதிரி அமைந்துவிடும். முஸ்லிம் சமுகத்தைப் பொருத்தமட்டில் தம்புள்ளை தொடக்கம் தர்ஹா நகர் வரையும் அதனைத் தொடர்ந்து தற்போது திருகோணமலை கரிமலையூற்று பள்ளிவாசல் அழிக்கப்பட்டது  வரையான அடாவடித்தனங்கள் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதால் எவ்வாறு முஸ்லிம் சமுகம் அரசின் பக்கம் வாக்களிக்க முடியும்?.

 

அரசாங்கம் சிறுபான்மை மக்களை தமது அரசியல் நாடகங்களுக்கு இதுவரை காலமும் பகடைக்காய்களாகவே ஆக்கி வந்தனர். ஆனால் இனிவரும் காலங்களில் அந்த நிலைமைகளை அரசு பெற்றுவிட முடியாது காரணம் இனவாதத்தின் தாண்டவத்தை யாரும் விரும்பியது இல்லை அதற்கு நல்லதொரு உதாரணம்தான் கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசு பல ஆசனங்களை இழக்க வேண்டியேற்றபட்டது.

 

இனவாதத்திற்கு துனைபோனமை, அவற்றை இன்று வரை கட்டுப்படுத்த முடியாமை மற்றும் பல மதவிடயங்களின் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் மக்கள் ஊவாவில் முடிந்தளவு சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும் எனவும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

 

ஊவாத் தேர்தல் பல படிப்பினைகளையும், பெரும்பான்மையை அவர்களின் கபடத் தனங்களில் இருந்து விடுபடவும் வைக்கும் ஒரு தேர்தலாக மாற்ற வேண்டியது சிறுபான்மை மக்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது கைகளிலேயே உள்ளது.

 

முஸ்லிம்களைப் பொருத்த வரை இனியும் இனவாதத்திற்கு அடிபணிய முடியாது மாறாக சுய கௌரவம், சமய விழுமியங்களைப் பாதுகாத்தல், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு என்பனவற்றை நிலை நிறுத்த வேண்டுமானால் வாக்காளர்களின் பொறுப்பாக இருப்பதுடன் தேர்தலில் குதித்துள்ள முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுமதி மிக்கனவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 

எனவே ஊவாத் தேர்தலின் பின்னரும் இணைந்தள்ள முஸ்லிம் கட்சிகள் தமது ஒற்றுமையை சீர் குலைத்து விடாது முஸ்லிம் சமுகத்தை வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கடப்பாடும்  இரு முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர் பார்ப்பாகும்.

Web Design by Srilanka Muslims Web Team