ஊவா மாகாண சபைத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம். - Sri Lanka Muslim

ஊவா மாகாண சபைத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம்.

Contributors

-சத்தார் எம் ஜாவித்–    (புகைப்படம் – சமுகநோக்கு)

 

ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு கபட நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றியிருப்பதாக முஸ்லிம் மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

 

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கியதான ஊவா மாகாண சபைத் தேர்தலில்  ஆளுங் கட்சியின் சார்பாக எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் உள்வாங்கப்படாது அரசாங்கம் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை முஸ்லிம் சமுகத்தை வியப்படையச் செய்துள்ளதுடன் பாரிய சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதுவரை காலமும் அரசுடன் கைகோர்த்த முஸ்லிம் சமுகத்திற்கு தற்போது கெட்டகாலம் ஆரம்பித்துவிட்ட நிலைமைகளையே ஊவாமாகாண சபைத் தேர்தல் புறக்கணிப்பு வெளிகாட்டி நிற்கின்றது.

 

மேற்படி தேர்தல் புறக்கணிப்புக்களின் பின்னணிகளை பார்க்கும் போது அன்மைக் காலமாக முஸ்லிம் சமுகத்திற்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மறக்க முடியாத விரும்பத் தகாத சம்பவங்களின் ஒரு அங்கமாக அமைந்து விட்டதோ என்ற ஐயமே தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக முஸ்லிம் சமுகம் கருத வேண்டியுள்ளது.

 

கடந்த இரண்டரை வருட காலமாக முஸ்லிம் மக்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் இனவாதம் தாண்டவமாடியதால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நீதியும், நியாயமும் சம்பந்தப்பட்டவர்களிடமும் அதற்குப் பொறுப்பானவர்களிடமும் கேட்ட போதெல்லாம் உதறித் தள்ளப்பட்டு இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறுபான்மைச் சமுகமான முஸ்லிம் சமுகத்தை கிள்ளுக் கீரையாக நினைத்து மேலும் மேலும் அநியாயங்களுக்கு இடங் கொடுத்ததன் விளைவு இன்று அரசுடன் இணைந்திருந்த முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்து தமது அரசியல் பலத்தைக் காட்ட ஊவாத் தேர்தலில் களமிறங்க வைத்துள்ளது.

 

எனினும் ஆளுங்கட்சி சார்பாக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட உள்வாங்க விரும்பாத அரசு முஸ்லிம் சமுகத்திற்கு எவ்வாறு உதவப் போகின்றது?. இவ்வாறான புறக்கணிப்பு  நிலைமைகளே இனிவருங் காலங்களில் முஸ்லிம் சமுகத்திற்கு இந்த ஆளும் அரசாங்கத்தால் கிடைக்கப் போகும் பரிசாகும் என்பதனையே ஊவா மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் அவர்கள் மேற்கொண்ட விடயங்கள் காட்டி நிற்கின்றன.

 

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் கட்சிகள் தமது எதிர் கால அரசியல் இஸ்திரத் தன்மையை கருத்திற் கொள்ளாது முற்றிலும் அரசை நம்பியதன் விளைவு இன்று ஆதரவு வழங்கி ஆட்சியை உறுதிப்படுத்தியதன் கைங்கரியங்கள் முஸ்லிம் சமுகம் மீதும் இஸ்லாத்தின் மீதும் காட்டுமிறாண்டித் தனங்காட்ட வழி வகுத்துவிட்டது.

 

கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மைச் சமுகங்கள் என்ற வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தீர்க்கமான முடிவுகளை எடுத்து ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் இன்று அரசாங்கத்திற்கு சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் பலம் ஒரு சவாலாகவும் பேரம் பேசும் சக்திகளாகவும், தமது உரிமைகளை வென்றெடுக்கும் சக்திகளாகவும் அமைந்திருக்கும் என்பதே கல்விமான்களின் கணிப்பாகும்.

 

இந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தைப் பார்த்த முஸ்லிம் கட்சிகள் மக்களின் நலன்களில் சிறிதளவேனும் கவனஞ் செலுத்தவோ அல்லது மக்களின் கருத்துக்களை உள் வாங்கவோ தவறி விட்டன. அன்று விட்ட மாபெரும் தவறு இன்று பெரும்பான்மை சிறுபான்மை மக்களை நசுக்குவதற்கும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கவும் வழி வகுத்துவிட்டது.

 

மேற்படி நிலைமைகள் தொடருமானால் எதிர் காலத்தில் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் அரசியல் பலமற்ற ஒரு சமுகமாக பெரும்பான்மையின் அடக்கு மறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.

 

தற்போது ஊவாத் தேர்தலில் முஸ்லிம் சமுகம் வாக்களிப்பதில் பாரிய சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மேற்படித் தேர்தலில் இனவாத்திற்கு எதிரான எண்ணக் கருக்களே முஸ்லிம் மக்களிடத்தில் அதிகம் காணப்படுகின்றன. இந்த வகையில் அரசுடன் இதுவரை காலமும் ஒட்டிக் கொண்டும் அதனுடன் ஆட்சியில் அமைச்சர்களாக பங்கெடுத்துக் கொண்டிருக்கும் இரு பெரும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றினைந்து தனித்துக் கேட்பதால் அவர்களுக்கு வாக்களிப்பதிலும் முஸ்லிம் மக்கள் சந்தேகங்களும் கொண்டுள்ளனர்.

 

இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதால் அந்தக் கட்சிகளின் வாக்குப் பலத்தை குறைப்பதற்கான பல மறைமுகமான முயற்சிகளை ஒரு சில ஆளுந்தரப்பு அரசியல் வாதிகளும், எதிர்க்கட்சிகளும் தமது நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் வேளையில் மறு புறத்தில் தமது வாக்குகள் வீணாக்கப்பட்டு விடுமோ என்ற ஐயமும் நிலவுகின்றது.

 

காரணம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு மேற்படி இரு முஸ்லிம் கட்சிகளும் மீண்டும் அரசுடன் ஒட்டிக் கொண்டு மீண்டும் முஸ்லிம்கள் மீதான அடாவடித் தனங்களுக்கு துணை போய்விடுமோ என்பதிலும் போதியவு நம்பிக்கை அற்றவர்களாகவே முஸ்லிம்கள் காணப்படுகின்றனர்.

 

இவ்வாறு மக்கள் மத்தியில் குழப்ப நிலை இருக்கும்போது மக்களை சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றவும் மக்களுக்கு உறுதியான வாக்குறுதிகளை வழங்கவும் எதிர் காலத்தில் இனவாதத்தை ஒழிப்பதற்காகவும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியதொரு முக்கிய தருணத்தில் இருக்கின்றன.

 

ஊவாவில் முஸ்லிம் மக்களின் ஒருமித்த வாக்குகளை பெறவேண்டுமானால் ஏமாற்றும், சூழ்ச்சிகளும்  ஏற்படாது என்ற உத்தரவாதம் சரியான முறையில் ஒன்றினைந்துள்ள முஸ்லிம் கட்சிகள் வழங்குமானால் ஊவாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிமானவர்கள் மத்தியில் இருக்கின்றமையையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

 

முஸ்லிம் சமுகத்தைப் பொருத்தமட்டில் தம்புள்ளை தொடக்கம் தர்ஹா நகர் வரையும் அதனைத் தொடர்ந்து தற்போது திருகோணமலை கரிமலையூற்று பள்ளிவாசல் அழிக்கபப்ட்ட  வரையான அடாவடித்தனங்கள் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதால் எவ்வாறு முஸ்லிம் சமுகம் அரசின் பக்கம் வாக்களிக்க முடியும்?.

 

மதவாதம் அரசின் ஆசீர்வாதத்துடன் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதன் எதிரொலி இன்று சர்வதேசம் வரை இலங்கைக்கு அவப்பெயரை மட்டுமல்லாது பல  அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அந்த நாடுகள் இலங்கையின் குற்றவியல் விடயங்களில் அதிக அக்கறை காட்டுவதும் இலங்கையின் சாபக் கேட்டிற்கும், கெடுபிடிகளுக்கும் வழிவகுத்துள்ளது.

 

அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய அதிகமான அரசியல் பிரமுகர்களும் இதுவரை காலமும் இஸ்லாத்திற்கு எதிராக அரசின் ஆசீர் வாதத்துடன் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிராக ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கைகளும் எடுத்திராத நிலையில் ஊவாவின் தேர்தல் இன்று பல கோணங்களில் அரசியல் வாதிகளை சிந்திக்கவும் தடுமாறவும் வைத்துள்ளது.

 

அரசாங்கம் சிறுபான்மை மக்களை தமது அரசியல் நாடகங்களுக்கு இதுவரை காலமும் பகடைக்காய்களாகவே ஆக்கி வந்தனர். ஆனால் இனிவரும் காலங்களில் அந்த நிலைமைகளை அரசு பெற்றுவிட முடியாது காரணம் இனவாதத்தின் தாண்டவத்தை யாரும் விரும்பியது இல்லை அதற்கு நல்லதொரு உதாரணம்தான் கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசு பல ஆசனங்களை இழக்க வேண்டியேற்றபட்டது.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் பெற்ற ஆசனங்களில் 17 ஆசனங்களை 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பறிபோயின. இதற்கு முக்கிய காரணங்கள் பொதுபல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தாது  வேடிக்கை பார்த்தமையெல்லாம் மேல்மாகாணத்தில் அவர்களின்  வீழ்ச்சிக்கு காரணமான விடயங்களாகும்.

 

மேற்படி நிலைமைகளின் மற்றுமொரு ஆசன இழப்பிற்கு அன்மைய அளுத்கம மற்றும் பேருவளைச் சம்பவங்கள் காரணமாக அமைகின்றன. அந்த கொலைக் கலாச்சாரத்தின் விளைவு அரசுக்கு சாபகடகேடாகவே அமையப் போகின்றது என முஸ்லிம் கல்விமான்கள் தெரிவிக்கின்றனர்.

 

எந்தவொரு நாட்டிலும் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசாங்கங்கள் வெற்றி பெற்ற சந்தர்ப்பங்கள் பெரிதாக இல்லை அவ்வாறு அவை வெற்றி பெற்றாலும் நிலைத்திருப்பதும் இல்லை. இந்த வகையில் ஊவா மாகாண சபைத் தேர்தலும் இனவாத்திற்கு பாடம் புகட்டும் ஒரு தேர்தலாக மேற்படித் தேர்தல் அமையலாம்.

 

அரசியல் பலத்திற்கும் அதன் பெரும்பான்மைக்கும் வேட்டு வைக்கும் பொதுபல சேனா, ராவணபலய, ஜாதிக ஹெல உறுமைய என்பன இன்று இந்த அரசாங்கத்தை குழப்பி தமது அடாவடித்தனக் கும்பல்களை உள்வாங்க மறைமுகமான பிரயத்தனங்களை அப்பாவி கிராமத்து பௌத்த மக்களிடத்தில்  பிரச்சாரங்களையும், போதனைகளையும் செய்கின்றனர்.

 

இந்த நிலைமைகளில் ஊவா மாகாண சபைத் தேர்தல் முஸ்லிம் மக்களுக்கு முக்கியமான தேர்தலாக இருப்பதுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதானமாக தமது வாக்குகளை அளிப்பதன் மூலமே இருக்கும் வாக்குகளை வைத்து வெற்றி பெறலாம்.

 

இனவாதம், மதவாதம் என்பனவற்றுடன் அரசியல்  புறக்கணிப்புகளுக்கும் எதிராக செயற்பட வேண்டிய காலத்தில் முஸ்லிம்கள் ஊவாவில் ஒரு மாகாண சபைத் தேர்தலை எதிர் கொள்ளவுள்ளமை அனைவராலும் ஆவலாக எதிர் பார்க்கப்படுகின்றன.

 

எனவே முஸ்லிம் இறுதி நேரம் வரை மதில் மேல் பூனைபோல் இல்லாது உடநடியாக தமது தீர்க்கமான முடிவுகளை எடுத்து அரசியல் சுய நலன்களுக்கு விலை போகாது தமது பெறுமதியான வாக்குகளை புறக்கணித்தவர்களை ஓரங்கட்டும் ஒரு தேர்தலாக கருதி வாக்களிக்க வேண்டும் என்பதே தற்போதைய தேவைப்பாடாகும்.

Web Design by Srilanka Muslims Web Team