'ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவம்' - ஆசிரியர் கருத்து - Sri Lanka Muslim

‘ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவம்’ – ஆசிரியர் கருத்து

Contributors
author image

Editorial Team

ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டமானது ஒன்பது தேர்தல் தொகுதிகளையும் மொனராகல மாவட்டம் மூன்று தேர்தல்தல் தொகுதிகளைக் கொண்டுள்ளன. பதுளை மாவட்டம் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ளதுடன். முஸ்லிம் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் ,முஸ்லிம்களின் வியாபாரம், நிலவுடைமை என மொனராகல மாவட்டத்தை விட பதுளை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாழ்வியலை அவதானிக்கலாம்.  குறிப்பாக பதுளை மாவட்டத்தில் சில்மியாபுரம் ,குருத்தலாவ ,பண்டாரவள, வெலிமடை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம் சனப் பரம்பல் அதிகமாக காணப்படுகின்றன. ஊவா மாகாணத்தில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாகக் காணப்பட்டாலும் எல்லா இனத்தவர்களுடனும் பிரிக்கப்பட முடியாத இணைந்த வாழ்க்கை அமைப்பை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர் என்பது இங்கு விஷேட அம்சமாகும்.

 

ஊவா மாகாண முஸ்லிம்களின் அரசியல் பிரதிநித்துவமானது எண்ணிக்கையிலிருந்து பூச்சியத்திற்கு நகர்ந்து கொண்டிருப்பதை அறியாதவர்களாக இம்முஸ்லிம்கள் இன்னும் இருக்கின்றார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய நிலவரமாகும். இது தேர்தலுக்கு மாத்திரம் பேசிவிட்டு கசக்கிப்போடும் விடயமும் அல்ல. இலங்கை முஸ்லிம்கள் எனும் பிணைப்பினுள் உள்ளடங்கும் ஊவா முஸ்லிம்கள் தொடர்பில், ஊவா முஸ்லிம்கள் மாத்திரம் அன்றி தேசிய ரீதியான முஸ்லிம்களால் கவன ஈர்ப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயமாகும்.

 

கடந்த காலங்களில் ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெற முடியாமல் ஊவா முஸ்லிம்கள் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 வருடமாக ஊவா முஸ்லிம்களின் அரசியல் இருப்பு தொடர்பில் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் தொடக்கம் கடைக்கோடி சாமானியன் வரை சிந்திக்காமல் 20 வருடத்தை தின்று தீர்த்து கழிவிறக்கம் செய்து விட்டனர் என்பதிலிருந்து ஊவா முஸ்லிம்களும் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் பிழையான திசையை நோக்கி பயனிக்கின்றார்கள் அல்லது வழி நடத்தப்படுகின்றார்கள் என்பது தெளிவு.

 

அதிகமான வாக்குகளைக் கொண்டிருந்த முஸ்லிம்களால் மாகாண சபைக்கான ஒரு முஸ்லிம் ஆசனத்தையும் கைப்பற்ற முடியாமல் போனது ஏன்?

 

குறிப்பாக எமது முஸ்லிம் வாக்களார்கள் தேர்தல் காலங்களில் தேர்தல் கதையாடல்களில் ஈடுபடும் மும்மூரம் தேர்தலில் வாக்களிப்பதில் காட்டுவதில்லை. 2009 ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் குறைந்த வீதமான வாக்காளர்களே வாக்களிப்பில் ஈடுபட்டதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. இவ் வாக்களிப்பு வீதமானது ஊவா மாகாணத்தில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் இருப்புக்கு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.

 

இங்கு ஊவா மாகாண முஸ்லிம்களிடத்தில் பொதுக் கேள்வி ஒன்று இன்னும் தோற்றம் பெறவில்லை. முஸ்லிம்கள் சிங்களப் பிரதிநிதிகளுக்கு வாக்களித்தனர். சிங்களவர்கள் முஸ்;லிம் பிரதிநிதிகளுக்கு வாக்களித்தனர். இருந்தும் ஏன் பரிமாற்ற அடிப்படையில்  வாக்களிப்பு நடைபெற்றும் ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநித்துவம் தெரிவு செய்யப்படவில்லை என்று

 

ஊவா மாகாணத்தில்  முஸ்லிம்களுக்கான பிரதிநித்துவத்தை இழந்துள்ளார்கள்.. இங்கு முஸ்லிம்கள் அளித்த வாக்குகளைக் கொண்டு சிங்களப்பிரதிநிதிகள் தெரிவானார்கள். அதே போன்று முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு சிங்களவர்கள் அழித்த வாக்குகளால் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வி கணக்குகளானது, தேர்தல் முடிவுகளுடன் புதைந்தே போய்விட்டன.

 

அதே போன்று எமது மூதாதேயர்கள் யாருக்கு ஆதரவளித்தார்களோ அதே வழிமுறையை பின்பற்றுபவர்களாக ஊவா முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். ஊவா மாகாணத்தில் எமது முஸ்லிம்களின் வாக்குகள் சிங்கள இனத்தவர்களுக்கும் தேசிய கட்சிகளுக்கும் அளிப்பதன் மூலம்   பிளவுபடுகின்றன. இதன் காரணமாக ஊவா மாகாண முஸ்லிம்களால் முஸ்லிம் பிரதிநித்துவத்தின் சமகாலத் தேவை தொடர்பில் சிந்திக்க முடியாமல் உள்ளது.

 

அதேபோன்று ஊவா முஸ்லிம்கள் சிங்கள பிரதிநிதிகளுக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிமைச் சீட்டு எழுதப்பட்டவர்கள் போல் ஊவா மாகாண முஸ்லிம் சமுகத்தின் அரசியல் சிந்தனை காணப்படுகின்றது. இது சில அரசியல் இயங்கு நிலையில் தவறில்லை

 

ஆனால் ஊவா மாகாண முஸ்லிம்கள் ஒரு விடயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால் ஐக்கி மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய ஆகிய இரு கட்சிகளில் நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஊவா முஸ்லிம்கள் அளிக்கும் வாக்கிலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநித்துவத்தையாவது  பெறுவதற்கான சாதகத்தன்மை இருக்கின்றதா என்று. ஏனெனில் முஸ்லிம்களை விட சிங்கள, இலங்கை தமிழ் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகள் அதிகமாக உள்ளதால் பெரும்பான்மை கட்சியிலிருந்து முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெறவேண்டுமாயின் முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளையும் அதிகம் முஸ்லிம் பிரதிநிதிகள் பெறவேண்டும். இதற்கான சாதகத்தன்மை குறைவு.

 

 ஊவா முஸ்லிம்களின் வாக்குகள் ஏதாவது பெரும்பான்மைக் கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் பிரதிநிதிக்கு கட்டியாக அளிக்கப்பட வேண்டும். இதற்கான சாதகத்தன்மையும் மிகக் குறைவு. இதனால் முஸ்லிம் பிரதிநித்துவமானது ஏதாவது ஒரு சிறுபான்மைக் கட்சிக்கு கிடைப்பதற்கான சாதகத்தன்மை அதிகம் உள்ளது.
 
ஊவா மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் காத்திரமான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.  ஊவா முஸ்லிம்களுக்கு எதிராக பேரீனவாதிகளால் மேற்கொள்ளப்படும் சவால்களை முறியடிக்கக் கூடியதும் இன ஒற்றுமையுடன் சமுக சிந்தனையுடன் செயற்படக் கூடிய அரசியல்  தலைமைத்துவமே ஊவா முஸ்லிம்களின் உடனடித் தேவையாகவுள்ளது.

 

இதனை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
எவ்வாறான அரசியல் முன்னெடுப்புக்கள் மூலம் ஊவா முஸ்லிம்கள் ஏனைய இன மக்களுடன் சுமுக உறவு முறையை எவ்வாறு கட்டியெடுப்ப முடியும்? தேர்தல் கால வாக்கு சேகரிப்புடன் முடிந்து போகும் அரசியல் முறைமையிலிருந்து விடுபட்டு நீடித்திருக்கக் கூடிய தனிமனித மேம்பாட்டுக்கு பொருத்தமான செயல் நெறி என்ன? தனிமனித அரசியல் தலைமைத்திலிருந்து சமுக மயமாக்கப்படுவதற்கு இன்றியமையாத முக்கிய கூறுகளும் அதனை  அடைந்து கொள்வதற்கான ஊவா மக்களின் அர்ப்பணிப்புக்களும் யாது? போன்ற பல கேள்விகள் ஊவா மாகாண முஸ்லிம்கள் எழுப்ப வேண்டியுள்ளது.

 

 ஏனெனில் நாளை நடைபெறப் போகும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் வழமை போன்று ஊவா முஸ்லிம்களை ஏமாற்ற அரசியல் வாதிகளின் பிரசன்னம் ஆரம்பமாகிவிட்டது என்பதால், ஊவா மாகாண முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் மாற்றம் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

 

இந்த நிலையில் ஊவா முஸ்லிம்கள் எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டும். ஊவா முஸ்லிம்களின் அரசியல்  மிகவும் பிற்போக்கான நிலையில் உள்ளது. ஊவா முஸ்லிம்கள் ஊவா அரசியல் நிலவரம் பற்றிய விவாதங்களை எம்மத்தியில் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் அரசியல் வாதிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் முகமூடிகளை அணியக்கூடியவர்கள். இவர்கள் பச்சோந்திகள். முஸ்லிம் அரசியல் வாதிகளிடம்  எல்லா வர்ணங்களும் உண்டு.  இதில் ஊவா முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

 

இலங்கை முஸ்லிம்களின்  இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பேரீனவாதிகளின் நகர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சிநிரலில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சட்டங்கள், நீதிமன்றங்கள் ,காவல்துறைகள் இருந்தும் இலங்கை முஸ்லிம்களுக்கு எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற அச்ச உணர்வு எம்மை பீடித்துள்ளது.  இங்கு நடப்பவைகள் எதுவும் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையவில்லை. இதனால் இன்று ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் இருண்ட மனநிலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.

 

இவ் அரசாங்கத்தின் அரசியலுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை கட்டியம் கூறுவது போல் உள்ளது ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஜே.வி.பி.யினதும் முஸ்லிம் தொடர்பான அரசியல் செயற்பாடுகள். ஊவா மாகாண முஸ்லிம்கள் உட்பட இலங்கை முஸ்லிம்கள் சிங்கள பேரீனவாதிகளின் நசுக்குதலுக்கு உட்படும் போது ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி என்பன  எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை ஊவா மாகாண முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது. முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தும் முஸ்லிம்களுக்காக இவர்களால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் மிகவும் குறைவு.  முஸ்லிம்கள் தாக்கப்படுவது வெளிப்படையாக அறிந்திருந்தும் அதற்காக இயங்காமல் விட்டதானது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. என்பவற்றின் சுயநல அரசியலே தவிர வேறொன்றுமில்லை.

 

அரசாங்க நிகழ்ச்சி நிரலை பின்பற்றி சிங்களவர்களின் வாக்குகளை அதிகம் பெறுவதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை எதிர்கால அரசியல் தேவை கருதி அரசாங்கம் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோபமும் சாபமும் அரசாங்கத்தின் பக்கம் செல்கின்றன. ஆனால் அரசாங்கம் செய்யும் அதேவேலையைத்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் செய்கின்றது. அதிகார சக்திகளின் தவறுக்கு எதிராக மௌமனமாக இருப்பதானது அந்த தவறை அங்கிகரிப்பதற்கு சமன். என்பதை ஊவா முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளை வெறுக்க வேண்டும் அந்த இடைவெளியை தாங்கள் நிரப்பிக் கொள்ளலாம் என்பதில் UNP,JVP உறுதியாக காய் நகர்த்துகின்றார்கள்

 

பொருளாதார, சமூக பின்னடைவுகளிலிருந்து ஊவா மாகாண முஸ்லிம்கள் சரியான பாதையை நோக்கி நகர வேண்டியுள்ளது. 20வருடங்கள் மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவம் இன்றி நாம் காலம் கடத்தி விட்டோம். இனியும் நாம் நிமிடங்களை வீணடிக்க முடியாது.

 

நமக்கான எதிர்காலத்தை நாம் தான் தயாரிக்க வேண்டும். நமக்கான அரசியல் கட்டமைப்புகளை நாம்தான் வடிவமைக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வருவது போல் தேர்தலுக்கு மாத்திரம் எமது பிரதேசங்களுக்கு வருபவர்கள் இனி எமக்கு வேண்டாம். ஊவா மாகாண முஸ்லிம்கள் ஊவா மாகாண முஸ்லிம்களின் கட்டமைப்பால் தான் ஆள்பபட வேண்டும். ஊவா மாகாண முஸ்லிம்களாகிய நாம் அரசியல் வியாபாரிமார்களால் அடகுவைக்கப்பட்ட எமது தலையெழுத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. இதனால் ஊவா மாகாண முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தை திட்டமிட்டு பயன்படுத்தாவிட்டால் எமது எதிர்கால பேரர்கள் எமது ஒவ்வொருவருவரின் முகத்திலும் காறி உமிழ்ந்து விடுவார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.  இவ்வாறான பிற்போக்கு அரசியல் நிலையிலிருந்து விடுபட்டு ஊவா முஸ்லிம்கள் புதிய அரசியல் துவக்கத்தை முன்னெடுப்பது தற்போதைய இயங்கு நிலைக்கு அவசியமாகவுள்ளது.

 

தேர்தல் காலங்களில் சமுகத்தைப் பற்றி சிந்திக்கின்ற புதியவன் ஒருவன் இலட்சியங்கைளை எழுத்துக்களாக அச்சடித்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சமுக விடுதலையை சுமந்து கொண்டு செல்கின்றான்.எதிர்வினையாக பல மிருகங்கள் கால்களை தூக்கி அவ் இலட்சிய சுவரொட்டிகளை நனைத்து விட்டு செல்கின்றன. ஆனால் ஊவா முஸ்லிம்களாகிய நாம் ஒரு துறவியைப் போல் இரண்டு எதிர்வினைகளையும் எவ்வித நோவினையுமின்றி ஏற்றுக் கொள்கின்றோம். இச் செயற்பாடுதான் ஊவா மாகாண முஸ்லிம்களின் முஸ்லிம் அரசியல் பிரதிநித்துவம் பூச்சியத்தை நோக்கி நகர்ந்ததற்கு காணரமாகும்.  ஊவா மாகாண முஸ்லிம்கள் மாற்றங்களை புணர வேண்டும். இது தான் எமக்கு விடுதலையைத் தரும்.

 

யார் உண்மையான இலட்சியங்கள் ,கொள்கைகள் ,போராட்ட குணங்களுடன் சமுக பற்றுடன் வருகின்றார்களோ அவர்கள் அங்கி கரிக்கப்பட வேண்டியவர்கள். இங்கு அங்கிகரிக்கப்பட  வேண்டியவர்கள் அங்கிகரிக்கப்படாமல் தட்டிக்கழிக்கப்படுபவர்களாகவும்   சமுக சிந்தனையின்றி கண்ட கண்ட இடங்களில் கால்களை தூக்கி நனைக்கும் குணமுள்ளவர்கள் துரத்தப்பட வேண்டியவர்கள் ஆனால் அவர்கள் எதிர்க்கப்பட்டு துரத்தப்படாமலும் இருப்பதானதே ஊவா மாகாண முஸ்லிம்களுக்கென்று முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெறமுடியாமல்முடியாமல் போனமைக்கான காரணமாக இருக்கலாம். எனவே மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெறுவதற்கு ஊவா முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? எமது தெரிவு எதுவாக இருக்க வேண்டும்? அவர்களின் தரம் என்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் பெற வேண்டியுள்ளது.

 

பாதாள படுகுழியில் தள்ளிவிடப்பட்டுள்ள ஊவா முஸ்லிம்களை மீட்டெடுக்க இன்னுமொரு படுகுழியால் முடியாது ஒரு பள்ளத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காக படுகுழியில் உள்ள அரசியல் கட்சிகளால் ஊவா முஸ்லிம்களின் தேவைகைள களைய முடியாது. மேட்டினால் தான் பள்ளம் நிரப்பப்பட முடியும் என்ற இயற்கையின் விதிக்கமைய தீர்க்கமான சிந்தனையுடனும் சமுகப் பற்றுடனும் செயற்படும்   அரசியல் சிந்தனைகளின் வருகை, இன்ஷா அல்லாஹ் ஊவா மாகண முஸ்லிம்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதற்காக ஊவா மாகாண முஸ்லிம்களுக்கு முஸ்லிம் பிரதிநித்துவம் என்ற கோசத்துடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

 

ஊவா முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிப்பதில் சாதகத்தன்மை அதிகம் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில்  எல்லா அரசியல் வாதிகளும் கட்சிகளும் ஒன்றுதான். எந்த வேறுபாடும் இல்லை. இருந்தும் இரட்டை இலைச் சின்னத்தையும் அரசியல் அறிக்கைகளையும் நாம் ஓரளவு கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு ஒற்றுமை மற்றும் ஊவாவுக்கு முஸ்லிம் பிரதிநித்துவம் என்ற வாசகங்கள் முதன்மை அடைவதால்.  
இன்று ஊவாவில் ஏற்பட்டுள்ள ஒற்றுமைக் கூட்டானது நாளை தேசிய அளவில் பரனமிக்க, ஊவா முஸ்லிம்கள் இரட்டை இலையை கருத்தில் கொள்வது இன்றைய தேசிய அரசியல் நிலைக்கு அவசியமானதாக இருக்கும் என அரசியல் விமர்சகர்களின் கருத்தாக அமைகின்றது.

 

ஏனெனில் இவர்கள் வெற்றி பெற்று இக் கூட்டு நாளை உடைந்துவிட்டால் இவர்களின் சுயநல முகமூடிகளை தேசிய ரீதியாக முஸ்லிம்களுக்கு அடையாளப்படுத்தியவர்களாக ஊவா முஸ்லிம்கள் இருக்கப்போகின்றார்கள். இவ் அரசியல் கூட்டின் ஒற்றுமை நீடித்தால் தேசிய முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு அடித்தளமிட்டவர்களும் நீங்கள்தான் நீங்கள்தான் ஊவா முஸ்லிம்களாகிய நீங்கள்தான்

Web Design by Srilanka Muslims Web Team