ஊவா வன்முறைகள் தொடர்பில் கட்சிகளை சந்திக்கிறார் ஆணையாளர் - Sri Lanka Muslim

ஊவா வன்முறைகள் தொடர்பில் கட்சிகளை சந்திக்கிறார் ஆணையாளர்

Contributors

-எம்.எஸ். பாஹிம்– (TK)

 

ஊவா மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் கடந்த சில தினங்களில் அதிகரித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்த தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

 

இந்த வாரத்தில் ஐ.ம.சு.மு, ஐ.தே.க., ஜே.வி.பி. ஜனநாயகக் கட்சி ஆகிய பிரதான கட்சிகளை ஆணையாளர் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்ட தினம் முதல் இன்று வரை தேர்தல் திணைக்களத்துக்கு 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. கடந்த சில நாட்களிலே வன்முறைகள் அதிகரித்துள்ளதாக திணைக்கள முறைப்பாட்டுப் பிரிவு கூறியது.

 

இந்த முறைப்பாடுகளில் மொனராகலையில் இருந்து 38 உம் பதுளையில் இருந்து 16 உம் பொதுவான முறைப்பாடுகள் 6 உம் கிடைத்துள்ளன. இவற்றில் 51 முறைப்பாடுகள் சிறு சிறு சம்பவங்கள் தொடர்பானவை எனவும் அச்சுறுத்தல் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் தாக்குதல் தொடர்பில் ஒரு முறைப்பாடும் சொத்து சேதம் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை பொலிஸாருக்கு அனுப்பப்பட்டு விசாரிக்கப்படுவதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

 

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடந்த வாரம் பதுளை மற்றும் மொனராகலை பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். பிரதான கட்சிகள் தேர்தல் சட்டக்களை மீறுவதாக அவர் குற்றஞ் சுமத்தியிருந்தார்.

 

இந்த நிலையில் வன்முறைகளை மட்டுப்படுத்துவது தொடர்பாகவும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவது குறித்தும் பிரதான கட்சிகளை தனித்தனியாக சந்தித்து பேசுவதற்கு ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

செப்டம்பர் 20ம் திகதி நடைபெற உள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார பணிகள் சூடு பிடித்து வருவது தெரிந்ததே.

Web Design by Srilanka Muslims Web Team