எங்களை ஏமாற்றிவிட்டார்கள்..! - Sri Lanka Muslim
Contributors

நேற்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்சி செய்யும் இடத்திற்கு சென்று நடந்து விட்டே வீடு செல்ல நினைத்து அந்த இடத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினேன். அந்த இடத்தை நெருங்கிய போது பொரலஸ்கமுவ ரோட்டில் நல்ல செவ்விளநீரைக் கண்டதால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கிச் சென்றேன்.

விலையைக் கேட்ட போது 50/= தொடக்கம் 80/= வரை இருப்பதாகச் சொன்னார் நடுத்தர வயதுடைய அந்த பெரும்பான்மை இனத்தவர். 80/= இளநீரில் இரண்டு தரும்படி கூறினேன். ஒன்றை வெட்டித் தந்தவுடன் அதனைக் கொண்டு சென்று வாகனத்தில் இருந்த மகளிடம் கொடுத்து விட்டு மீண்டும் வந்து மற்றொன்றை வாங்கிக் கொண்டே ஸ்ட்ரோ தரும்படி கேட்டேன்.

“இல்லை மஹத்தயா மன்னிக்க வேண்டும்” எனக் கூறினார். நான் அவ்விடத்திலேயே அமர்ந்து இளநீரை அருந்துவதைக் கண்ட அவர் “மஹத்தயா முஸ்லிம்த” என்று கேட்டார். “ஆம்” என்றேன். “மஹத்தயா உங்கள் கையால் எமக்கு செருப்பால அடிக்க முடியுமா? உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்வதாக நினைத்துக் கொண்டு எங்கள் தலைகளில் நாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்.

எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாசமாகப் போவார்கள்” எனத் தொடங்கியவர் சிங்கள மொழியில் உள்ள அத்தனை கேவலமான வார்த்தைகளையும் பாவித்து ஏசி சாபம் செய்த போது, எனக்கு உடல் மெலிதாக நடுங்கியது.

இப்படியுமா ஒரு மனிதனை அவனது குடும்பத்தை சபிப்பார்கள்? என நினைத்துக் கொண்டேன்….”ஏன் இத்தனை கோபம்”? என்றேன்….”நீங்கள் கேட்ட ஸ்ட்ரோ கூட இந்த நாட்டில் இல்லாமல் போய் விட்டது. எல்லாமே நாசமாகிப் போய்விட்டது. இனவாதத்தை தூண்டி எம்மைப் பிரித்து விட்டு இப்போது அவர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள்….. இடைக்கிடையே கடவுள்களுக்கும் சொல்லாபிஷேகம் நடந்தது.

குடித்த இளநீரை பிளந்து அதனுள் இருந்த எனது விருப்பத்திற்குரிய வழுக்கலையும் உண்டு விட்டு 200/= பணத்தைக் கொடுத்து விட்டு மிகுதியை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு….“நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களா” எனக் கேட்டேன்….”சொல்லுங்கள் மஹத்தயா” என்றார்.

“யாரையும் மனம் நொந்து சபிக்காதீர்கள். எமது மார்க்கத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது”என்றேன். கையெடுத்து என்னைக் கும்பிடப் போனவரின் கைகளைப் பிடித்து “இதுவும் கூட தடை செய்யப்பட்டதே “ எனக் கூறியவனாக வாகனத்தை நோக்கி நடந்தேன்……

  • Dr Anees Shariff –

Web Design by Srilanka Muslims Web Team