எத்தகைய விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டிற்கு தேவையான அபிவிருத்தி பணிளை உரியவாறு மேற்கொள்வேன் - ஜனாதிபதி » Sri Lanka Muslim

எத்தகைய விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டிற்கு தேவையான அபிவிருத்தி பணிளை உரியவாறு மேற்கொள்வேன் – ஜனாதிபதி

m6

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசாங்கத்தின் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும், விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை எல்லாற்றையும் எதிர்நோக்கி நாட்டின் அபிவிருத்திப் பணிகளை உரியவாறு மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று(11) மாலை இடம்பெற்ற பகமுன கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் புதிய இருமாடிக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

ரஜரட்ட விவசாய மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிய தீர்க்கப்படாத நீர் பிரச்சினைக்கு தீர்வாக மொரகஹகந்த பாரிய நீர்த்தேக்கத்திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 40 வருட காலத்திற்கும் மேலாக அரசியல் மேடைகளில் வெறும் வாக்குறுதியாக மட்டுமே காணப்பட்ட இப் பிரச்சினைக்கு தற்போதைய அரசினாலேயே தீர்வு காணப்பட்டுள்ளது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அமுலாக்கத்தின் போது அரசாங்கம் என்ற வகையில் மிகவும் முறையாகவும், வினைத்திறனான முறையிலும் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வரட்சியின் போது விவசாய மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவசாய திணைக்களம், மகாவலி அதிகார சபை மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு ஏற்கனவே அரசினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அந் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு அரசினால் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்காக கமநல சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் 12 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களும் ஜனாதிபதியினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

சேதன பசளை செயற்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை அடையாளப்படுத்தும் முகமாக விவசாயிகள் இருவருக்கு ஜனாதிபதி அவர்களினால் காசோலைகள் வழங்கப்பட்டதுடன் மகளிர் விவசாய இயக்கங்களை பதிவுசெய்யும் சான்றுப்பத்திரங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதனிடையே தேசிய புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் வணக்கஸ்தலங்களுக்கு நிகர அலகுமானிகள் திட்டத்தின் கீழ் ஞாயிற்றுப்படலத் தொகுதிகளை வழங்கிவைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 10 விகாரைகளுக்கு உரிய உபகரணத் தொகுதிகளை வழங்கி வைக்கும் அடையாள நிகழ்வும் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கான ஞாயிற்றுப்படல்களின் மூலமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டத்தின் கீழ் பகமுன, புவக்கஹஉல்பத கிராமத்தை சூரியசக்தியால் ஒளியூட்டுவதை முன்னிட்டு பகமுன, இரண்டாம் கட்டம், இளைஞர் விவசாய இயக்கத்தின் கொடேவிதாரனயே ஜயசுந்தர என்பவரின் இல்லத்திற்கு ஜனாதிபதி அவர்களினால் ஒளியூட்டப்பட்டது.

பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அவரது வீட்டிற்கு விஜயம் செய்தபோது அவரது வீட்டு நிலைமையை கண்ணுற்ற ஜனாதிபதி அவர்கள் அவருக்கு புதிய வீடொன்றைக் கட்டித்தருவதாகவும் உறுதியளித்தார்.

அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ரஞ்சித் சியபலாபிடிய, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

Web Design by The Design Lanka