எமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய மாபெரிய வெற்றியாகும் » Sri Lanka Muslim

எமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய மாபெரிய வெற்றியாகும்

sainthamaruthu

Contributors
author image

யூ.கே. காலித்தீன்

 எமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய  மாபெரிய வெற்றியாகும். என சாய்ந்தமருது முகையத்தின் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்தார்.

எமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இப்போராட்டத்தின் முதற்படியான இத்தேர்தல் வெற்றியினை வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சாய்ந்தமருதூர் சார்பாக வெற்றியீட்டிய சுயற்சைக்குழு சார்பில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்விலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பள்ளிவாசல் தலைவர் எமது வெற்றியும் 2017 நவம்பர் எழுச்சி, தனித்துவமான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து, பல்வேறு உபாயங்களை, நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காலப்பகுதியில் இத்தேர்தலை நாம் எதிர்கொண்டோம்.

இலங்கையில் ஒரு பள்ளிவாயல் பரிபாலன சபை இவ்வாறுதான் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதற்கான முன்மாதிரியை இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும்  நாம் எமது ஒற்றுமையின் மூலம் காட்டி இருக்கின்றோம். அல்ஹம்துலிழ்ழாஹ். இன்ஷாஅழ்ழாஹ், இம்முன்மாதிரியை நாம் தொடர்ந்தும் பின்பற்றுவோம்.

எமக்கு இத்தேர்தல் வழமையான ஒரு தேர்தலாக இருக்கவில்லை. பல்வேறு சவால்கள், அடக்குமுறைகள், துயரங்கள் போன்ற நிரம்பிய களமாகவே இது காணப்பட்டது. இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் வெற்றி பெற்றியிருக்கின்றோம் என்றால், அது எமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய  மாபெரிய வெற்றியாகும்.

இத்தேர்தலானது எமது உள்ளூராட்சி சபையினை அடைவதில் முன்கொண்டு செல்லப்பட்ட ஒரு உபாயமேயாகும். நாம் கல்முனை மாநகர சபையினை ஆட்சி செய்வதற்கோ, அங்கு முஸ்லிம்களின் ஆட்சியினைத் தடுத்து மற்றவர்களின் கையில் வழங்குவதற்கோ இந்த உபாயத்தை வகுக்கவில்லை. சாய்ந்தமருதின் ஒத்துழைப்பு இல்லாமல் முஸ்லிம்களின் ஆட்சியினை, முஸ்லிம்களைக் கொண்டே தக்கவைக்கலாம் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு உபாயமாகவும், சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த முடிவு தனியான உள்ளூராட்சி சபையைப் பெறுவதற்கான மக்கள் விருப்பத்தினை வெளிப்படுத்துகின்ற ஒரு தேர்தலாகவுமே இதனை வகுத்து அதில் எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் வெற்றியும் கண்டிருக்கின்றோம்.

எனவே இவ்வெற்றியினை, எமது பள்ளிவாயல் நிர்வாகத்தின் கீழ் இவ் இலக்கை அடைவதற்காகவே பயன்படுத்துவோம். எம்மை அரசியல் அதிகாரமற்ற ஒரு சமூகமாக, ஏளனமாகப் பார்த்த நிலை மாறி, பேச்சுவார்த்தை மேசையில் சம பங்காளர்களாக அமர்ந்து பேசுவதற்கும், அதற்கான அழுத்தம் செலுத்துவதற்கும் உரிய அந்தஸ்தினை இத் தேர்தல் எமக்கு வழங்கியுள்ளது. அல்ஹம்துலிழ்ழாஹ். எனவும் கூறுனார்

மேற்படி நிகழ்வின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிவாசலில் ஒன்று கூடி இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இஸ்திகார தொழுகையும் நடைபெற்றது. உலமா சபைத் தலைவர் எம்.எம். சலீம் சர்க்கி, பாத்திமா அரபுக் கல்லூரியின் அதிபர் ஏ.ஏ. அலி அஹமட் ரசாதி, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கல்விமான்கள், உலமாக்கள் வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டதோடு வெற்றியீட்டிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வெற்றிக்கு இரவு பகல் பாராது அயராது உழைத்த எமது சாய்ந்தமருது – மாளிகைக்காடு வாழ் பொதுமக்கள், உலமாக்கள்,  பள்ளிவாயல் நிர்வாக சபையினர், வார்த்தக சமூகத்தினர், மீனவ சமூகத்தினர், வேட்பாளர்கள், புத்தி ஜீவிகள், குறிப்பாக சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற இளைஞர்கள், பெண்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள், சட்டத்தை முறையாக நடைமுறைப் படுத்திய பாதுகாப்புப் படையினர் விசேடமாகப் பொலிசாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது உள்ளூராட்சி சபையை நோக்கிய போராட்டத்தின் ஒரு படிக்கட்டத்தில் நாம் வெற்றி பெற்றியிருக்கின்றோம். ஏனெனில் இத்தேர்தல் எமது பயணத்தில் இடை நடுவில் வந்ததாகும். இப்போராட்டம், எமது மக்கள் பணிமனையினை அடிப்படையாக வைத்து தொடர்ந்து எமது இலக்கை அடையும் வரை தொடரும் என கூறிக் கொள்கின்றோம்.

எனவே, இத்தேர்தல் வெற்றியை, எல்லாம் வல்ல இறைவனுக்குப் பொருத்தமான முறையில் மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு மிகப் பணிவன்புடன்  வேண்டிக்கொள்கின்றோம் எனவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இறுதியில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இஸ்திகார தொழுகையும், பள்ளிவாசல் பேஸ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா அவர்களினால் நீண்ட துஆப் பிறாத்தனையும்  நடைபெற்றது.

Web Design by The Design Lanka