எரிக்கப்பட்ட உடல்களில் 181 முஸ்லிம்களுடையது, இன்னும் ஒரு ஜனாசாவே அடக்க இருக்கின்றது - நசீர் Mp..! - Sri Lanka Muslim

எரிக்கப்பட்ட உடல்களில் 181 முஸ்லிம்களுடையது, இன்னும் ஒரு ஜனாசாவே அடக்க இருக்கின்றது – நசீர் Mp..!

Contributors

(ஊடகப்பிரிவு)

போலியான தகவல்களை வெளியிடுவது சமூகங்களின் உறவுகளில் பாரிய இடைவெளிகளையே ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய அவர் கூறியதாவது;

கடந்த ஒரு வருட காலமாக முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட விடயத்தில் கவலைகள் ஏற்பட்டது மாத்திரமன்றி புரளிகளும்  கிளப்பப்பட்டன. அந்தப் புரளிகளுக்கு கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக  அனுமதி வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்த விடயத்தில் உதவி புரிந்த முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ஸ, அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார உட்பட பலருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக எமது நற்பெயரை களங்கப்படுத்திய   பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இருக்கின்றார்கள். எங்களை மிகவும் கேவலமாக தித்தரித்தார்கள். நாம் ஆதரவளித்ததனாலேயே ஜனாசாக்கள் எரிக்கப்படுவதாகவும் பழி சுமத்தினார்கள். பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டார்கள். 

கடந்த 05 நாட்களுக்கு முன்னர் கூட  ஜனாஸா எரிப்பு விடயத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எரிக்கப்பட்ட ஜனாசாக்கள் தொடர்பில் ஒரு பிழையான தகவலை கூறினார். இதுவரை கொரோணாவால் மரணித்து எரிக்கப்பட்ட 497  பேரில் 334 பேரின் ஜனாசாக்கள் முஸ்லிம்களுடையது என்றார். 

நிச்சயமாக அவ்வாறில்லை;  

எரிக்கப்பட்ட உடல்களில்  181 ஜனாசாக்களே முஸ்லிம்களுடையது. இது ஒரு கவலையான விடயம். இவ்வாறு நடந்திருக்க கூடாது. இவ்வாறான விடயங்கள் இனிமேலும்  நடக்கக் கூடாதென நாம் பிரார்த்திக்கின்றோம். அதேவேளை பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும் போது  இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டிலே இவ்வாறான முரண்பாடுகள் இனிமேலும் உருவாகக் கூடாது.

சிறிய சிறிய பிரச்சினைகளே பெரிய பிரச்சினைகளாகி இனங்கள், துருவயமயப்படுத்தப்பட்டு, கலவரங்கள் வெடிக்கின்றன. நாட்டிலே இனங்கள் தனித்தனியாக பிரிந்து சின்னாபின்னாமாகும் நிலை உருவாகின்றது. 

இந்த மாதம் 05 ஆம் திகதி ஒரு ஜனாஸாவை அதாவது அசனத்தும்மா என்பவரின் ஜனாசாவை எடுத்துக் கொண்டு  குருநாகல் சென்று அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த  எனது நண்பனான கலீலின் மற்றொரு ஜனாசாவையும் எடுத்துக் கொண்டு ஓட்டமாவடிக்கு அடக்கம் செய்வதற்காக சென்றோம்.  ஜனாஸாவை கொண்டு செல்வதிலும் அதனைத் தொடர்ந்த பணிகளிலும் இராணுவத்தின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் என்னால் இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.

அந்த ஜனாசாக்களை கண்ணியமாகவும், பக்குவமாகவும்  கையாள்வதில் இராணுவம் நடந்து கொண்ட விதத்தை நான் நன்றியுடன் பார்க்கின்றேன். கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையிலிருந்து அதிகாலை 05.48 க்கு ஜனாசாவை எடுத்துக் கொண்டு வெளியேறிய நாங்கள் குருநாகல் சென்று அங்கிருந்து 10.14 க்கு அடுத்த ஜனாசாவையும் எடுத்துக் கொண்டு ஓட்டமாவடி சூடுபத்தின சேனைக்கு சென்றோம். அதுவரை எங்களுடன் பயணித்த கெப்டன் செனிவிரத்ன ஒன்றுமே சாப்பிடாமல்  இருந்ததை நான் கூறியாகவே வேண்டும்.

ஒரு வருடத்திற்கு பின்னர்,  கொரோணாவில் மரணமடைந்த ஜனாஸாக்கள் முதன் முதலாக சூடுபத்தின சேனையில் அடக்கம் செய்யப்படுகின்றது .

கெப்டன் செனிவிரத்ன, பிரிகேடியர் பிரதீப், மேஜர் ஜெனரல் கொஸ்வத்த போன்றவர்கள் இந்த ஜனாஸாக்களை அடக்குவதில் காட்டிய அக்கறையையும் அவர்களின் அர்ப்பணிப்பையும்  நன்றியுணர்வுடன் மெச்சுகின்றேன். 

அதுமாத்திரமன்றி ஓட்டமாவடி பிரதேச சபையினர், சுகாதார அதிகாரிகள், ஓட்டமாவடி உலமா சபை மற்றும் வாழைச்சேனை, ஓட்டமாவடி பொதுமக்கள் ஆகியோரும் ஜனாஸா அடக்கும் விடயத்தில் தமது பங்களிப்பை நல்கினார்கள்.

இந்த சபையிலே நான் இன்னும் ஒன்றைக் கூறியாக வேண்டும் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இன்று வரை 39 ஜனாசாக்கள் அடக்கப்பட்டுள்ளன. இன்னும் அநுராதபுரத்தில் மாத்திரம் ஒரு ஜனாசா இருக்கின்றது. தவிர சிலர் முகநூலில் கூறுவது போன்று 11 ஜனாசாக்கள் இன்னும் வருகின்றது எனக்கூறுவது பிழையானது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team