எரிபொருள் விலையேற்றம் - ஆட்சியாளர்களுக்குள் நாளுக்கு நாள் உக்கிரமடையும் மோதல்..! - Sri Lanka Muslim

எரிபொருள் விலையேற்றம் – ஆட்சியாளர்களுக்குள் நாளுக்கு நாள் உக்கிரமடையும் மோதல்..!

Contributors

எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஏற்பட்ட கருத்து மோதல்கள் ஆளுங்கட்சியினருக்கு இடையே நாளுக்குநாள் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில், விசேட கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்த வார இறுதியிலும் அதேபோல அடுத்த வாரத்திலும் இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலையை ஸ்ரீலங்காவின் எரிசக்தி அமைச்சரும், மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தருமான உதய கம்மன்பில கடந்தவாரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனால் மொட்டுக் கட்சியின் பலரும் அமைச்சரின் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்த அதேவேளை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அவசரக் கடிதமொன்றை அமைச்சருக்கு அனுப்பி அமைச்சரை பதவி விலகுமாறும் வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ச்சியாக ஆளுங்கட்சி தலைவர்களிடையே ஏற்கனவே இருந்துவந்த முரண்பாட்டு நிலைமை, தற்போது எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து மேலும் உக்கிர நிலைமையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதான பொறியென வர்ணிக்கப்படும் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி ஸ்ரீலங்காவுக்குத் திரும்பவுள்ளார்.

அவர் நாடு திரும்பியதும் ஆளுங்கட்சி மோதல்கள் குறித்து விசேட பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக இந்த வார இறுதியில் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது இந்த முரண்பாடுகள் குறித்து விரிவாக பேச எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சரும், பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் தனிப்பட்ட விடயத்திற்காக அறிக்கைகளையும் அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை. தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தான் இந்த அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கின்றனர்.

எனினும் அதன் உள்ளடக்கம் பற்றி அவர்களிடமே கேட்கவேண்டும். குறிப்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்துக்கு காரணம் எமது கட்சியானது உணர்வுகளைப் புரிந்துகொள்கின்ற கட்சியாகும். இந்த வகையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு குறித்த அறிக்கை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கின்றேன்.

இதனூடாக அரசாங்கம் வீழ்ந்துபோகும் என்று கூறமுடியாது. இதுபோன்ற சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. அமைச்சர் கம்மன்பில, தனியே எடுத்த தீர்மானம் அல்ல. ஏகமனதாக அரசாங்கம் எடுத்த தீர்மானமாகும். சாகர காரியவசத்திற்கு எதிராக கூட்டணியிலுள்ள சில கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கை அவர்களது தனிப்பட்ட கருத்துக்களாகும்.

ஒட்டுமொத்த கூட்டணியாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை, மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அந்நிய செலாவணி இன்மை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி என நெருக்கடியில் இருக்கின்றோம். அவ்வாறு இருக்காவிட்டால் இப்படியொரு தீர்மானமும் வந்திருக்காது.

அந்த வகையில் மக்கள் தங்களது கருத்துக்களை வெளியிட உரிமையிருக்கின்றது. காரியவசம் மற்றும் உதய கம்மன்பில கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் எமது சகோதர அமைச்சர்கள் உறுப்பினர்களாகும்.

அரசாங்கம் என்ற வகையில் கட்சி என்ற வகையில் எமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளோம். எதிர்வரும் நாட்களில் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி கூட்டத்தில் பேச்சு நடத்தி நிவாரணம் பற்றி முடிவெடுக்க வலியுறுத்துவோம்.

Web Design by Srilanka Muslims Web Team