எல்லையில் அமைதி நிலவினால் தான் சீன உறவில் முன்னேற்றம் ஏற்படும்! - மன்மோகன்சிங் திட்டவட்டம். - Sri Lanka Muslim

எல்லையில் அமைதி நிலவினால் தான் சீன உறவில் முன்னேற்றம் ஏற்படும்! – மன்மோகன்சிங் திட்டவட்டம்.

Contributors

இந்திய , சீன உறவில் மேலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால், இருநாட்டு எல்லையில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அங்கிருந்து சீனாவுக்கு புறப்பட்டார். முன்னதாக, சீனாவின் அதிகாரபூர்வ பத்திரிகைக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பேட்டியில் பிரதமர் கூறியிருப்பதாவது:இந்தியா , சீனா இடையிலான எல்லை பிரச்னை மிகவும் சிக்கலானது. இதற்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்காக சிறப்பு பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் கடுமையாக உழைத்து, எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது, இருதரப்பையும் சேர்ந்த இக்குழுக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட காலமாகும். இதற்கு இடைப்பட்ட காலத்தில், இருநாட்டு எல்லையிலும் அமைதியை நிலைநாட்ட இந்தியாவும், சீனாவும் உறுதி பூண்டுள்ளன. இருநாட்டு உறவில் மேலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால், எல்லையில் அமைதி நிலவ வேண்டியது அவசியம். உறவில் முன்னேற்றம் ஏற்பட இதுவே அடிப்படையாகவும், உத்தரவாதமாகவும் அமையும்.

இந்த விவகாரத்தில் இருநாட்டு தலைவர்களும் ஒரே எண்ணத்துடன் இருக்கின்றனர். இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை விரிவுப்படுத்தும் முயற்சிக்கு குறுக்கே, எல்லை பிரச்னை வராமல் பார்த்து கொள்கிறோம். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team