"எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! » Sri Lanka Muslim

“எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

Contributors
author image

ஊடகப் பிரிவு

பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும்.

முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கால போக்குகள் பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதுண்டு.

எம் எல்லோரது விதிகளிலும் பொதுவாக எழுதப்பட்டுள்ள மரணம் என்ற வாசலுக்குள் நூறுல்ஹக் சென்றுவிட்டார். இதுவும் இறைவனின் நாட்டம்தான் என்ற நம்பிக்கையில்தான் நான் ஆறுதலடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பணிகளைப் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தார், நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இறைவன் பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறேன்”

Web Design by The Design Lanka