ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான போராட்டங்களில் நாம் துணை நின்றோம் - ஜனாதிபதி - Sri Lanka Muslim

ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான போராட்டங்களில் நாம் துணை நின்றோம் – ஜனாதிபதி

Contributors

சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் உயர்வாக மதித்து செயற்படுகின்ற நாடு இலங்கை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன் ஆக்கிரமிப்புக்கு அடிமைப்பட்டு வாழ்வதற்கு இலங்கை மக்கள் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வியட்நாமின் தேசியத் தலைவரான ஹோச்சி மிங் கின் உருவச்சிலையை நேற்று கொழும்பு தேசிய நூலக வளவில் உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, 2005 இல் தாம் முன்வைத்த மஹிந்த சிந்தனை கொள்கையானது நாட்டினதும் நாட்டு மக்களினதும் சுயாதீனத்தைப் பாதுகாப்பதையே முக்கியமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஜீ.எல். பீரிஸ், மைத்திரிபால சிறிசேன, ஏ.எச்.எம். பெளஸி, டியூ குணசேகர, சந்திரசிறி கஜதீர, விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இரா சம்பந்தன், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கொழும்பு மாநகர முதல்வர் முஸம்மில், வியட்நாம் பிரதிப் பிரதமர் பாம் பின் மிங் மற்றும் அந்நாட்டின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, வியட்நாமின் தேசியத் தலைவர் அமரர் ஹோச்சி மின்னின் உருவச்சிலையை இலங்கையில் திறந்து வைப்பது காலத்துக்குப் பொருத்தமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்.

வரலாற்று ரீதியாக நோக்கினாலும் ஹோச்சி மின்னின் உருவச்சிலை இங்கு திறந்துவைப்பது அர்த்தம் பொதிந்தது. இவர் வியட்நாமின் சுதந்திரத்துக்காக ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய தலைவராவார்.

இலங்கையிலிருந்து வியட்நாமுக்கு அக்காலத்தில் பெளத்த தர்மத்தை அறிமுகப்படுத்துவதிலும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவராவார். அத்தோடு இலங்கை மக்களுக்கும் வியட்நாம் மக்களுக்குமிடையில் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதில் இவரது பங்களிப்பு பெருமைக்குரியதாகும்.

அக்காலத்திலிருந்து இலங்கையுடனான நட்புறவு, சிந்தனை மாற்றம் ஒன்றிணைந்து செயற்படுதல் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கிடையில் செயற்பட்ட தலைவர் அவர்.

வியட்நாமும், இலங்கையும் எப்போதும் ஒன்றாக சமத்துவமாக செயற்படுவதற்குக் காரணம் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்பட விரும்பும் நாடுகள் என்பதால்தான்.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு இரு நாடுகளும் எதிரானவை. ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து வாழ எமது மக்கள் ஒருபோதும் தயாரில்லை. ஆக்கிரமிப்பாயிருக்கட்டும், அடிபணிந்து வாழ்வதாக இருக்கட்டும் எமது மக்கள் இதற்கு அன்றும் என்றும் இணங்கியதில்லை.

காதிபத்திய வாதிகளுக்கு எதிராக ஆசிய நாடுகள் போராடிய போது, அந்த நாட்டு மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாம் எப்போதும் முன்னணியில் திகழ்ந்துள்ளோம்.

வியட்நாமின் தேசியத் தலைவரான ஹோச்சி மின் ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளதுடன், இலங்கைக்கும் மூன்று தடவைகள் வருகை தந்ததையும் குறிப்பிட வேண்டும்.

1911 இல் அவர் இலங்கைக்கு முதல் தடவையாக வருகை தந்தார். இலங்கையில் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.ஏ. விக்கிரமசிங்கவுடன் அவர் தொடர்புகளைக் கொண்டிருந்தார். வியட்நாமில் தொழிலாளர்கள் மாநாட்டிலும் இவ்விருவரும் கலந்து கொண்டுள்ளதைக் குறிப்பிட வேண்டும்.

1970 தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் நான் முதலாவதாக போட்டியிட்ட போது, நாம் வியட்நாம் போராட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தோம். அந்த நாட்டிற்கு ஆதரவாக செயற்பட்டோம். அதேபோன்று நான் எனது நன்றி தெரிவிப்பு உரையிலும் அது பற்றி குறிப்பிட்டேன். அனைத்து சர்வதேச மாநாடுகளிலும் இலங்கை வியட்நாமுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது.

இது போன்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் நோக்குமிடத்து, அவரது உருவச்சிலை இலங்கையில் நிறுவப்படுவது எமது இரு நாடுகளுக்கிடையிலான பிணைப்பின் அடையாளமாகிறது.

நாம் 2005 இல் மஹிந்த சிந்தனையை அறிமுகப்படுத்தி இந்த நாட்டு மக்களின் சுயாதீனப் போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கினோம். பிரிவினை வாதத்தை தோற்கடித்து தேசியத்தைக் கட்டியெழுப்பினோம்.

இது போன்று இந்த நாட்டின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதையே மஹிந்த சிந்தனைக் கருத்திட்டத்தில் முக்கியத்துவப்படுத்தினோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வினையடுத்து, வியட்நாமின் தேசியத் தலைவர் அமரர் ஹோச்சி பின்னின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியொன்று கொழும்பு தேசிய நூலக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்ததுடன், ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இதனைப் பார்வையிட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team