ஏன் அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறியது..? - Sri Lanka Muslim

ஏன் அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறியது..?

Contributors

எந் நாளும் ஒரே கொள்கையில் பயணம் செய்ய முடியாது. காலத்துக்கு காலம் திட்டங்கள் மாறுபடும். அந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகவே இதனை நோக்க முடிகிறது. அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் முஸ்லிம் நாடுகளை சீண்டி பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனை ஓரளவு டிரம்ப் மாற்றியமைத்தார் என கூறலாம். அந்த நிலைப்பாட்டை ஜோ பைடனும் சரியென ஏற்றுள்ளதாகவே, அவரது செயற்பாடுகளும் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க, தன்னை உலகில் சக்திமிக்க நாடாக காட்ட பல நாடுகள் மீது போர் தொடுக்கும். இதனையே ரஷ்யாவும் ஒரு காலத்தில் செய்துகொண்டிருந்தது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது பொருளாதார யுத்தம். இந்த பொருளாதார யுத்தத்தில் சீனா அனைத்து நாடுகளையும் அடித்து, நொறுக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செலவு செய்துள்ள பல இலட்சம் கோடி பணத்தை, சீனாவைப் போன்று கடனாக ஏழை நாடுகளுக்கு வழங்கியிருந்தால், உலகில் பல நாடுகளை சற்றேனும் விலகாத விதத்தில் கைக்குள் போட்டிருக்கலாம். தற்போது சீனா ஆப்பிரிக்காவை நோக்கி காய் நகர்த்தி, வெற்றியின் பாதையில் நகர்கின்றமை பொருளாதார யுத்தத்தின் வலிமையை அறிய போதுமானதாகும் . இனியும் அமெரிக்க பழைய உத்திகளை தொடர முடியாது. பாதையை மாற்றியேயாக வேண்டும். அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் வரப்போவதாக, அமெரிக்க அதிபர் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டும் முழுமையாக வெளியேறிய பின்னர் ஆற்றியிருந்த உரையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்க மக்கள் வெளிநாட்டு படையெடுப்புக்களை பெரிதும் விரும்பவில்லை. முன்னரெல்லாம் வெளிநாட்டு படையெடுப்புக்களை செய்தாலே, ஆட்சியாளர்களை அமெரிக்க மக்கள் ஆதரிக்கும் நிலை இருந்தது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளை சீண்டினால் மகிழ்வார்கள். தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்வதற்கும், வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கும், பிறநாடுகளில் யுத்தம் செய்யும் தேவையற்ற கொள்கையையே பிரதான காரணமாக கருதுகின்றனர். அண்மையில் இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையில் போர் மூண்டாலும், அதனை அணைப்பதிலேயே அமெரிக்கா மும்முரம் காட்டியிருந்தது. அமெரிக்க மக்கள், இஸ்ரேல் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட தேவையில்லை என்ற அழுத்தத்தை வழங்கியிருந்தமையும் அதற்கான பிரதான காரணமாக குறிப்பிடலாம்.

தற்போது ஆப்கானிஸ்தானியர்கள் சிலர் ஆப்கானை விட்டும் வெளியேறுவதை காட்டி, தாலிபான்களை கொடூரமானவர்களாக அமேரிக்கா போன்ற நாடுகள் காட்ட முனைகின்றன. அமேரிக்கா ஆப்கானை விட்டு வெளியேற முன்பே, ஆப்கான் தாலிபான்களின் கைக்குள் செல்லும் என யாரும் நம்பவில்லை. இது நடைபெற பிரதான காரணம், பெரும்பான்மையான ஆப்கான் மக்கள் தாலிபான்களை ஆதரித்தமையாகும். தற்போதைய ஆளும் அரசு, அமெரிக்காவின் ஆளுகையை அம் மக்கள் விரும்பாமை எனலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. என்னதான் அமெரிக்கா ஒரு நாட்டுக்குள் தலை கீழாக நின்றாலும், உள்நாட்டு மக்களின் கணிசமான ஆதரவின்றி எதனையும் செய்ய முடியாது.

ஆப்கான் படைகளுக்குள்ளும் பல தாலிபான் ஆதரவாளர்கள் இருந்தனர். இதனை பல சம்பவங்கள் மூலம் உறுதி செய்யவும் முடியும். இதன் விளைவுகளில் ஒன்றே, யுத்தமின்றி ஆப்கானிஸ்தானை தாலிபான்களின் கையில், ஆப்கான் இராணுவம் ஒப்படைத்தது எனலாம். அமெரிக்காவால் ஆப்கான் இராணுவத்தையே நம்ப முடியவில்லை என்றால், எப்படி அந் நாட்டை கட்டுக்குள் வைக்க முடியும். ஆப்கானிஸ்தானை பூரணமாக கட்டுக்குள் வைக்க பல இலட்சம் அமெரிக்க இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் நிலைகொள்ள செய்ய வேண்டும். இது சாத்தியமற்ற ஒன்று. அது மாத்திரமல்ல.. மிகப் பெரும் உயிரிழப்புக்களை அமெரிக்க சந்திக்க நேரிடும். என்ன தான் அமெரிக்கா பாரிய ஆயுதங்களை கொண்டு தாலிபான்களை அழிக்க முயற்சித்தாலும், மலைகளால் ஆன இயற்கை அரண்களை என்ன செய்திட முடியும்? அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவது பெரிய விடயமல்ல. ஆனால், அதிகமான உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும். பல்லாயிரம் உயிர்களை இழந்து ஆமெரிக்கா ஆப்கானிஸ்தானில் என்ன தான் சாதித்துவிட போகிறது?

அமெரிக்கா தீவிரவாதத்தை அழிக்க நினைக்கும் ஒரு நாடல்ல என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால் ஊக்குவிக்கும் நாடெனலாம். அப்போதே அதன் ஆயுத விற்பனை களைகட்டும். அமெரிக்காவின் முன்னாள் ஆட்சியாளர்கள், தங்களுக்கு சொந்தமாக ஆயுத நிறுவனங்களையே வைத்திருந்ததான பேச்சுக்களும் உள்ளன. தற்போது ஆயுத கறுப்பு சந்தையில் பலநாடுகள் போட்டி போட ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் முதலீட்டில் யாரோ நன்மை அடைகின்றனர். இனியும் ஆயுத கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்கா நன்மையடையப் போவதில்லை.

உலகில் அமெரிக்கா சக்தி வாய்ந்த நாடு என்பதில் யாருக்கும் மறுப்பிருக்காது. உலகில் தான் நினைத்ததை செய்யும் ஆற்றல் மிகுந்ததாக காணப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தானில் செலவு செய்யும் பணமெல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை. தற்போது அமெரிக்கா அந் நிலையில் இல்லை என்பதே உண்மை. தற்போது தன்நிலை பற்றி, தங்களது கொள்கை பற்றி மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டும் முழுமையாக வெளியேறியதை தொடர்ந்து உரையாற்றிய ஜோ பைடனின் உரையில், அமெரிக்காவின் இயலாமைகளை, அவர் பல இடங்களில் வெளிப்படுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான பல காரணங்களின் விளைவுகளாலேயே அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு விலகும் முடிவை எடுத்தது எனலாம். ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இரத்தவெறிக்கு இரையாகிய ஆப்கானிஸ்தானியர்கள் இனியாவாது நிம்மதியாக வாழட்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team