ஏன் உனக்கும் நம் சமூகத்திற்கும் இந்த நிலை.? - Sri Lanka Muslim

ஏன் உனக்கும் நம் சமூகத்திற்கும் இந்த நிலை.?

Contributors

– உவைஸ் மாவடிப்பள்ளி –

கலிமாச் சொன்னதனாலா?  கலிமாச்சொன்ன சமூகத்திற்காக உன்னை அர்ப்பணித்ததாலா.?

விடை தெரியவில்லை.
அன்று உன்னைத் தொட்ட துன்பமும் நிம்மதியற்ற வாழ்க்கையும் இன்றும் உன்னை விட்டு வைக்கவில்லை.
அன்று ஒரு காலத்தில் உன்னையும் உன் சமூகத்தையும் அகதிகளாக்கி நடுத்தெருவில் விட்டார்கள். அகதி என்ற பட்டத்தை பெற்றாய். இனியும் இந்த நிலை தோன்றக் கூடாது என பெரு மூர்ச்சையுடன் கல்வியில் கரை கண்டு அதன் பின் அகதி சமூகத்தின் விடிவுக்காய் அரசியல் எனும் தடியை கையில் எடுத்தாய். உன் சமூகம் உன்னை தலைவனாக ஏற்றுக்கொண்டது. உன்னால் அகதிகள் எனும் நாமம் அழிந்து போனது.

அனைவரையும் வாழவைத்தாய். அவர்களின் துஆவினால் தான் இன்னும் நீ சமூகத்தில் வளர்ந்து கொண்டு செல்கின்றாய். ஆனால் இதனை ஆட்சி வெறி பிடித்த காட்டேரிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. உன்னை அழிக்க நினைக்கின்றார்கள் , சதிகள் செய்கின்றார்கள். ஆனால் நீ மரணித்தாலும் உனக்காக நன்றிக் கடன் பட்ட சமூகம் ஒன்று உன்பின்னால் இருக்கின்றது. நீ செய்த சேவைகள் எண்ணிலடங்காதது. அது உன்னை வாழவைக்கும். கவலையை விடு. என்றோ ஒரு நாள் அனைவரும் மரணத்தையே சுவைக்க இருக்கின்றோம். அதற்குக் கூட  அஞ்சாத சமூகம் நாம் என்பதை நினைவில் கொள். இது ஒன்றும் பெரிதல்ல. பிறக்கும் போது ஒன்றும் செய்து விட்டு பிறப்பதில்லை, ஆனால் மரணிக்கும் போது மரணம் சரித்திரமாக வேண்டும் என சொல்வார்கள். வரலாறு உன்னை பேசும். நீ ஒரு சரித்திர நாயகன் என்று.

ஒரு சிலர் சுய கௌரவத்திற்காக முட்டுக்கொடுத்துக்கொண்டு சமூகத்தை விற்றுவிட்டு முஸ்லிங்களை அழிக்க திட்டம் தீட்டும் போதெல்லாம் மௌனிகளாகவும் அவர்களின் பிச்சைக்கு வாலாட்டிக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் உயிருடன் தான் இருக்கின்றார்களா என்று கூட தெரியாத அளவுக்கு பச்சோந்தி வேசத்துடன் வாழ்கின்றார்கள்.

அனைவருக்கும் குடும்பம் தாய் பிள்ளைகள் என எல்லோரும் உண்டு. நம் குடும்பத்தில் யாராவது தடுப்புக்காவலிலோ சிறையிலோ இருந்தால் நாம் எவ்வளவு பெரிய சங்கடத்திற்கு ஆளாகுவோம். ஆனால் ரிஷாட் என்பவர் வானத்தில் இருந்து வந்தவரா ??  இதில் நீ மட்டும் என்ன விதிவிலக்கா.??
உனக்கும் குடும்பம் உண்டு என்பதை மறந்து என் சமூகம் தான் என் குடும்பம் என வாழ்ந்ததாலா உன்னை அழிக்கத் துடிக்கின்றார்கள்.  இவ்வளவு காலமும் தான் சமூகம் சமூகம் என தூக்கமின்றி அலைந்தாய். இந்தப்புனித மாதத்தில் கூட நீ உன்குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். ஏன் உன்னை மட்டும் அனறிலிருந்து இன்று வரை வதைக்கின்றார்கள். விடை தெரியவில்லை.

நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுக்களை உன் மேல் சுமத்தி உன் குரலை நசுக்க நினைத்தார்கள். பல விசாரணை கமிசன்களை அமைத்தார்கள் விசாரணை செய்தார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக பாராளுமன்ற குழுக்களை அமைத்து விசாரணை செய்தார்கள். சீஐடி குழுக்களை அமைத்து ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாளும் விசாரணை செய்தார்கள். ஒன்றும் நிரூபணமாகவில்லை. அனைத்தும் போலிக்குற்றச்சாட்டுகள் என தெளிவாக முழு உலகும் அறிந்தது. அவர்கள் உசுப்பேற்றி ஆட்சிக்கு வந்த அந்த அப்பாவி சமூகமும் அறிந்தது. இறைவனின் உதவியால் ஒவ்வொரு தடைகளையும் உடைத்தாய். இறைவன் உன் பக்கம் இருந்தான் உன்னை அவன் கைவிடவில்லை.

ஏப்ரல் 21 என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த தினம் அல்ல. அது முஸ்லிங்கள் மீது சேரு பூசப்பட்ட தினம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும்.எவனோ ஒரு நாசகாரனும் அவனது கும்பலும் செய்த ஈனச் செயலுக்காக உன் மீதும் நம் சமூகத்தின் மீதும் பலியை சுமத்த நினைத்து கரை காண புறப்பட்டிருக்கின்றார்கள்.

ஆட்சி வெறி பிடித்தவர்கள் எம்மை அடக்கி ஒடுக்கி அதில் குளிர் காய்ந்து விட்டு அப்பாவி சிங்கள மக்களையும் உசுப்பேற்றி ஆட்சியை பிடித்தார்கள். ஆனால் இறைவனோ அவர்களின் கோர முகத்தினை வெளிக்காட்டத் துவங்கிவிட்டான். அவர்களின் முகக்கவசங்கள் அந்த மக்களிடத்தில் கிழியத்தொடங்கிவிட்டன. அதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் ரிஷாட் என்பவரையும், எதற்கும் அசைந்து கொடுக்கும் ஒரு சமூகமான முஸ்லிம் சமூகத்தையும் அடக்கி ஒடுக்குவதனாலும் தான் நாம் மீண்டும் போலி முகக்கவசத்தை அணிய முடியும் என எண்ணி இந்த நாசகாரச் செயல்களை செய்கின்றார்களோ தெரியவில்லை.

ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றை புகுத்தி ஒன்றன் பின் ஒன்றாக எமது சமூகத்தவர்கள் மீது வேல் பாய்ச்சுகின்றனர். இறைவனின் பிடி கடுமையானது என்பதை அவர்கள் அறியாதவர்கள். நாம் அறிந்த சமூகம். அவனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் அறிய வாய்ப்பில்லை. இவ்வாறே கொடுங்கோல் ஆட்சி செய்து ஜனநாயகத்தை ஆட்சியின் மூலம் தன் வசப்படுத்தி விரும்பியதை செய்கின்றனர். அவ்வாறானவர்கள் நெடு நாள் வாழ்ந்ததாக வரலாறுகள் இல்லை. பல உதாரணங்களை கூறலாம்..

இது ஒன்றும் இறைவனின் உனக்கான சோதனையல்ல. உன்னை சோதிக்க அவர்கள் மூலம் அனுப்பியிருக்கின்றான். ஆனால் அவனின் சோதனை அவர்கள் மீது எவ்வாறு இருக்கும் என்பதை நீயும் நம் சமூகமும் காணும் நாள் வெகுதூரமில்லை. கலங்காதே.!! நீ யார் என்பதை அவர்கள் அறிந்துவிட்டார்கள்.

நமது சமூகத்திற்காக குரல் கொடுத்தவர்களில் இன்று ரிஷாட்டாகவும் அசாத் சாலியாகவும் இருக்கலாம். ஆனால் நாளை யாரை குறி வைத்திருக்கின்றார்கள், வைக்கப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.

ஒரு நோன்பாளியின் துஆ இறைவனிடத்தில் திரையின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என நமது மார்க்கம் சொல்லியிருக்கின்றது. எனவே ஒவ்வொருவரும் சில்லறை அரசியல் பிரிவினையை மறந்து எதிர்கால முஸ்லிம்களின் இருப்பை நினைவில் வைத்தவர்களாக நம் சமூகத்திற்காகவும் சிறையில் வாடும் எமது உறவுகளுக்காகவும் பிராரத்திப்போமாக..!!!😭

Web Design by Srilanka Muslims Web Team