ஏப்ரல் 21 இற்கு முன் பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை - ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு - Sri Lanka Muslim

ஏப்ரல் 21 இற்கு முன் பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னதாக இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படுமென தான் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பத்தரமுல்லை நெலும்மாவத்தையிலுள்ள தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், எமது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய நோக்கம் உள்ளது. அதில் மிகவும் பிரயோசனமான விடயங்கள் காணப்படுகின்றன. அதற்கப்பால் செயற்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது பற்றி தெளிவான பணிப்புரையை அந்தந்த அரச நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.

திகதி வாரியாக அந்த ஆணைக்குழுவிலுள்ள பரிந்துரைகளை எப்போது? எப்படி?, எந்த காலவரையறைக்குள் அமுலாக்குவது என்பது பற்றி ஜனாதிபதி தெளிவான பணிப்புரையை வழங்கியிருக்கின்றார். அவை அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆகவே ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னதாக இந்தவிடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். அனைவரும் எதிர்பார்க்கின்ற பிரதிபலன் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெட்டோ என்கிற நிறுவனம், அந்நாட்டு ஜனாதிபதிக்கெதிராக கலகத்தை மேற்கொண்டது. அந்நிறுவனத்தின் நிதி இலங்கைக்கு பெறப்பட்டுள்ளன. அதனுடன் கொடுக்கல் வாங்கல் செய்த சிலருடைய பெயர்களும் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு முழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1,440 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து 35 பேர் கைது செய்யப்பட்டும், 07 பேருக்கெதிராக வழக்கு தொடர்ந்தும் உள்ளது. ஏனையவர்கள் மீதும் வழக்கு தொடரும்படி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வாள்கள் இறக்குமதி குறித்து விசாரணையை உத்தரவிடும்படி கர்தினால் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாங்கள் நேரடியாகவே உத்தரவிட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Web Design by Srilanka Muslims Web Team