ஏப்ரல் 21 க்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நாடளாவிய ரீதியல் போராட்டம் - அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்தார் பேராயர் - Sri Lanka Muslim

ஏப்ரல் 21 க்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நாடளாவிய ரீதியல் போராட்டம் – அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்தார் பேராயர்

Contributors

எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தவறிழைத்தவர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களையேனும், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் நீதி கோரி நாடளாவிய ரீதியல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் அமைப்புக்களுக்கு அடிபணியாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை எவருக்கும் அஞ்சாமல் மக்களுடன் இணைந்து போராடுவதாகவும் பேராயர் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், யார் மக்களை காட்டிக் கொடுத்தாலும் நாம் பாதிக்கப்பட்ட மக்களை கைவிடப் போவதில்லை. நாம் பாதிக்கப்பட்ட மக்களுடனேயே இருக்கின்றோம்.

எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும், எவ்வாறான அமைப்புக்கள் செயற்பட்டாலும் நியாயம் நிலை நாட்டப்படும் வரை நாம் மக்களுடன் இணைந்து செயற்படுவோம். அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்.

நியாயம் நிலை நாட்டப்படும் என்று கூறுவது மாத்திரமல்ல. அதனை நடைமுறையில் செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

இந்த பாரிய பொறுப்பை என்னால் தனித்து செய்ய முடியாது என்பதை மக்கள் அறிவார்கள். இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை என்னுடனேயே உள்ளது என்பதை நான் அறிவேன். அது எனக்கு பாரிய பலமாகும்.

அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுவோம் என அழைப்பு விடுக்கின்றேன். ஒற்றுமையுடன் முன்னோக்கிச் செல்வோம். சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் சக்திகளுக்கு கீழ்படியாமல் மக்களுக்காக ஒன்றிணைந்து சேவையாற்றுவோம்.

நாமனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டால் குண்டு தாக்குதல்களை முன்னெடுத்தவர்கள் தொடர்பில் இறைவன் எமக்கு வெளிப்படுத்துவார் என்று நம்புகின்றேன். எனவே நாம் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team