ஏறாவூர், காத்தான்குடி கோரக் கொலைகளுக்கு 27 வருடங்கள்: நீதி, நியாயங்கள் புதைக்கப்பட்டு விட்டன. » Sri Lanka Muslim

ஏறாவூர், காத்தான்குடி கோரக் கொலைகளுக்கு 27 வருடங்கள்: நீதி, நியாயங்கள் புதைக்கப்பட்டு விட்டன.

kattankudy

Contributors
author image

A.S.M. Javid

பாசிச விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு ஏறாவூர், காத்தான்குடி படுகொலைகள் இடம் பெற்று இன்றுடன் 27 வருடங்கள் ஆகியும் அந்த சம்பவத்தில் பலியான சுஹதாக்கள் இன்றும் மறக்க முடியாதவர்களாக இருப்பதுடன் அவர்களுக்கு நீதியும், நியாயமும் இல்லாத நிலையில் நினைவு கூறப்படுகின்றனர் என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.

ஏறாவூரில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட மாதமும் 12ஆம் திகதியை அந்த மக்கள் சுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி அந்த சுஹதாக்களுக்கு விமோசனம் வேண்டி சகல கடைகைளும் மூடப்பட்டு, தொழில்களை நிறுத்தி பள்ளிவாயில்கள், வீடுகள், பொது இடங்கள், பாடசாலைகளில் புனித குர்ஆனை ஓதியும் அவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சமுகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான சம்பவம் என்றால் அது விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட கொலைகளையும், முஸ்லிம்களை அவர்களின் பூர்வீகங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்களையும் தாராளமாகவே குறிப்பிடலாம். குறிப்பாக வடகிழக்கில் தமிழ் மக்களைக் காப்பாத்துகின்றோம், தமிழர் உரிமைகளைப் பெறப்போகின்றோம் என்ற போர்வையில் அவர்கள் செய்த மிகமோசமான செயற்பாடுகளே மேற்குறிப்பிட்ட சம்பவங்களாகும்.

இந்த நாட்டில் சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக இருந்து அந்தச் சமுகங்களுடன் இன நல்லுறவுடன் வாழ்ந்த சமுகத்தினை எந்தவிதமான குற்றஞ்களும் இழைக்காத நிலையில் ஒருதலைப் பட்சமாக மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு வடகிழக்கு முஸ்லிம்களை பல்வேறுபட்ட துன்பியல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கி விட்டதுடன் தமிழ் மக்கள் மீதான நம்பிக்கை, புரிந்துணர்வு போன்ற விடயங்களில் விரிசல் நிலைகைளைத் தோற்று வித்திருந்தது.

ஓற்றுமையாக வாழ்ந்த மக்களை துரத்தி தமது ஆயுதக் கலாச்சாரத்தை காட்டி இந்த நாட்டின் உயிர்களையும், வளங்களையும் சூறையாடிய ஒரு அமைப்பாக விடுதலைப்புலிகள் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தாம் காட்டிய காட்டுத்தர்பார்களுக்கு இன்று நிலையான தண்டனை ஒன்றை இறைவன் கொடுத்தாலும் அவர்கள் மூலம் முஸ்லிம் மக்கள் பட்ட அவலங்களும், இழப்புக்களும் இன்றும் மறக்க முடியாத வடுக்கலாகவே இருந்து வருகின்றது. இவ்வாறான சம்பவங்கள் இனியும் எந்தக் காலத்திலும் இடம் பெறக் கூடாது என்பதே அனைவரதும் பிரார்த்தனைகளாகும்.

வடகிழக்கில் முஸ்லிம்கள் வாழக் கூடாதென்ற கர்வத்தின் காரணமாக வடகிழக்கிலிருந்து முஸ்லிம்களை முற்றுமுழுதாக துரத்தவேண்டும் என்ற வகையில் முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் மக்களின் உடமைகள் மீதும் காடைத்தனம் புரிந்தனர். இவ்வாறானதொரு அங்கம் வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் முற்றாக இனச் சுத்தி கரிப்புச் செய்த சம்பவமும், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்தாங்குடியில் இரவு வேவளையில் இரண்டு பள்ளவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை; கொhன்று குவித்தமை அதே வருடம் அதே மாதம் 11ஆம் திகதி நள்ளிரவு வேளையில் ஏறாவூரில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஏறாவூரில் நடந்த துயரச் சம்பவங்களையும் குறிப்பிடலாம்.

எதுவுமே அறியாதவர்களாக நிராயுதபானிகளாக மறுநாள் விடிகாலையை எதிர் பார்த்தவர்களாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவர்களை வயது, வேறுபாடின்றி, பால் வேறுபாடின்றி, பெண்கள், கற்பிணிகள் என்றும் பாராது தமது ஆயுதக் கருமித்தனத்தால் அந்த அப்பாவிகளை துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடரிகள் கொண்டு எவ்வித ஈவிரக்கமும் இன்றி தாக்கி அவர்கள் கதறக்கதற செய்த கொலையின் கொடூரத்தை எந்தவொரு மனிதனாலும் ஜீரணிக்கவோ, அல்லது கண்டு கொள்ளவோ முடியாது என்பதுடன் வரலாற்றில் எத்தனை ஜென்மங்கள் சென்றாலும் அதனை இலகுவில் மறந்து விடவும் முடியாது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கொடூரக் கொலையின் தாண்டவத்தால் சுமர் 121 அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை அவர்கள் பலியெடுத்து விட்ட சம்பவத்தால் அந்த உறவுகளை இழந்த ஏறாவூரின் ஒவ்வொரு குடும்பமும் அதன் அங்கத்தவர்களும் ஒவ்வொரு கனப்பொழுதிலுமாக அவர்களை நினைத்து நினைத்து மனம்வெதும்பிக் கொண்டு கண்ணீருடன் காலத்தைக் கழிக்க வேண்டிய பாராதூரமான வடுக்களை ஏற்படுத்தி விட்டனர்.

இவ்வாறு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துன்பியல் சம்பவத்தால் அதன் தாக்கத்தை அனுபவித்த அந்த மக்களுக்கு ஒவ்வொரு மாலைப் பொழுதும் வந்து விட்டால் அவர்களின் நெஞ்சுகளில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதுபோல் விடிகாலை வரையும் தமது தூக்கங்களை மண்ணாக்கி எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியால் அவர்கள் வாழ்ந்த காலங்களே 2009ஆம் ஆண்டு யுத்த வெற்றி வரை இருந்த நிலமைகளாகும். அக்காலத்தில் அவர்கள் நிம்மதியாக இரவுவேளைகளையும்சரி, பகல் வேளைகளையும்சரி கழிக்க முடியாத நிலைமைகளே காணப்பட்டன.

அது மட்டுமல்லாது தமது விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலைமைகள், கடலுக்குச் சென்று கடற்றொழில்களில் ஈடுபட முடியாத நிலைகள், வர்த்தக நிலையங்களை நடாத்த முடியாத நிலைமைகள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்களில் நிம்மதியாக கடமை புரிய முடியாத நிலைமைகள், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாத நிலைமைகள் எல்லாம் இடம் பெற்றதுடன் அந்த முஸ்லிம் சமுகம் பொருளாதார ரீதியாகவும் பின்னடைய வைத்து விட்டது. இன்று அவர்கள் அச்சத்துடன் சகலவற்றையும் இழந்து வறுமையில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றனர்.

இவ்வாறு முஸ்லிம் சமுகம் மீது மேற்கொள்ளப்பட்ட விடயங்களை உள்நாட்டில் உள்ள ஒரு சில ஊடகங்களைத் தவிர பல ஊடகங்கள் அந்தக் கொடூரக் கொலைகளின் செய்திகளை மூடி மறைத்ததுடன் சர்வதேச ரீதியாகவும் அது முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டதென்பதற்காக அவையும் அவ்வளவாக அக்கறை செலுத்த வில்லை என்றே கூறலாம்.

யுத்தம் என்ற போர்வையில் கிழக்கில் காத்தாங்குடியிலும், ஏறாவூரிலும் சூறையாடப்பட்ட சுமார் 210க்கும் மேற்பட்ட உயிர்களுக்கும், அவ்வப்போது இடம் பெற்ற கடத்தல்கள், கொலைகள் என மேலும் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளாலும், இதர இயக்கங்களாலும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாகவும் இதுவரை அவர்கள் தொடர்பான உரிய விசாரணைகளோ, அவர்களுக்கான உரிய நஷ்ட ஈடுகளோ கிடைக்க வில்லை. இது தொடர்பாக அந்த மக்கள் மீது பாரபட்சங்களே இடம் பெற்று வந்துள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இறந்தவர்களுக்கும் நீதி, நியாயங்கள் சரியான முறையில் கிடைக்க வேண்டும். இவர்கள் விடயத்தில் கடந்தகால அரசுகள் மாற்றான்தாய் மனப்பான்மையில் இருந்து வந்ததுடன் முஸ்லிம்களின் நலன்கள் விடயத்தில் துரோகங்களே செய்துள்ளன என்பது மட்டும் உறுதியான விடயமாகும்.

எனவே யுத்தத்தின் தாண்டவத்தினால் உயிர்களை இழந்தவர்களும், அவர்களை இழந்த துயரத்தில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நியாயங்கள் கிடைக்கவும் அவர்களுக்குரிய போதுமானளவு நஷ்ட ஈடுகளை கொடுக்கவும் அரசாங்கம் நியாயமான ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விடுதலைப் புலிகள் இயகத்திலிருந்து அந்தக் கொலைகளுக்கு முன்னின்றவர்கள் இன்றும் சுதந்திரமாக இருப்பதால் அவர்களை இனங்கண்டு அவர்கள் மீதும் விசாரணை செய்யது உரியவர்களுக்கு தகுந்த தண்டனைகளை வழங்கி மக்களின் கவலைகளைப் போக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தற்பொதைய தேசிய நல்லிணக்க கூட்டாட்சி அரசுக்கே உள்ளது.

Web Design by The Design Lanka