ஏறாவூர் பொதுச்சந்தையில் 1987ஆம் ஆண்டு காலத்தில் கடைகள் வைத்திருந்தோரை அடையாளம் காணல்! - Sri Lanka Muslim

ஏறாவூர் பொதுச்சந்தையில் 1987ஆம் ஆண்டு காலத்தில் கடைகள் வைத்திருந்தோரை அடையாளம் காணல்!

Contributors

ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச்சந்தையில் 1987ஆம் ஆண்டு காலத்தில் இறுதியாக கடைகளை வைத்திருந்த பொதுச்சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு நியமிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபைக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது தூர்ந்து சிதைவடைந்து போய்க்கிடக்கும் ஏறாவூர் நகரசபைக்குரிய பொதுச் சந்தையை நவீனமயப்படுத்தி மீளத் துவங்குவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இந்த சந்தை கிழக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இயங்காதுள்ளது.

இதனடிப்படையில், இந்த சந்தை கடைசியாக இயங்கியபோது, அங்கு கடைகள் வைத்திருந்த சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் முதற்கட்ட நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடைகளைக் வைத்திருந்தமைக்கான ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறு சந்தை வியாபாரிகள் 93பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இதுவரை 31வியாபாரிகளே,ஏறாவூர் நகர சபைக் குழுவினரிடம்  முன்னிலையாகியதாக அக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் 61பேர் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஏனையோர் அறிவிக்கப்பட்ட தினங்களில் முன்னிலையாகுவர் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

பொதுச் சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் விடயத்திற்கென நியமிக்கப்பட்ட ஏறாவூர் நகர சபைக் குழுவில் மாகாண சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் என். ஐங்கரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஹாறூன், வருமானப் பரிசோதகர் என். வாஹித், நகர சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். பாத்திமா ஸப்ரினா உட்பட நான்கு நகர சபை உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team