ஐக்கிய அரபு இராச்சியம்: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மீதான யுத்தம் - Sri Lanka Muslim

ஐக்கிய அரபு இராச்சியம்: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மீதான யுத்தம்

Contributors

(லதீப் பாரூக்)

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை அடித்து நொருக்குவதற்கான பந்தயத்தில் வளைகுடா நாடுகளுக்குத் தலைமைத்துவத்தை வழங்குகின்ற நாடு என்றால், அது ஐக்கிய அரபு இராச்சியம்தான்.

எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா நாடுகளின் மன்னர் குடும்பங்களின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களாகவே சகோதரத்துவ அமைப்பை அவர்கள் பார்க்கிறார்கள்.

ஷெய்குமார்களும், மன்னர்களும், அமீர்களும் பூரண அதிகாரத்தைக் கொண்டிருந்த மத்திய கால அரசாங்க முறைமையே வளைகுடா அரபு நாடுகளில் இன்றும் நிலவுகிறது. அங்கு வாழ்கின்ற மக்கள் மற்றும் ஏனைய சகல அம்சங்கள் மீதும் மன்னர்கள் பூரண அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணான இவ்வரசாங்க முறைமை காரணமாக, இஸ்லாம் குறித்தும், இஸ்லாமிய அடிப்படைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மீது ஆதரவு கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் குறித்தும் இவர்கள் அச்சம் கொண்டிருப்பதொன்றும் ஆச்சர்யமானதல்ல.

அதிகரித்து வருகின்ற கல்வி கற்றவர்கள் மத்தியிலான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் செல்வாக்கு, இம்முடியரசுகளின் அடிப்படைகளையே தகர்த்துவிடும் என்ற அச்சம் இவர்களிடம் உண்டு. பரந்து பட்ட ஊழல், விழுமியங்களில் காணப்படுகின்ற வீழ்ச்சி, நாட்டின் எண்ணெய் வளம் சூறையாடப்பட்டு வருகின்றமை போன்றவற்றோடு, முஸ்லிம் உலகை ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் ஆகிய சக்திகளோடும் இவர்கள் வெட்ககரமான முறையில் கூட்டிணைந்து செயற்பட்டு வருகிறார்கள்.

தமது மத்திய கால நடைமுறைகளைத்தான் இவர்கள் சட்டமாக்கி வைத்து, மந்தைகளைப் போல மக்கள் தமக்குக் கட்டுப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், எண்ணெய் வளத்தின் விளைவாக சிறந்த முறையில் கல்வியறிவைப் பெற்றிருக்கின்றவர்கள் பலர் இன்று விழிப்படைந்து விட்டார்கள். இதன் பிறகும் குரல் இழந்தவர்களாக வாழ்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.

வளைகுடா முழுவதிலும் மாற்றமொன்றின் தேவையும், அதிகாரமும், செல்வமும் மக்கள் மத்தியில் பங்கு வைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும், தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தும் வேகமாகப் பரவி வருகின்றது. இஸ்லாத்திற்கு முரணான வகையில் மது, இரவு விடுதிகள், வெளிப்படையான விபச்சாரம் என்பன இருந்து வருவதை இவர்கள் விரும்பவில்லை. நடைமுறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவுகின்ற அரசியல், பொருளாதார முறைமை காரணமாக பொருளாதார நலன்களை இவர்கள் அனுபவித்து வந்தாலும், மாற்றம் ஒன்றின் தேவை குறித்து அவர்களிடம் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

இவர்களில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் கவரப்பட்ட ஆண்களும் பெண்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஊழல் அற்றவர்களாக அவ்வமைப்பை இவர்கள் காண்பதோடு, தமது உரிமைகளையும், கண்ணியத்தையும் அவர்கள் மீள நிலைநிறுத்துவார்கள் எனவும் இவர்கள் நம்புகிறார்கள்.

அரச குடும்பமும், மக்களும் இரண்டு துருவங்களாகவே பல ஆண்டுகளாகவே  பிரிந்து நிற்கிறார்கள். அரசுகளுக்கு தமது சொந்த மக்கள் மீதே நம்பிக்கை இல்லாமல், தமது அதிகாரம், பதவிகள், சொகுசுகள், செல்வம் என்பவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மக்களை நசுக்குவதற்கும், தமது  செல்வங்களைப் பதுக்கி வைத்திருக்கின்ற  நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் என்பவற்றை நோக்கித் தமது பாதுகாப்பிற்கான கரங்களை நீட்டுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. இதே நோக்கத்திற்காக இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு, பலஸ்தீனியர்களைக் கைகழுவி விட்டார்கள்.

இவ்வரச குடும்பங்கள் முஸ்லிம்கள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட போதும், சவூதி அரச குடும்பம் தன்னை இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் கூறிக் கொண்ட போதிலும், எகிப்திய வரலாற்றில் முதற் தடவையாகத் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட டாக்டர் முஹம்மத் மூர்ஸி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய சக்திகளோடு கூட்டுச் சேரும் அளவுக்குத் அவர்கள் தரம் தாழ்ந்து போய் விட்டார்கள்.

மூர்ஸி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை சவூதி அரசாங்கம் முதலீடு செய்துள்ளதோடு, மக்களைப் படுகொலை செய்து வருகின்ற எகிப்து இராணுவத்திற்கு வெளிப்படையாக முட்டுக் கொடுத்தும் வருகின்றது. இதன் போது பாதிக்கப்படுகின்ற அப்பாவிகளை சவூதி மன்னர் ‘பயங்கரவாதிகள்’ என வர்ணித்துள்ளார். குவைதும், இராணுவப் புரட்சியைத் துவக்கி வைத்த ஐக்கிய அரபு இராச்சியமும் இந்த சதி வேலைக்கு தலா மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளன. வளைகுடா முழுவதும் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் தமது அரசாங்கத்தின் இச்சதிகார வேலையை விரும்புவதாக இல்லை.

இப்பின்னணியிலேயே ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்று வருகின்ற முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களை அடக்குகின்ற செயற்பாடுகள் நோக்கப்பட வேண்டும்.

இஸ்லாம் சார்பான சக்திகளை அடக்குவது ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. உதாரணமாக, 1980களில், இராச்சியத்தின் கல்வி அமைச்சர் சயீத் சல்மான் திடீரென்று பதவி நீக்கப்பட்டார். அவர் நவீன கல்வியை, பலமான மார்க்கப் பின்னணியில் வழங்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தவர் எனவும், எகிப்திய ஆசிரியர்கள் பலரை வேலைக்கு அமர்த்தினார் எனவும் விபரம் தெரிந்த சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். இதற்கான பரிசை அவர் வழங்க வேண்டியதாயிற்று.

இஸ்லாத்தைக் கருவறுப்பதற்கான நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து வந்தது.

எவ்வாறாயினும், 1990/91 காலப்பகுதியில் அமெரிக்க தலைமையில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு இடம்பெற்றதோடு, ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த இந்நாடுகள், இன்று நடைமுறையில் எல்லாத் தேவைகளுக்கும், அமெரிக்காவிலேயே தங்கி இருக்கின்றன.

தமது சொந்த மக்களை விட, நாட்டில் குடியேறி இருக்கின்ற முஸ்லிமல்லாத வெளிநாட்டவர்களையே தமது பாதுகாப்பு வளையங்களாக இந்நாடுகளின் முல்லாக்கள் கருதுகின்றனர். உதாரணமாக, ஆங்கில மொழி மூல ஊடகங்களில் வேலைக்குச் சேர்வதற்கு முஸ்லிம்களாக இருப்பது ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தகுதியின்மையாகும்.

அங்கு இஸ்லாத்தைக் கலந்துரையாடுவதற்கான சகல ஒன்று கூடல்களையும் அதிகாரிகள் ஒரேயடியாகத் தடைசெய்தனர். எனினும், முஸ்லிமல்லாதவர்கள் மீது அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. விளைவாக, இம்முஸ்லிம் நாட்டில், முஸ்லிம்கள் தம்மை முஸ்லிம் என அடையாளப்படுத்த அச்சப்படுகின்ற நிலையில் வாழ்க்கை நடாத்துகிறார்கள்.

பெப்ரவரி 16, 2013 அன்று, கடார் பெற்றோலியம் நிறுவனத்தின், மருத்துவ சேவை உதவி முகாமையாளர், தனது சொந்த நாடான கட்டாருக்குப் பயணிக்கும் வழியில் டுபாயில் காணாமல் போனார். பிறகு அவர் அபூதாபியில், எங்கோ ஓர் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அறியப்படாததோர் இடத்தில் மாதத்திற்கு ஒரு தடவை, கண்கள் கட்டப்பட்ட நிலையில் தனது குடும்பத்தை சந்திக்க அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சந்திப்புகளிலும் எந்தவிதமான தனியாள் சுதந்திரமும் இருக்கவில்லை எனவும், பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் தம்மைச் சூழ இருந்ததாகவும், அவரது மகன் ஹஸ்ஸான் குற்றம் சுமத்தி இருந்தார். தனது தந்தை கடும்போக்குவாதி ஒருவராகவோ, எவரையும் பதவி கவிழ்ப்பதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவராகவோ இருக்கவில்லை என்கிறார் ஹஸ்ஸான்.

ஐக்கிய அரபு இராச்சிய ஷெய்கின் மைத்துனர் ஒருவர் உள்ளடங்கலாக, அறுபத்தொன்பது பேர் இவ்விதம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் கருத்தியல் தொடர்புகளை வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அல்-இஸ்லாஹ் அமைப்போடு இவர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு அறிக்கையின் படி, டுபாயைத் தளமாகக் கொண்ட எகிப்திய ஊடகவியலாளர் அனஸ் பௌதா, சகோதரத்துவ அமைப்போடு சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரகசிய சிறை ஒன்றில் ஒரு மாதமளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பிறகு நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது கட்டாரில் வசித்து வருகிறார்.

“எக்காரணமும் இல்லாமல் ஒரு வித நரக வேதனையை நான் அனுபவித்தேன்” என்று கூறும் பௌதா, தான் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தீவிர ஆதாரவாளர் ஒருவர் என்று கூறப்படுகின்ற குற்றச்சாட்டை மறுக்கிறார். இத்தகைய நிலை தனக்கு மட்டும் ஏற்படவில்லை கூறும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“பல தசாப்தங்களாக டுபாயில் பணி புரிந்து வந்த, சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவரான தனது தந்தை நாட்டில் இருந்து வெளியேறுவதை  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் தடைசெய்ததாகவும், பிறகு அவரை அவர்கள் கைது செய்ததாகவும் கெய்ரோவில் வசிக்கின்ற சாரா சொன்போல் கூறினார். ‘சுமார் பத்துப் பேர் அடங்கிய கும்பலொன்று வந்து அவரை அழைத்துச் சென்றது. நாம் பொலிஸாரைத் தொடர்பு கொண்டோம். இது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்றும், தேசிய பாதுகாப்போடு தொடர்பான விடயமாக இது இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்’ எனவும் அவர் குறிப்பிட்டார்’.

உண்மையில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் தேசத்தின் எதிரிகளாக சித்தறிக்கப்பட்டு, ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்படுகின்றனர். தமக்கு எதிர்நிலைப்பாடுகளை கொண்டிருப்பவர்களை அழித்தொழிப்பதற்கு,முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைப் பூச்சாண்டியாக வளைகுடா அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்று வருகின்ற நிகழ்வுகள் கவலை தருவதாகக் குறிப்பிடுகின்றார் குவைத் இஸ்லாமிய அரசியல் யாப்பு இயக்கத்தைச் சேர்ந்த  முஹம்மத் அல் தல்லால். விரைவில் இந்நிலை ஒரு முடிவுக்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் பின்வருமாறு கவலை தெரிவித்தார்: “ எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர், நாம் வறுமையில் வாடியதையும், உலகில் எவருமே எம்மைக் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையையும் நாம் மறந்து விட்டோம். இந்த சகல வசதிகளுமே அல்லாஹ் வழங்கிய இந்த எண்ணெய் வளத்தின் மூலமாகத்தான் உருவாகியுள்ளது. ஆனால், இவ்வசதிகளை வழங்கிய படைப்பாளனை நாம் மறந்து விட்டோம். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கி இருப்பவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அவனது கட்டளையையும் புறக்கணித்து விட்டோம். தமக்குள் கைகளைக் கோர்த்துக் கொண்டு இவ்விதம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிப்பதற்காக புறப்பட்டவர்களோடு இணைந்து அப்பாவிகளை அடக்கி ஒடுக்க நினைப்பது இறைவனுக்கெதிராகவே பிரகடனப்படுத்தப்படுகின்ற யுத்தமே அல்லாமல், வேறொன்றுமில்லை”.

முஸ்லிம் நாடுகளாகத் தம்மைக் கூறிக் கொள்கின்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸினதும், ஏனைய வளைகுடா நாடுகளினதும் நிலைதான் இது.

ஸியோனிஸ்டுகளும், தமது ஆயுதக் கம்பனிகளும், மற்றும் வியாபார ஜாம்பவான்களும் இணைந்து முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக ஒரு மூர்க்கமான யுத்தத்தைத் தொடுத்துள்ள நிலையிலும், ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு, பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற வித்தியாசமில்லாமல் கொன்று குவிக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழலிலும்தான் வளைகுடா நாடுகளில் இக்கொடுமைகள் நடந்தேறி வருகின்றன.-TC

Web Design by Srilanka Muslims Web Team