ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலிருந்து விலகுவதாக நான் வாக்குறுதியளிக்கவில்லை - ரணில் - Sri Lanka Muslim

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலிருந்து விலகுவதாக நான் வாக்குறுதியளிக்கவில்லை – ரணில்

Contributors

(Nf) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் விலகுவதாக மகா சங்கத்தினரிடம் வாக்குறுதியளிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வார இறுதி பத்திரிகை வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த  15 ஆம் திகதி  தம்முடனான கலந்துரையாடலில் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அலோசகர் கிராம்பே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேரர்கள் அறிவித்தனர்.

ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே தேரர்கள் இந்த விடயத்தை தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அத்தகைய உறுதிமொழியொன்றை தாம் வழங்கவில்லை என குறித்த பத்திகைக்கு வழங்கிய நேர்காணலில் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தமது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக மீண்டுமொரு தடவை மகாசங்கத்தினரை ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தம்மால் செயற்குழுவின் ஐந்து பதவிகளை மாத்திரமே நியமிக்க முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறித்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதைய தவிசாளருக்கு வழங்கப்பட்டபோதிலும் அது செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே செயற்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தலைமைத்துவத்தில் இருந்து விலகுவது உள்ளிட்ட ஐக்கிய பிக்குகள் முன்னணியின் எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த கால அவகாசம் நிறைவுபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team